மம்மியின் வயிற்றில் சிதையாத ‘கரு’ - ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
27 தை 2022 வியாழன் 11:19 | பார்வைகள் : 10580
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம். அங்கு பிரமிடுகளில், பூமியின் என மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு உள்ளன.
எகிப்தில், ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முன்னால், புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின.
இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆன நிலை எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.
இந்த மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அக்கால மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தது, வாழ்க்கை முறை எப்படி இருந்தது என பல விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக மம்மிகள் 3000-5000 வருடம் பழமையானதாக இருக்கும். இந்நிலையில், எகிப்தின் 2000 ஆண்டுகள் பழமையான மம்மியின் (Egyptian Mummy) வயிற்றில் பாதுகாப்பாக உள்ள கரு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இந்த சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்குப் பிறகு, பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. ஊறுகாய் எப்படி கெடாமல் பாதுகாப்பாக வைக்கப்படுகிறதோ, அதே போல கருவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாக இதுவரை கிடைத்த தகவல்களில் தெரிய வந்துள்ளது. இது எகிப்தின் முதல் கர்ப்பிணி மம்மி என்று நம்பப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த மம்மி பெண்ணின் வயது சுமார் 30 வயது இருக்க வேண்டும் என்றும், கிமு முதல் நூற்றாண்டில் அவர் இறந்திருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த மம்மிக்கு 'மர்ம பெண்மணி' என்று பெயரிட்டுள்ளனர். கருவைக் கண்டறிய மம்மிக்கு CT ஸ்கேன் செய்ததில் ஆச்சரியத் தகவல் வெளி வந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் பல கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகிறார்கள். இந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முக்கிய ஆராய்ச்சியாளரான டாக்டர் வோஜ்சீஜ் எஸ்மண்ட் மற்றும் போலந்து அறிவியல் அகாடமி இது குறித்து கூறுகையில், எகிப்து அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இதுவரை எந்த கர்ப்பிணி மம்மியையும் கண்டுபிடிக்கவில்லை, இதுவே முதல் கர்ப்பிணி மம்மி என கூறினர். மம்மியின் உடலில் இருந்து மற்ற உறுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட இந்த கரு ஏன் மம்மியின் உடலில் விட்டு வைக்கப்பட்டது என்பதை இதுவரை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஆய்வுக்குழு கூறுகிறது.
இறந்த உடல்களை மம்மியாக மாற்றுவதற்கு அதிக அமிலமும் மிகக் குறைந்த ஆக்ஸிஜனும் தேவை. இந்த மம்மியின் வயிற்றில் காணப்படும் கரு இந்த செயல்முறையின் கீழ் இயற்கையாகவே பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இறந்த பிறகு, சடலத்தில் உள்ள கரு உட்பட சடலங்களில் உள்ள இரத்த pH கணிசமாகக் குறைந்து அமிலமாகிறது, அம்மோனியா மற்றும் ஃபார்மிக் அமிலத்தின் செறிவு காலப்போக்கில் அதிகரிக்கிறது. எனவே பண்டைய எகிப்தில் மம்மிகள் இயற்கையாக பாதுகாக்கப்பட்டது போல், இந்த மம்மியும் அதன் கருவும் பதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.