24,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சச யானை எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்புகள்!
14 புரட்டாசி 2020 திங்கள் 14:27 | பார்வைகள் : 9350
மெக்சிகோவில் விமான நிலையம் கட்டுவதற்குக் குழிதோண்டிய போது ஏராளமான, பனியுகத்தைச் சேர்ந்த மம்மூத் யானைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன யானைகளின் உறவினர்களான மம்மூத்களின் புதைபடிவ எலும்புக்கூடுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பூமிப் பரப்பு முழுவதும் பனிப் படலம் போர்த்தியிருந்த பனியுகத்தில் வாழ்ந்த பிரமாண்ட விலங்கு, மம்மூத் யானைகள். உடல் முழுவதும் வளர்ந்த நீண்ட ரோமங்கள், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடன் கம்பீரமாக வாழ்ந்த மம்மூத் யானைகள் ஐரோப்பிய கண்டம் மற்றும் வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருந்தது. காலநிலை மாற்றத்தால் அழிந்ததாகக் கருதப்படும் மம்மூத் யானைகளின் எலும்புக் கூடுகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மற்றும் சைபீரியாவில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெக்சிகோ விமான நிலையக் கட்டுமானத்துக்காக நிலத்தைத் தோண்டியபோது மம்மூத் யானைகளின் எலும்புகூடுகள் கிடைத்தன.
அதன்பிறகு, அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்தப் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இடங்களைத் தோண்டியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மம்மூத் யானைகளின் எலும்புகூடுகள் கிடைத்துள்ளன. இதனால் மெக்சிகோ விமான நிலையம் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய மெக்சிகோ தொல்லியல் நிபுணரான, ருபேன் மேன்சனில்லா, “புல்வெளிகளும் ஏரிகளும் நிறைந்திருந்த இந்தப் பகுதிக்கு 24,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அளவிலான மம்மூத் மந்தைகள் இடம்பெயர்ந்து வந்தன என்றும், ஆனால், பெரும்பாலான மம்மூத்கள் ஏரியின் சேறு சகதிகளில் சிக்கி இறப்பைத் தழுவின என்றும் தெரிவித்தார்.
மேலும், 10000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் 20 டன் எடை கொண்ட மம்மூத் யானைகளை மிகச்சிறிய கூர்மையான அம்புகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு கொன்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றார்.
பூமிப் பரப்பில் அமெரிக்கா மற்றும் சைபீரியாவுக்கு அடுத்து மெக்சிகோவில் தான் அதிகளவு மம்மூத் எலும்புகூடுகள் கிடைத்துள்ளதாகவும், இங்குக் கிடைக்கும் மம்மூத் எலும்புக் கூடுகளைக்கொண்டு விமான நிலைய முனையத்தில் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.