ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை
18 வைகாசி 2023 வியாழன் 09:08 | பார்வைகள் : 8735
ஜெமி மெக்டொனால்ட் முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், உலக சாதனைகளை ஏற்படுத்துகின்றனர்.
அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜெமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்துள்ளார்.
முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியாசென்று தாஜ் மஹாலை பார்த்தார்.
ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.
இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரயில்கள், 16 டாக்சிகள் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.
மெக்டொனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்தது. சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் நோக்கம் ஆகும்.