எகிப்து மன்னர் 4-ஆம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு!
6 ஐப்பசி 2019 ஞாயிறு 14:16 | பார்வைகள் : 9798
எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்து போன 2 ஆயிரத்து 200 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
கி.மு. 221-ம் ஆண்டு தாய் இறந்ததை அடுத்து எகிப்து அரசரான 4-ஆம் தாலமி அரியணையில் அமர்ந்தாலும் தன்னை ஒரு அரசராகக் கருதியதை விட கலைஞராகவே அதிக திறமைகளை வெளிப்படுத்தினார். அவருடைய நிர்வாகத் திறன் குறைவால் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கோயலெ- சிரியா பகுதிகளை இழந்தார். இதையடுத்து மக்கள் மன்னர் மீது ஆவேசம் கொண்டு போராட்டங்களை நடத்தி பல்வேறு சச்சரவுகள் ஏற்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் கி.மு. 204-ல் பதவி இழந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.
ஆட்சி நிர்வாகத்தை விட கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எகிப்து மன்னர் 4-ஆம் தாலமிக்கு கட்டப்பட்ட கோவில் எகிப்தின் நைல் நதிக்கரையின் மேற்கு கரைப்பகுதியில் தற்போதுள்ள டாமா என்ற நகரில் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் கோவிலின் மதில் சுவர்கள், மன்னரின் புகழ்போற்றும் சிற்பங்கள், அதைச்சுற்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன.
கட்டிடம் கட்டுவதற்கு ட்ரில்லிங் செய்தபோது கிடைத்த இந்த கோவிலின் சிதைந்த கட்டிடங்களை கடந்த மாதம் 30-ம் தேதி அகழ்வாய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். மன்னருக்கென மிகப்பெரிய கப்பல் இருந்தது, அதன் மூலம் வாணிபம் செய்தது, மன்னரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்த தொல்லியல் ஆய்வு பார்க்கப்படுகிறது.