Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு!

ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு!

24 ஆவணி 2020 திங்கள் 14:18 | பார்வைகள் : 9863


ஆஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு வியப்பளிக்கும் வகையில், சுமார் 2,50,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்கக்கட்டிகள் கிடைத்துள்ளன.
 
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள தங்க சுரங்க நகரமான தர்னகுல்லா அருகே ப்ரெண்ட் ஷானன் மற்றும் ஈதன் வெஸ்ட் ஆகியோர் இந்த தங்கக்கட்டிகளை கண்டுபிடித்தனர்.
 
வியாழக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட்ட 'ஆஸி கோல்ட் ஹண்டர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்து காட்டப்பட்டது.
 
இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சில இடங்களில் மண்ணை தோண்டி, அங்கு ஆழத்தில் தங்கம் இருக்கிறதா என்பதை உலோகத்தை கண்டறியும் கருவியை கொண்டு ஆய்ந்தனர்.
 
தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஈதன் வெஸ்ட், "இவை நிச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஒரே நாளில் இரண்டு பெரிய தங்கக்கட்டிகளை கண்டறிந்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
 
ஈதன் வெஸ்ட்டின் தந்தையோடு சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தங்க வேட்டையில், ஒரு நாளுக்குள்ளாகவே மொத்தம் சுமார் 3.5 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக்கட்டிகளை அவர்கள் கண்டறிந்ததாக இதுதொடர்பாக டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"இதற்கு முன்னர் யாருமே தோண்டாத இடத்தை தெரிவு செய்திருந்தோம். அங்குதான் எங்களுக்கு இந்த தங்கக்கட்டிகள் கிடைத்தன. நான் சுமார் நான்காண்டுகளாக தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கிட்டத்தட்ட 'ஆயிரக்கணக்கான தங்கக்கட்டிகளை' கண்டறிந்திருப்பேன்" என்று ஈதன் வெஸ்ட் கூறுகிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்