Paristamil Navigation Paristamil advert login

2,300 ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டுபிடிப்பு!

25 ஆனி 2020 வியாழன் 14:20 | பார்வைகள் : 9124


ஈரோடு மாவட்டம், நொய்யல் ஆற்றங்கரையில் சென்னிமலை அருகே தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதையுண்ட ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன்  பண்டைக்கால தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் மற்றொரு கண்டுபிடிப்பு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
தமிழ்நாடு, பெங்களூரு, புதுவையை  சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இந்த ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சங்க காலப் பத்துப்பாட்டில் கொடுமணம் என்று கூறப்படும் கொடுமணலில் 2500 - ஆண்டுக்கு  முற்பட்ட முதுமக்கள் தாழி, ரோம நாணயங்கள், கல் ஆயுதங்கள் உள்ளிட்ட தொல்பொருள்கள்  கண்டுபிடிக்கப்பட்டன. அப்போதிலிருந்தே நொய்யல் நதிக்கரை நாகரிகம் வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
 
கொடுமணலைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றின் கரைகளில் அக்காழ்வாராய்ச்சியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகச் சென்னி மலை அருகே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் தற்போது புதிய ஈமக்காடு வெளிப்பட்டிருக்கிறது. இந்த ஈமக்காடு 2300 - களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும், இந்த அகழ்வாய்வில் பல்வேறு விதமான பானைகள், தட்டுகள், முத்துக்கள், படுக்கைகள், கல் ஆயுதங்கள், எழுத்துப்படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
"இங்குக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பொருள்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் பொருள்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்துகளையம்  பார்க்க முடிகிறது" என்று அகழ்வாய்வு மேற்கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
 
சங்க காலத்திலும், அதற்கு முற்பட்ட காலத்திலும் சென்னிமலைப்  பகுதியில்  வணிகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. அதனால் தான் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில் ரோமானிய நாணயங்கள், மேலை நாட்டுக் கலைப் பொருள்கள் ஆகியவை அதிகளவில் கிடைக்கின்றன.
 
சங்க காலத்தில் புகழ் பெற்றிருந்த சேர நாட்டின் தலைநகரான கருவூர் வஞ்சி மாநகரத்தை (கரூர்) மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் முக்கிய பெருவழியில் கொடுமணல் உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருந்தன. ரோம், அரேபியா, கிரேக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த வெளிநாட்டு வணிகர்கள் கருவூருடன் முக்கிய வணிகத் தொடர்பிலிருந்தனர்  சென்னி மலை உள்ளிட்ட பகுதிகளில் துணி வாணிபம் சிறந்த முறையில் நடைபெற்றது. இன்றளவும் சென்னி மலையில் உற்பத்தியாகும் ஜவுளி பொருள்களுக்கு  நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
நொய்யல் ஆற்றங்கரையில் அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தினால், கீழடியைப் போன்றே தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் பல கிடைக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்...

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்