எண்ணெய்க் கசிவு பற்றி தெரிந்துகொள்வோம்!
13 ஆவணி 2020 வியாழன் 17:11 | பார்வைகள் : 9805
அண்மையில், மொரீஷியஸ் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால், அங்கு சுற்றுச்சூழல் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4,000 டன் எண்ணெய் கொண்ட கப்பல், மொரீஷியஸின் கடல் எல்லையில் உள்ள பவளப் பாறைகள் மீது மோதியது.
அதை அடுத்து, அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் கசியத் தொடங்கியது.
எண்ணெய்க் கசிவுச் சம்பவங்கள் நம் சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிப்பவை.
இருப்பினும், சிறிய அளவிலான எண்ணெய்க் கசிவுச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படத் தான் செய்கின்றன.
எண்ணெய்க் கசிவு என்றால் என்ன?
கச்சா, கேஸலின் ஆகிய எண்ணெய்கள் கட்டுப்பாடின்றிக் கடலில் கசிவது.
எவ்வளவு பெரிய கசிவு என்பதைப் பொருத்து, அதைச் சுத்தம் செய்ய சில நாள்கள் முதல் பல ஆண்டுகள் வரை ஆகலாம்.
எண்ணெய்க் கசிவு எப்படி ஏற்படுகிறது?
எண்ணெய்க் கப்பல்கள், குழாய்கள் எண்ணெய் சுத்திகரிப்பு இடங்கள் ஆகியவற்றில் விபத்து நேரும்போது...
இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது...
தீவிரவாதிகளோ, போர் புரியும் நாடுகளோ வேண்டுமென்றே எண்ணெயை வெளியிடும்போது...
சட்டவிரோதமாக எண்ணெயை வெளியாக்கும் போது...
சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு?
விலங்குகளின் மென்மயிர், பறவைகளின் இறகுகள் ஆகியவற்றில் எண்ணெய் ஒட்டிக்கொள்வதால், அவற்றின் வெப்பநிலை குறைந்து, அவை இறந்துபோகும் நிலை ஏற்படுகிறது.
கடல் வாழ் விலங்குகள் எண்ணெயை உட்கொள்வதால், அவற்றின் உடம்பில் நச்சுத்தன்மை உருவாகும்.
எண்ணெயால் பாதிக்கப்பட்ட பறவைகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள் ஆகியவை இடும் முட்டைகளின் ஓடுகள் மெலிதாகும்.
உலகில் ஆக நீண்ட காலமாகத் தொடரும் எண்ணெய்க் கசிவு...
மெக்சிக்கோ வளைகுடாவில் 2004ஆம் ஆண்டு, Taylor Energy நிறுவனத்தின் எண்ணெய் தளம் சூறாவளியால் சேதமடைந்தது.
அதிலிருந்து அங்கு ஒரு நாளைக்கு 380 முதல் 4,500 கேலன் எண்ணெய் கசிவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுமார் 16 ஆண்டுகளாக அங்கு மில்லியன்கணக்கான பீப்பாய் எண்ணெய் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
2010ஆம் ஆண்டில், மற்றொரு எண்ணெய்க் கசிவை விசாரணை செய்யும்போது, இந்த எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
எண்ணெய்க் கசிவைத் தடுக்க அமெரிக்க அரசாங்கம் முயற்சி எடுத்துவருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதன் தொடர்பில் தொடுத்துள்ள வழக்கு இழுபறியில் உள்ளது.