மருந்தை சுரக்கும் தவளை பற்றி தெரியுமா?
28 சித்திரை 2017 வெள்ளி 05:58 | பார்வைகள் : 9406
தென்னிந்திய காடுகளில் பல நிறம் கொண்ட தவளைகள் உண்டு. இவற்றின் தோல் மீது சுரக்கும் நீரில் உள்ள வேதிப் பொருட்கள், பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் எச்1என்௧ ரக ப்ளூ வைரஸ்களை, கொல்லும் சக்தி கொண்டவை என்பதை, அமெரிக்காவிலுள்ள எமோரி தடுப்பு மருந்து ஆய்வு மையம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள ராஜிவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தவளைகள், நோய்க் கிருமிகளிடமிருந்து தப்பிக்க, தங்கள் தோல்களின் மீது பெப்டைட் எனப்படும் அமினோ அமிலம் கொண்ட நீரை சுரக்கின்றன.
எமோரி-ராஜிவ் மைய விஞ்ஞானிகள் அடையாளம் கண்ட புதிய பெப்டைடுகளுக்கு, 'உருமின்' என, பெயரிட்டுள்ளனர். தமிழகம் - கேரளா பகுதிகளில் முன் புழங்கிய, உருமி என்ற சுருள் பட்டாக் கத்தியின் நினைவாக, 'இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை தொற்றும் வைரஸ்கள், தவளைகளை தாக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவை சுரக்கும் பெப்டைடுகள் ப்ளூ வைரசை கொல்லும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
எனவே, வேறு வகை தவளைகள், வேறு வகை கிருமி எதிர்ப்பு பெப்டைடுகளை சுரக்கின்றனவா என்றும், இரு நாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சியை விரிவு படுத்தியுள்ளனர்.