Paristamil Navigation Paristamil advert login

மறைந்து இருக்கும் அட்லாண்டிஸ் தீவின் ரகசியங்கள்!

மறைந்து இருக்கும் அட்லாண்டிஸ் தீவின் ரகசியங்கள்!

26 பங்குனி 2022 சனி 11:51 | பார்வைகள் : 10848


பொதுவாகப் புராணம் பற்றிய கதைகளைக் கேட்கவோ அல்லது அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ மக்கள் மத்தியில் இன்றும் ஒரு எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஆதிகாலம் முதல் நிகழ் காலம் வரை, மக்கள் கதை கேட்டும், கதை சொல்லியும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலகம் கதைகளால் ஆனது. இந்தப் பூமியை கடவுள் படைத்தார் என்பதும் ஒரு கதைதானே. நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நம் தாத்தாவோ பாட்டியோ நமக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.  நாமும் அதைச் சலிக்காமல் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு ரசித்து இருப்பதுண்டு. அதுமட்டும் இல்லாமல் ராமாயணம், மஹாபாரதம் போன்ற பல புராணக் கதைகளைப் பற்றியும், கட்டுக் கதைகளைப் பற்றியும் பல திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. 

 
இத்தகைய திரைப்படங்களை வரவேற்கும் விதமாக பல படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு பாகுபலி, சயீரே நரசிம்ம ரெட்டி, பஜிரோ மஸ்தானி போன்ற திரைப்படங்களை மக்கள்  ஆர்வத்தோடு திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்து வெற்றி பெறவும் செய்திருக்கிறார்கள்.  அதுமட்டும் இல்லாமல் அழிந்து போன நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும், ஹரப்பா முகஞ்சதரோ போன்ற  நாகரிகங்களைப் பற்றியும், கடலுக்குள் மூழ்கிய குமரிகண்டத்தைப்பற்றியும், பல நகரங்களைப் பற்றியும், ராமர் பாலத்தைப் பற்றியும் இன்றும்  நம் மக்கள் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள்.  நம்மைப் போலவே உலக மக்கள் மத்தியில்  2,500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே அலைகளுக்கு அடியில் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற தீவான அட்லாண்டிஸை பற்றிப் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்த புகழ் பெற்ற அட்லாண்டிஸ் தீவை போஸிடான் கடவுள் அவர் மனைவிக்காகப் படைத்தார். பிறகு அவர் தனது மகன் அட்லான்டிஸ்க்கு  ராஜாவாக முடி சூட்டி, அவர் பெயரையே இந்த தீவுக்கும்  இதைச் சுற்றி உள்ள  கடலுக்கும்  பெயரிட்டார். பின்னர் சோலோன் இன்றொரு அரசர் பிறப்பதற்கு சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு, அட்லாண்டிசின் சக்திவாய்ந்த இளவரசர்கள் மத்தியத் தரைக் கடலின் பல நிலங்களைக் கைப்பற்றி ஆச்சி செய்தார்கள். அவர்கள் இறுதியாக ஏதெனியர்கள் மற்றும் பிந்தைய கூட்டாளிகளால் தோற்கடிக்கப்பட்டனர் என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி.!
 
அட்லாண்டிஸ் என்று அழைக்கப்படும் இந்த தீவானது பல அழகான இயற்கை வளங்களால் நிறைந்தது. இராணுவ வீரர்கள், ஆயுதங்கள், பிரம்மாண்ட கட்டிடங்கள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல்,  இந்த தீவில் விவசாயம் செய்யச் செழுமையான மண், தூய்மையான  நீரூற்றுகள் , பசுமையான  தாவரங்கள், வனங்கள்  மற்றும் விலங்குகள், தங்கம் பதிக்கப்பட்ட கட்டிடங்கள் எனப் பல பொக்கிஷங்களை உடையது எனவும் கூறுகின்றனர். பல  துறைகளில் பிற நாடுகளை விட மேலோங்கி  இருந்து இருக்கிறது என மக்கள் மத்தில் இன்றும் ஒரு ஆழ்ந்த எண்ணம் இந்த தீவின் மீது இருந்துகொண்டுதான் இருக்கிறது.  பிறகு நாம் இந்த தீவை எப்போதாவது கண்டுபிடித்து இருக்கிறோமா அல்ல ; இந்த தீவு இருப்பதைப் பற்றிய சான்று ஏதேனும் இருக்கிறதா ? இதை நம்பலாமா ? வேண்டாமா ? எனப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தது.  
 
கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும், கி.மு 360 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை. ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்தின் ஆபத்துகள் பற்றிய ஒரு புள்ளியை விவரிக்க, அட்லாண்டிஸ்  தீவைக்  கண்டுபிடித்ததாகவும் அதைப் பற்றிய சில விவரங்களைத்  தனது புகழ்பெற்ற படைப்பான ‘தி ரிபப்ளிக்கில்’, தத்துவஞானி பிளேட்டோ குறிப்பிட்டு உள்ளார். ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியின் தத்துவப் பேராசிரியரான ஜில் ஜென்ட்ஸ்லர் இதுப்பற்றிக்கூறும் போது,  ‘அட்லாண்டிஸ் தீவு கட்டுக்கதை இல்லை. மாறாக, இது பிளாட்டோவின் காலத்திற்கு முன்பே ஏதென்ஸின் சிறந்த பதிப்பிற்கான ஒரு படமாக இருந்தது. இந்த பழங்கால ஏதென்ஸ், "பிளேட்டோவின் சிறந்த நிலை பற்றிய கருத்துக்கள் மிகவும் ஒற்றிப்போகிறது " என்கிறார். இந்த ஆராய்ச்சியில் மற்றொரு நபர் உலகத்தையே திரும்பிப் பார்க்கும்வகையில் ஒரு கருத்தைச் சொன்னார். அவர் டோனல்லி.
 
1870 ஆம் ஆண்டு  ஒரு அமெச்சூர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோமரின் ‘தி இலியாட்டைப்’ பயன்படுத்திப் புகழ்பெற்ற நகரமான ட்ராய்-ஐ கண்டுபிடித்தார். நீண்ட காலமாகக்  கற்பனை என்று கருதப்பட்ட ட்ராய், உண்மையானது என்றால், அட்லாண்டிஸும் உண்மையானது என்ற கருத்தால் டோனெல்லி ஈர்க்கப்பட்டார். இதையடுத்து, 1882 ஆம் ஆண்டு  முன்னாள் அமெரிக்க காங்கிரசார் இக்னேஷியஸ் டோனெல்லி வெளியிட்ட ‘அட்லாண்டிஸ்: தி அன்டெடிலூவியன் வேர்ல்ட் ’ என்ற  புத்தகத்தில் 13 யூகங்களை வகுத்து, அட்லாண்டிஸ் உண்மையிலேயே இருந்து இருக்கிறது என்றும்,  அனைத்து நாகரிகமும் அங்கேதான் தோன்றியது என்ற கருத்தையும் மையப்படுத்தினார். பின்னர்  பிளாட்டோவின் புத்தகத்தில்  உள்ள அனைத்து துப்புகளையும் ஆராய்ந்தால் அட்லாண்டிஸைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் டோனெல்லி நம்பினார். டோனெல்லியின் கூற்றுப்படி, அட்லாண்டிஸ் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பழங்கால நாகரிகங்களின் மூல ஆதாரமாக இருந்து இருக்கலாம் என்றும் டோனெல்லி யூகித்தார்.
 
சரி, இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்தாலும் அட்லாண்டிஸ் இருக்குமிடம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் யாராலும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இன்றும் அட்லாண்டிஸ் இந்த இடத்தில்தான் இருக்கிறது என்பதை கூறிவருகின்றனர். குறிப்பாக, பிளாட்டோவின் நூல்களில், அட்லாண்டிஸ் ஆசியா கண்டத்தை விட மிகப் பெரியது என்று(பிளேட்டோவின் காலத்தில், இது நவீனக்கால வட ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியின் பாதிக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும்) கூறப்பட்டுள்ளது. 
 
இதுபுறமிருக்க நவீன கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த அட்லாண்டிஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அதன்விளைவாக, I960 ஆம் ஆண்டு, புவியியல், வானிலை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  அகழ்வாய்வு மூலம் அட்லாண்டிஸ் அதன் வடிவத்தில் இல்லாவிட்டாலும், தீவு இருந்ததற்கான தடயம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பல விஞ்ஞானிகள் இதில் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இப்போது அட்லாண்டிஸ் உண்மையில் கிரீட் தீவுக்கு அருகே மத்தியதரைக்கடலில் அமைந்துள்ள தேரா தீவு என்று நினைப்பதாக பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இந்த தேரா பகுதி இன்றைய சாண்டோரினி தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேரா தீவுக்கும் பல முன்கதைகள் உண்டு. அதாவது, கிமு 1600 இல், தேராவின் எரிமலை வெடித்து, தீவின் ஒரு பகுதி கடலில் மூழ்கியதாக புவியியலாளர்கள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். அது மட்டுமில்லாமல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தேரா தீவை ஆய்வு செய்து, எரிமலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு பெரிய மினோவான் நகரத்தின் எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நகரத்தில் ஒரு அரண்மனை மற்றும் நீர்வழிகள் உள்ளன. அவை பிளேட்டோ விவரித்த பொதுத் திட்டத்தோடு பொருந்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எந்தப் பண்பாட்டால் கவரப்பட்டாலும், அட்லாண்டிஸின் கட்டுக்கதை ஒரு பரிபூரண மனித சமுதாயம் சாத்தியம் என்ற எண்ணத்தில் ஆறுதல் அளிக்கிறது. இது போன்ற ஒரு முழுமையான சமுதாயத்தை அடைவது எதிர்காலத்தில் மீண்டும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. எது இருந்தாலும் அட்லாண்டிஸ் இப்போது மர்மக் கதைதானே.!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்