Paristamil Navigation Paristamil advert login

எகிப்து அரசரின் மம்மியில் வித்தியாசமான தங்கக் கச்சை! 30 தாயத்துக்கள்

எகிப்து அரசரின் மம்மியில் வித்தியாசமான தங்கக் கச்சை! 30 தாயத்துக்கள்

10 தை 2022 திங்கள் 15:51 | பார்வைகள் : 10231


1881 ஆம் ஆண்டு அரசர், முதலாம் அமென்கோதேப்-இன்  (pharaoh Amenhotep I) மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு முதன்முறையாக தற்போது அந்த மம்மி டிஜிட்டல் முறையில் முழுமையாக அவிழ்க்கப்பட்டது.

 
எகிப்து நாட்டின் 3,500 ஆண்டுகள் பழமையான மம்மி, முதல் முறையாக முழுமையாக  டிஜிட்டல் முறையில் பிரிக்கப்பட்டது... இந்த வளர்ச்சி எகிப்திய அரசரின் வாழ்க்கையைப் பற்றிய புதிர்கள் தொடர்பான விளக்கத்தை ஓரளவு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் கதிரியக்கவியல் (radiologist) பேராசிரியரும், எகிப்திய மம்மி திட்டத்தின் கதிரியக்க நிபுணருமான டாக்டர் சஹர் சலீம் இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டிஜிட்டல் முறையில் மம்மியை அவிழ்த்தோம். முகமூடி, கட்டுகள் மற்றும் மம்மி என ஒன்றன் பின் ஒன்றாக அதன் அடுக்குகளை கழற்றியது பல புதிய தகவல்களை தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்தது. இது, எகிப்திய அரசரின் மம்மி தொடர்பான விரிவான தகவல்களைக் கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 
3,500 ஆண்டுகள் பழமையான மம்மி உடையக்கூடியதாக இருந்ததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதன் எச்சங்களை தாங்களாகவே அவிழ்க்க முயற்சிக்கவில்லை.  மரத்தாலான முகமூடி மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மம்மி இது.
 
இதுவரை கிடைத்த மம்மிகளில் ஒரே எகிப்திய அரச மம்மி இதுதான் என்று தெரிகிறது, இது நீண்ட காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஆய்வுக்காக இதுவரை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஞ்ஞானிகள் மம்மியை அவிழ்த்து ஆய்வு செய்ய முப்பரிமாண கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராஃபி (three-dimensional computerised tomography) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினர்.
 
அரசர் முதலாம் அமென்கோதேப் இறக்கும் போது, ​​அவரது வயது 35 ஆக இருக்கலாம் என்பதும், அவருடைய உயரம் 169 சென்டிமீட்டர், அதாவது 5.5 அடி உயரம் என்றும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. சுருண்ட முடி, சிறிய குறுகிய மூக்கு மற்றும் குறுகிய கன்னம் கொண்ட அரசர் முதலாம் அமென்கோதெப் என்று எகிப்திய மம்மி திட்டத்தின் கதிரியக்க நிபுணருமான டாக்டர் சஹர் சலீம் கூறினார்.
 
அரசரின் உடலில் சுமார் 30 தாயத்துக்கள் மற்றும் ஒரு வித்தியாசமான தங்கக் கச்சையும் இருந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் அரசர் முதலாம் அமென்கோதேப் எப்படி மரணமடைந்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. 'ஃபிரான்டியர்ஸ் இன் மெடிசின்' இதழில், இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்