அணில் பிள்ளையைக் காணவில்லை!!
1 தை 2020 புதன் 17:09 | பார்வைகள் : 9874
செல்வர் ஒருவர் ஏராளமான பணம் செலவழித்து அழகான மாளிகை ஒன்றை கட்டிக் குடி வந்தார்.
விலை உயர்ந்த வெளிநாட்டு ஜமுக்காளத்தை வாங்கினார் அவர். அந்த ஜமுக்காளத்தை விரிக்கும் பணியல் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அந்த ஜமுக்காளத்தை தரையில் விரித்து முடித்தனர்.
புகை பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருவரும் சிகரெட் பெட்டியைத் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. அவர்கள் கண்களுக்கு ஜமுக்காளத்தின் நடுவில் ஒரு மேடான பகுதி தெரிந்தது.
"ஒரு சிகரெட் பெட்டிக்காக ஜமுக்காளத்தைச் சுருட்டி விட்டு மீண்டும் விரிக்க நம்மால் ஆகாது. இருவரும் களைப்படைந்து விட்டோம். ஒரு சுத்தியல் கொண்டு வா. அந்தப் பெட்டியை நசுக்கி இருந்த அடையாளம் இல்லாமல் செய்து விடுகிறேன்" என்றான் ஒருவன்.
சுத்தியல் வந்தது. அந்த மேட்டை அடித்துச் சமமாக்கினான் அவன்.
வீட்டுக்காரர் அவர்கள் இருந்த அறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பெட்டி இருந்தது.
அவர்களைப் பார்த்து, "இங்கு யாரும் சிகரெட் பிடிக்க மாட்டார்கள். இந்தப் பெட்டி உங்களுடையதாகத்தான் இருக்கும். நான் ஆசையாக வளர்த்து வரும் சின்ன அணில் பிள்ளையைக் காணவில்லை. எங்காவது பார்த்தீர்களா?" என்று கேட்டார் அவர்.