பிரபஞ்சம் உருவானதன் ரகசியம் வெளிப்படுமா?
17 ஆடி 2020 வெள்ளி 08:17 | பார்வைகள் : 9840
உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
'இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது' எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து - பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. விஞ்ஞானிகள் இங்குள்ள, வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவியில் நேர் மின் தன்மைகொண்ட புரோட்டான் துகள்களை அதிவேகத்தில் மோதவைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்தத் துகள் மோதல் கருவி 2009 - 2013 வரையிலும் பிறகு 2015 - 2018 வரையிலும் செயல்பட்ட போது கிடைத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்த போதுதான் ’டெட்ரா குவார்க்' எனப்படும் புதிய துகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் மூலம், பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் எது?’ எனும் கேள்விக்கான பதிலைத் தேடிச் செல்வதில் விஞ்ஞானிகள் ஒரு படி முன்னேறியுள்ளனர். இந்தத் துகளை பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்!
நாம் கண்களால் பார்க்கும் பொருள்கள் அனைத்தும் கார்பன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனது. அந்தத் தனிமங்களை மேலும் பகுத்தாய்ந்த போது, அணுக்களால் ஆனது என்பது தெரிய வந்தது. அந்த அணுக்களை மேலும் பகுத்துப் பார்த்தால், எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்களைப் பகுத்துபோது ’ஹெட்ரான்கள்’ எனப்படும் சிறிய துகள்களால் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹெட்ரான்களை மேலும் பகுத்தால் குவார்க் எனப்படும் நுண்ணிய துகள்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது.
இதுவரை நடந்த ஆய்வு அடிப்படையில், இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து மெசான்வகை ஹெட்ரான்களும்; மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பேர்யான் வகை ஹெட்ரான்கள் மட்டுமே இருப்பது உறுதிபடுத்தப்பட்டன. ஆனால், கணக்கீடு அடிப்படையில் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான்கள் துகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.
இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.