பேராபத்தை நோக்கி செல்லும் உலகம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
19 புரட்டாசி 2021 ஞாயிறு 08:53 | பார்வைகள் : 10435
கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றமானது உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வு முதல் நகர்புறமயம் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு வரை என பல்வேறு காரணிகள் காலநிலை மாற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அட்லாண்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் வேகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பனிப்பாறைகள் உருகும் வேகம் இரட்டிப்பு மடங்கை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், இதேநிலை தொடர்ந்தால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது என எச்சரிக்கின்றனர்.
புவி வெப்பமயமாதல் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், 2060 -களில் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் மிக மோசமான வானிலை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். தேசிய அறிவியல் செயல்முறைகள் அகாடமியின் செப்டம்பர் மாத இதழ் 21-ம் தேதி வெளியானது.இதில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு குறித்து பேசிய முன்னணி எழுத்தாளர் மேத்யூ ஒஸ்மான், புவி வெப்பமயமாதல் ஜெட் வேகத்தில் உள்ளது.
இது காலநிலையில் அசாதாரண மாறுபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கடும் வறட்சி, வெள்ளம், மோசமான வானிலை ஆகியவை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்த மேத்யூ ஒஸ்மான், இதன் மூலம் மிகப்பெரிய சமூக தாக்கங்கள் உருவாகும் என எச்சரித்துள்ளார். ஆய்வின்படி, புவி வெப்பமயமாதலால் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் வடக்கு நோக்கிய இடப்பெயர்வை ஏற்படுத்தும். இத்தகைய இடப்பெயர்வு தெற்கு பகுதியில் குறைந்த மழைப்பொழிவை உருவாக்கும். கடந்த காலங்களில் வறட்சி மற்றும் வெப்பமான, வறண்ட வானிலையைக் கொண்டிருந்த வடக்குப் பகுதி ஈரபதத்தை பெறும் என கூறப்பட்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பகுதியில் குறிப்பிடப்படும் ஜெட் ஸ்டிரீம்களில் ஏற்படும் மாற்றம் குறித்து நன்கு அறியப்படவில்லை எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், இதுபோன்ற மாற்றங்களினால் ஏற்படும் தாக்கம் மிகபெரியது என கூறுகின்றனர். இந்த மாற்றங்களை நன்கு புரிந்து கொள்ள முயற்சி எடுப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து பகுதியில் சுமார் 300 முதல் 1000 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு தோண்டி, கிட்டத்தட்ட 50 வகையான பனிக்கட்டிகளின் மாதிரிகளை இந்த ஆய்வுக்காக சேகரித்துள்ளனர்.
பழைய பனிக்கட்டிகளின் மாதிரியைப் பயன்படுத்தி வடக்கு அட்லாண்டிக்கின் காற்றழுத்தம் விளைவுகளை அறிந்த அவர்கள், இயற்கை மாறுபாடு முடிந்தளவுக்கு மனிதனால் ஏற்படுத்தப்படும் புவி வெப்பமயமாதலை அப்பகுதி பாதுகாத்து இருப்பதையும் உறுதி செய்தனர். ஆனால், இதேவிதிமுறை எதிர்காலங்களில் இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள், வெப்பமயமாதல் வழக்கில் விதிமுறை மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக் ஜெட் ஸ்டிரீம்களில் ஏற்படும் மாற்றத்துக்கும் 1728 மற்றும் 1740-ம் ஆண்டுகளில் பிரிட்டீஷ், அயர்லாந்து பஞ்சத்துக்கும் தொடர்பு உள்ளது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரத்தில், புவி வெப்பமயமாதல் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.