நகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்!
25 கார்த்திகை 2018 ஞாயிறு 10:20 | பார்வைகள் : 9526
நகங்களை அழகுசேர்க்கும் உடல் உறுப்பாகவே இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர்.
வண்ணம் பூச வேண்டும். அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
நகங்களைக் கொண்டு ஒருவரின் உடல் சுகாதாரத்தைக் கணிக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களுக்கு நகங்கள் மிக முக்கியம்.
கேரட்டீன் (keratin) எனும் புரதச் சத்தினால் உருவானவை நகங்கள்.
அவ்வகை புரதச் சத்து கூந்தலுக்கும் தோலின் வெளிப்புறத்துக்கும் வலிமை சேர்க்கிறது.
அவற்றுடன் ஒப்புநோக்க நகங்கள் சற்று உறுதியானவை.
கேரட்டீன் இழைகள் முடியைக் காட்டிலும் நகத்தில் நெருக்கமாக இருப்பது அதற்குக் காரணம்.
கேரட்டீன் தண்ணீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
அதனால் குளிக்கும்போதோ நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ நகங்கள் உப்புவதில்லை.
விரல்களின் நுனிகளைப் பாதுகாக்கும் நகங்கள் ஒருவரின் செல்வாக்கையும் கலாசாரப் போக்கையும் பிரதிபலிக்கும் அம்சமாகக் கூட ஒரு காலத்தில் கருதப்பட்டுள்ளது.
நாளடைவில் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அறிவியலாளர்கள் அது அழகாக இருப்பதைவிட தூய்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தொடங்கினர்.
சில சமயங்களில் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவதைக் கவனித்திருக்கலாம்.
அது நகங்கள் காயமடைத்திருப்பதன் அறிகுறி.
பலரும் நினைப்பதுபோல் அது சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுவதல்ல.
குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலருக்கும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கலாம்.
அந்தப் பழக்கத்தால் பற்களின் எனாமல் பூச்சு பாதிக்கப்படுவதோடு விரல்கள் வழி தொற்றுநோய்களும் உண்டாகலாம்.
மேலும் அது பரம்பரையில் வரும் பழக்கம் என்றும் ஆய்வாளர்கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
நகங்களுக்கு நகப்பூச்சு இடும் பழக்கம், 600 ஆண்டுப் பழமையானது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.
சிலருக்கு அதன் வாடை தலைவலியை ஏற்படுத்தும்.
அதையும் பொறுத்துக்கொண்டு அழகுக்காகச் சிலர் ஒவ்வொரு மாதமும் பல நிறங்களில் நகங்களில் வண்ணத்தைப் பூசிக்கொள்வர்.
அதில் ஆபத்து இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் நகப்பூச்சு பயன்படுத்துவதால் நகங்களின் நிறம் வெளிர் மஞ்சளாக மாறக்கூடும் என்று தெரியுமா?