உயரமாக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
11 புரட்டாசி 2019 புதன் 17:55 | பார்வைகள் : 9526
உயரமாக இருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 40 சதவீதம் குறைவு என ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் போட்ஸ்டேமில் மனிதர்களின் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனம், டயபடாலஜியா என்ற மருத்துவ ஆய்விதழில் தங்களது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. 28 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் படி, ஒவ்வொரு 4 அங்குல கூடுதல் உயரமும் 2-ம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை ஆண்களுக்கு 41 சதவீதமும், பெண்களுக்கு 33 சதவீதமும் குறைப்பதாகக் கூறியுள்ளது.
உயரமாக இருப்பவர்களின் கணையத்தில் இன்சுலினை உருவாக்கும் பீட்டா செல்களின் செயல்திறன் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதிக உயரமும், குறைவான கல்லீரல் கொழுப்பும் கொண்டுள்ளவர்களின் ரத்த மாதிரியைப் பரிசோதிக்கும் போது அவற்றில் சி-ரியாக்டிவ் புரோட்டீன் ((C-reactive protein)), அபிடோனெக்டின் ((adiponectin)) ஆகிய கார்டியோமெடபாலிக் குறியீடுகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிக உயரத்தில் அளவான எடையில் இருப்போருக்கு 2.ம் வகை நீரிழிவு நோய்க்கான வாய்ப்பு ஆண்களில் 86 சதவீதமும், பெண்களில் 67 சதவீதமும் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. பேறு காலம், குழந்தைப் பருவம், வயது வந்தோருக்கான பருவம் ஆகிய காலங்களில் பாலின வேறுபாடுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ளப்போவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.