விமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்?
13 தை 2019 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 9239
அண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்னர் நடுவானில் ராயல் புருணை ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் புகை மண்டியது.
இன்னொரு சம்பவத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பற்றிக்கொண்டதால் தரையிறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. சம்பவம் நேற்று ஏற்பட்டது.
நடுவானில் பயணியின் கையடக்க மின்கலன் வெடித்து ராயல் புருணை ஏர்லைன்ஸில் புகை மண்டியது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணியின் மின் சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டது.
கையடக்க மின்கலன், மின் சிகரெட் போன்ற பொருள்களை விமானத்தில் எடுத்துக்கொண்டு செல்வது மற்ற பயணிகளுக்கும் சுற்றுப்புறத்துக்கும் சொத்துக்கும் ஆபத்தானவை.
விமானத்தில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்? இதோ ஒரு பட்டியல்...
கையில் எடுத்துச் செல்லும் பைகளில் வைக்கக்கூடாதவை:
- கத்திகள், நகம் வெட்டும் கருவிகள் போன்ற கூர்மையான பொருள்கள்
- விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் மட்டைகள்
- 100 மில்லிலிட்டருக்கு மேல் ஏரசால், திரவங்கள்
- சக்கர நாற்காலி
- பாதரசம் கொண்ட வெப்பமானிகள்
- வெடிபொருட்கள்
அதற்குப் பதிலாக, அவற்றைச் சரக்குப் பகுதியில் வைக்கப்படும் பைகளில் (checked luggage) எடுத்துச் செல்லலாம்.
லித்தியம் மின்கலன்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், மின் சிகரெட்டுகள் ஆகியவற்றை, கையில் எடுத்துச் செல்லும் பைகளில் வைக்கலாம்.
ஆனால், ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் அவற்றைக் குறித்துத் தனிப்பட்ட விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறை, விமான நிறுவனத்திற்கு விமான நிறுவனம் மாறுபடும்.
இரண்டு வகையான பைகளிலும் வெடிபொருள்கள், வாணவேடிக்கை தொடர்பான பொருள்கள், நச்சுப் பொருள்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்குத் தடை உள்ளது.
எனினும், பயணம் செய்யவிருக்கும் விமான நிறுவனத்தின் விதிமுறைகளைப் பற்றி முன்னரே ஆராய்ச்சி செய்து அதன்படி பைகளில் எடுத்து வைப்பது நல்லது.