Paristamil Navigation Paristamil advert login

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

28 புரட்டாசி 2019 சனி 13:52 | பார்வைகள் : 9613


தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.  இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல. எடிசனின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம்.

 
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்க மர வியாபாரி. தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.
 
சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.  பள்ளியில் அவர் மந்தமாக இருந்ததால் படிப்பு ஏறவில்லை. ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார்.
 
பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.
 
அவருக்கு இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.
 
ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் தந்தி இயக்குபவராக வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.  மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.
 
ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூடத்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.
 
அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.
 
அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.
 
எடிசன் இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.
 
1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும்.
 
பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும்' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார்.
 
அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!
 
ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.  
 
ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.
 
அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.
 
அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.
 
கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.
 
இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது, 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் 'மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம்' என்னால் தயாரிக்க முடியும் '
 
முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
 
தன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன.
 
எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்