Paristamil Navigation Paristamil advert login

சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்!

 சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்!

8 மாசி 2023 புதன் 17:14 | பார்வைகள் : 4978


இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது.
 
அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 
 
75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன.
 
சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்திருந்தனர். 
 
மறுபுறத்தில், 75ஆவது சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன.
 
தமிழரசுக் கட்சியினர், சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ என்று அறிவித்ததுடன், வடக்கிலிருந்து, கிழக்குக்கு எதிர்ப்புப் பேரணியையும் தொடங்கினர். 
 
75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சொன்ன ஜனாதிபதி ரணில், 13ஆவது திருத்தத்தை முற்றாக அமல்படுத்துவேன் என்று கடந்த சர்வகட்சி மாநாட்டில் சொன்னதோடு சரி! சுதந்திர தினத்தன்று காலையில் நடந்த விழாவில் உரையாற்றாத ஜனாதிபதி ரணில், மாலையில் நாட்டுக்காக ஆற்றிய உரையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், இந்த ஆண்டின் சவால்களை மேலும் பொறுமையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ள நாம் அனைவரும் தீர்மானிப்போம்” என்று சொல்லி, தனது சிற்றுரையை நிறைவு செய்திருந்தார். 
 
இவையெல்லாம் இன்ன பல பிற சிந்தனைகளைத் தூண்டுவதாக இருந்தன. அவற்றில் சிலதைப் பதிவு செய்வது உசிதம்.
 
 
சுதந்திர தினத்தில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்று, அதைப் பெரும்பாலும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.
 
தமக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் நாடொன்றில், தமக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது என்பதுதான், அவர்கள் முன்வைக்கும் கேள்வி. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. 
 
தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக எத்தனை துன்பங்களை, பாரபட்சங்களை, இழப்புகளை இந்நாட்டின் தமிழர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
 
இரண்டாந்தரப் பிரஜைகளாக தமிழர்கள் நடத்தப்பட்டமை, இந்நாட்டின் இருண்ட வரலாறு.  அப்படியானால், அவர்களைப் பொறுத்தமட்டில் சுதந்திர தினம் என்பது அர்த்தமற்றது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 
 
ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் விசித்திரமானவர்கள். இதே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, சுதந்திர தினத்தில் கலந்துகொண்டு, சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ என்று சொன்ன தமிழ்த் தேசியவாதிகளை “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்” என்று பகிரங்கமாகவே சொன்ன தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று அதே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் போது, சுதந்திர தினத்தை “கரிநாள்” என்று பகிரங்கமாகச் சொல்கிறார். 
 
அன்று, அரச சுதந்திர தினத்தில் அமர்ந்திருந்தவர், இன்று வடக்கிலிருந்து, கிழக்குக்கு எதிர்ப்புப் பேரணி நடத்துகிறார். அதில், இலங்கைக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நேருவின் குல்லாத் தொப்பியை அணிந்து கொண்டு நிற்கிறார்.
 
அவரும் அரசியல்வாதிதானே!
 
“அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று இதையும் தமிழ் மக்கள் கடந்துவிடலாம். அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தமிழ் மக்களின் உணர்ச்சியை வைத்து, அரசியல் செய்தால்தான் முடியும் என்ற தமிழரசுக் கட்சியின் அரசியலை, சுமந்திரனும் மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டுவிட்டார் போலும்! தேர்தல் அரசியல் மட்டும் இல்லையென்றால், தமிழ்த் தேசியம் என்றோ குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். நிற்க!
 
மறுபுறத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களிடம் எழுந்திருக்கிற எதிர்ப்பு என்பது புதுமையானது.
 
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இந்த எதிர்ப்பு என்பது, சுதந்திர தினத்துக்கு எதிரான எழுச்சியல்ல; பணம் செலவழித்து, அதைக் கொண்டாடுவதற்கு எதிரான எழுச்சி ஆகும். 
 
அதாவது, நாடு பொருளாதார பிறழ்வில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் இந்த நிலைமையில், கொண்டாட்டம் வேண்டுமா என்பதுதான் இந்த எதிர்ப்பின் வரையறை. தமக்கான அரசியல் அலைக்குப் பலம் சேர்க்க, இடதுசாரிகள் இதை இலாவகமாகப் பற்றிக்கொண்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
இதில், தமது கொள்கை என்ன, நிலைப்பாடு என்ன என எந்தத் தௌிவுமே இல்லாமல், எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டுமென மட்டும் பயணித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்த்திருக்கிறது. இந்த எதிர்ப்புகள் அர்த்தமற்றவை.
 
கடனெடுத்து குடும்பம் நடத்தும் அப்பாவின் பொக்கட்டுக்குள் இருந்து காசை எடுத்து, படம் பார்க்கும் மகனின் மீது, அம்மா காட்டும் கோபத்தை போன்றது இது.
 
இதில் நிறைய உணர்ச்சிவசப்பாடுகள் இருக்கின்றனவேயன்றி, அரசியல் ரீதியான முக்கியத்துவம் எதுவும் கிடையாது. 
 
இவர்களுடைய எதிர்ப்பும் தமிழர்களுடைய எதிர்ப்பும் ஒன்றல்ல. வருடாவருடம் தம்முடைய சகோதரர்களையே கொன்றொழித்த யுத்த வெற்றியை, சுதந்திர தினத்தை விடப் பெரிதாகக் கொண்டாடும் போது, சேர்ந்து கொண்டாடியவர்கள்தான் இவர்கள்.
 
இன்று அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வருமானத்தைக் குறைத்த வருமான வரி என, மக்கள் பணத்தைச் செலவழிப்பதைப் பற்றி பெரும் பிரக்ஞையோடு இருப்பதால், சுதந்திர தினத்துக்கு 200 மில்லியன் செலவா எனத் தம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள நாடகம் நடத்துகிறார்கள். 
 
இலங்கையில், பொதுமக்கள் பணம் அதிகம் வீணாவது, அரசு சொந்தமாக நடத்தும் நிறுவனங்களால்த்தான்; இதை மாற்ற இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அரச துறை என்பது, இங்கு ஓட்டைப்பானை; ஆனால் அதை எதிர்க்கமாட்டார்கள். 15 இலட்சம் அரச ஊழியர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் வாக்குகள் தேவையல்லவா?
 
அதுபோல, இலங்கையின் பணம் வீணாகும் இன்னொரு வழி, இலங்கையின் பெருத்த இராணுவம். அதைக் குறைப்பது பற்றியும், இலங்கையின் மிக உயர்ந்த பாதுகாப்பு செலவுகளைக் குறைப்பது பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். அங்கே பல்லாயிரம் கோடிகள் வீணாகிக் கொண்டிருக்க, இங்கே 20 கோடிக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
 
இதுதான் உண்மை; இதுதான் யதார்த்தம்.
 
 
தமிழர் தரப்பு சமஷ்டி கோருகிறது. ஏன் சமஷ்டி? என்ன வகையான சமஷ்டி? எத்தகைய அதிகாரப் பகிர்வு என, எந்த விளக்கத்தையும் அவர்கள் அளிப்பது இல்லை.
 
மறுபுறத்தில், “பாராளுமன்றம் 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்கும் வரை, நான் அதை முழுமையாக அமல்படுத்துவேன்” என்று ஜனாதிபதி சொன்னதற்கே, இனவாதத்தில் ஊறி அழுகிப்போன இனவாதிகளான சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் எதிர்ப்பை முன்வைத்திருக்கிறார்கள். 
 
மறுபுறத்தில், பௌத்த மகாநாயக்க தேரர்கள் 13ஐ அமல்படுத்தக்கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். 13 வேண்டாம் என்பதில், தமிழ்த் தேசியவாதிகளும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் தௌிவாக இருக்கிறார்கள்.
 
ஆனால், ஏற்கெனவே அரசியலமைப்பிலுள்ள 13ஐயே முழுமையாக அமல்படுத்த இடமளியாத ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகள், சமஷ்டியை எப்படி அனுமதிப்பாரென்ற வேதாளத்தின் கேள்விக்கு, தமிழ் அரசியல்வாதிகளிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் இங்கு புரியாத புதிர்.
 
ஆங்கிலத்தின் இதை ‘gridlock situation’ என்ற சொல்லலாம். ‘திறக்கமுடியாத பூட்டின் நிலை போன்றதாகும். இதற்குள்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சிக்கி நிற்கிறது. 
 
சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரு எல்லைகளைத் தவிர்த்து யோசிக்க, இருதரப்பும் தயாராகவில்லை. பாவம் ஜனாதிபதி ரணில், இதற்கு நடுவில் தனியாளாக சிக்கிப் போயிருக்கிறார். அவருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலைப் பற்றிய கவலைகள் நிச்சயமாக இருக்கும். ஆகவே, சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் எதிர்ப்பை மீறி, அவர் 13ஐ அமல்படுத்துவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்படி அவர் செய்தால், சுதந்திர இலங்கையின் வரலாற்றில், முதுகெலும்பு உள்ள ஒரே அரச தலைவராக, அவரை அடையாளப்படுத்தலாம். 
 
மறுபுறத்தில், தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? கிடைக்காத சமஷ்டிக்காக இன்னும் எத்தனை தசாப்தங்களைத் தாரைவார்க்கப் போகிறார்கள்? விரும்பியது கிடைக்கும் வரை, கிடைத்தததை வைத்து செய்யக்கூடியவனவற்றையேனும் செய்யும் இயல்போ, இயலுமையோ இவர்களிடம் இல்லை என்பதற்கு, வடமாகாண சபையை இவர்கள் நடத்திய இலட்சணமே சாட்சி. 
 
எங்களிடம் அதிகாரங்கள் இருந்தால், எப்படியெல்லாம் சாதித்திருப்போம் என்று சொல்வது தலைமைத்துவமில்லை.
 
உண்மையான தலைவர்கள், தங்களுக்கு சகல அதிகாரங்களும் கிடைக்கும் வரை காத்திருப்பதில்லை. அவர்கள் ஒவ்வோர் அடியிலும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்.
 
அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படிக்கட்டாகக் கட்டி, தன்னையும் தனது சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள்.
 
அத்தகைய தலைவர்களை தமிழினம் இனியாவது அடையாளம்காண வேண்டும்.
 
சுதந்திர இலங்கையின் 75ஆவது வயதில், அதைப் பற்றிச் சொல்ல ஒன்றேயொன்றுதான் இருக்கிறது.
 
இனியாவது இந்தத் தீவிலுள்ள அனைவருக்குமான ஒரு நாட்டை, இங்கு கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும்.
 
அப்போதுதான், ‘சுதந்திர தினம்’ அனைவருக்குமே அர்த்தபூர்வமானதாக இருக்கும்.
 
நன்றி தமிழ்mirror
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்