டொலர்மயமாதல் நீக்கத்தை முன்னோக்கில் வைத்தல்
29 ஆடி 2023 சனி 11:55 | பார்வைகள் : 7233
"நமது நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் உலகத் தரநிலையிலிருந்து கீழிறங்கப் போகின்றோம், இது 200 ஆண்டுகளில் வெளிப்படையாக நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். ஒரு பெரிய சக்தியாக இருந்தும் கூட நம்மைப் பறித்துச் செல்லும் இது போன்ற எந்தவொரு தோல்வியும் இருக்காது”. - டொனால்டு ட்ரம்ப்
அதன் எளிமையான அர்த்தத்தில், டொலர்மயமாதல் நீக்கம் என்பது அமெரிக்க டொலரை ஓர் இருப்பு நாணயம், பரிமாற்ற ஊடகம் அல்லது கணக்கு அலகு என நம்புவதைக் குறைப்பதற்கான உலகளாவிய மாற்றத்தைக் குறிக்கிறது. சில வல்லுநர்கள் இதை உலகளாவிய பரிவர்த்தனைகளில் மாற்று நாணயங்களுக்கு - அதாவது டொலரைத் தவிர - மாற்றீடாக குறிப்பிடுகின்றனர்.
80 ஆண்டுகளாக, அமெரிக்க டொலர் அதன் பரவலான ஏற்றுக்கொள்ளல் மற்றும் பணத் திரவத்தன்மையின் காரணமாக ஆதிக்கம் செலுத்தும் நாணயமாக உள்ளது. இந்த ஆதிக்கம் 1940 களில் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கை மூலம் வலுப்படுத்தப்பட்டது.
இன்று அமெரிக்க டொலர் அனைத்து சர்வதேச பரிவர்த்தனைகளிலும் 88% பயன்படுத்தப்படுவதுடன், இது உலகளவில் வர்த்தகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக உள்ளது. இது மிக அதிகமான கையிருப்பு நாணயமாகவும் உள்ளது. மசகு எண்ணெய் மற்றும் இயற்கை கனியங்கள் போன்ற பிரதானமான பொருட்களின் விலைகள் டொலரிலேயே விலையிடப்படுகின்றன.
சர்வதேச வர்த்தகத்தில் அதன் மேலாதிக்கம் இருந்தபோதிலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மாற்று நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு மற்றைய நாடுகளை வற்புறுத்தி வருகின்றதுடன், பெரும்பாலும் தங்களது நாணயங்களான முறையே யுவான் மற்றும் ரூபிள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த அழைப்பு ஓரளவுக்கு செவிசாய்க்கப்பட்டதாகவே தெரிகிறது. மே 2023 இல், அர்ஜென்டினா சீன இறக்குமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்துவதாக அறிவித்த அதே நேரத்தில் பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) உலகளாவிய பரிவர்த்தனைகளுக்கான பொதுவான நாணயத்தை உருவாக்குவதற்கான அழைப்பை விடுத்தார்.
டொலர்மயமாதல் நீக்கத்திற்கான இயக்கத்தின் விருத்தியைக் கருத்தில் கொண்டு, அதன் வரலாற்றையும் அதன் பின்னணியையும் புரிந்துகொள்வது அவசியமானதாகும்.
பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம்
இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க வகிபங்கு விரிவடைந்து, நியூயோர்க்கை உலகின் நிதியியல் தலைநகராகவும், அமெரிக்க டொலரை உலகின் மிக முக்கியமான நாணயமாகவும் உருமாற்றியது.
1944 ஆம் ஆண்டில், பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் ஓர் சர்வதேச அந்நிய செலாவணி அமைப்பை உருவாக்கியதுடன், அமெரிக்க டொலரை நடைமுறையான உலகளாவிய இருப்பு நாணயமாக மாற்றியது. உண்மையான பிரெட்டன் வூட்ஸ் கட்டமைப்பிற்கு ஏற்ப, கையொப்பமிட்டவர்களின் மற்றைய அனைத்து நாணயங்களும் அமெரிக்க டொலருடன் இணைக்கப்படும். பதிலுக்கு, அதன் மதிப்பானது தங்க இருப்புகளால் ஆதரிக்கப்படும்.
ரிச்சர்ட் நிக்சன் 1970 களின் முற்பகுதியில் டொலரின் நாணய மாற்றத்தை நிறுத்த முடிவு செய்யும் வரை இந்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது. அது பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் முடிவைக் குறித்தது.
1973 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இராணுவச் சலுகைகளுக்கு ஈடாக எண்ணெய் வர்த்தகத்தில் உடன்பாட்டை எட்டிய பின்னர் டொலர் பெட்ரோடாலராக உறுதிப்படுத்தப்பட்டது.
டொலர் மயமாக்கல் நீக்கத்தின் தோற்றம்
1997 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் பொருளாதார நெருக்கடியால் சீரழிந்த பின்னர், ஆசிய நாணய நிதியத்தை நிறுவும் யோசனை தோற்றம்பெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் ஆசிய நாணய நிதியத்தை முன்மொழிந்ததுடன், இது ஆசிய பொருளாதாரங்கள் நிதியியல் சவால்களை சமாளிக்க உதவும் ஒரு நிறுவனமாகும். ஒரு நிலையில் அது சர்வதேச நாணய நிதியத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்தது.
இது சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் முதலாவது இயக்கமாக இருந்தபோதிலும், ஆசிய நாணய நிதியத்தை உருவாக்கும் யோசனை ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கிற்கும் சவாலாக இருந்த ரமயால் ஒருபோதும் ஆரம்பிக்கப்படவில்லை. இது ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுத்ததுடன், இந்த யோசனையை அமெரிக்கா எதிர்த்தது. சுவாரஸ்யமாக, முக்கியமாக டோக்கியோவுடனான அதன் இறுக்கமான உறவு காரணமாக சீனாவும் ஜப்பானின் முன்மொழிவை ஏற்கவில்லை.
பிரிக்ஸ் (BRICS) நாணயம்
சமீபத்தில், பிரிக்ஸ் குழு எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு பொதுவான நாணயத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததுடன் டொலரின் செல்வாக்கைக் குறைத்தது.
ஏப்ரல் 2023 இல், ரஷ்ய டுமாவின் துணைத் தலைவரான அலெக்சாண்டர் பாபகோவ், பிரிக்ஸ் நாடுகள் தங்கம் மற்றும் அரிய பூமி கனிமங்கள் போன்ற பொருட்களால் ஆதரிக்கப்படும் உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய நாணயத்தை உருவாக்கும் பாதையில் இருப்பதாக அறிவித்தார்.
இந்த அறிக்கையை பிரேசிலிய ஜனாதிபதி லுலா டா சில்வா ஆதரித்ததுடன், அவர் நாடுகள் டொலரை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகம் செய்வதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என வெளிப்படையாக வாதிட்டார்.
எவ்வாறாயினும், டொலர்மயமாக்கல் நீக்கத்துடன் எங்கு செல்ல விரும்புகிறது என்பதில் பிரிக்ஸ் ஒன்றுபடவில்லை அல்லது ஒன்றிணைக்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அத்தகைய திட்டத்தை இந்தியா ஆதரிக்காது என்று குறிப்பிட்டதை அடுத்து, பிரிக்ஸ் நாணயத்திற்கான அழைப்புகளில் இருந்து இந்தியா விலகிக் கொண்டது. இதற்கு பதிலடியாக ஓர் சீன சிந்தனை குழு அந்த நாட்டை அதில் பலவீனமான இணைப்பாக குறிப்பிட்டு இந்தியாவை குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரியது.
சீனா - பிரேசில் ஒப்பந்தம்
கடந்த மார்ச் மாதம் லுலா டா சில்வா சீனாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து, பிரேசிலும் சீனாவும் தங்களது தேசிய நாணயங்களில் அதாவது பிரேசிலிய ரியல் மற்றும் சீன யுவானில் இருதரப்பு வர்த்தகத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால் இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை நீக்கின.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தங்களது நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 150 பில்லியன் டொலர் அளவுக்கு வர்த்தகத்தை நடாத்தவும், முடிந்தால் விரிவாக்கவும் உதவும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனை செலவீனங்களைக் குறைக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் உதவும் என்பதை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு
கடந்த ஆண்டு உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அந்த நாடு உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை பயன்படுத்துவதை கடினமாக்கியுள்ளன. SWIFT அமைப்பிலிருந்து ரஷ்ய வங்கிகள் அகற்றப்பட்டு 630 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயற்பாடுகள் ரஷ்ய வங்கிகள் மற்றும் வணிகங்களை மாற்று நாணயங்களுக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்தியது. 2022 முதல், ரஷ்யா தனது வர்த்தகத்தின் பெரும்பகுதியை சீனாவுடன் யுவானுடன் நடாத்தியது. அந்த நாடு இந்தியாவுடன் ரூபாய்-ரூபிள் ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.
இன்று, பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும் அல்லது இன்னும் சரியாக கூறினால் தடைகளின் காரணமாக, ரஷ்யா மத்திய கிழக்கு மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியம் உட்பட பல நாடுகளுடன் பல்வேறு தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்கிறது.
டொலர் மயமாக்கல் நீக்கத்திற்கான காரணங்கள்
1. டொலரின் முன்னோர்கள்
உலகளாவிய கையிருப்பில் அமெரிக்க டொலரின் பங்கு கணிசமாகக் குறைந்து வருகிறது. சீன யுவான் தற்போது 2.7% பங்குடன், உலகளாவிய இருப்பு தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. யுவானின் உயர்வுக்கு முக்கிய காரணம் சீன முதலீடுகள் மற்றும் பிற நாடுகளுடனான பொருளாதார பங்காண்மையாகும்.
2. பிராந்திய இருதரப்பு வர்த்தகத்தின் வளர்ச்சி
மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் காரணமாக ரூபிள் மற்றும் இந்திய ரூபாய் போன்ற பிற நாணயங்களும் வளர்ச்சி கண்டுள்ளன. உண்மையில், சுமார் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் அந்தந்த நாணயங்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்கின்றன. இந்த செயற்பாட்டில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் ஓர் வகிபங்கைக் கொண்டுள்ளன. இருதரப்பு வர்த்தகத்தில் ரூபாயை பயன்படுத்துவதற்கு இலங்கைக்கும் மொரீஷியஸுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
3. ரஷ்யா - உக்ரேன் போர்
SWIFT அமைப்பிலிருந்து ரஷ்ய வங்கிகளை வெளியேற்றியதன் மூலமும், ரஷ்ய சொத்துக்களை முடக்கியதன் மூலமும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கான அமெரிக்காவின் பிரதிபலிப்பு, அமெரிக்க டொலரை ஆயுதமாக்கும் அச்சத்தை எழுப்பியது. இது குறிப்பாக உலகளாவிய தெற்கில் டொலரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான ஏற்கனவே முனைப்பாகவுள்ள இயக்கத்தை வலுப்படுத்தியது. பல நாடுகளும் SWIFT ஐ விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதுடன், ரஷ்யாவும் சீனாவும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு ஓர் புதிய நிதியியல் செய்தி அமைப்பை உருவாக்க முயற்சித்துள்ளன.
டொலர் மயமாதல் நீக்கத்தின் நன்மைகள்
அமெரிக்க நாணயக் கொள்கையின் வீழ்ச்சியில் இருந்து நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு டொலர்மயமாதல் நீக்கம் உதவும். தற்போது, உதாரணமாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்களை உயர்த்தும் தீர்மானத்தின் காரணமாக, மற்றைய நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலரில் ஏதேனும் மதிப்பு அதிகரித்தால், நாடுகள் தங்களது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகலாம்.
அந்த வகையில், டொலர்மயமாதல் நீக்கம் என்பது ஒரு நாட்டின் பணவியல் சுயாட்சியை அதிகரிக்கிறது. இது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நாடுகளுக்கு சுதந்திரத்தையும் சுவாத்தியமான இடத்தையும் வழங்குகிறது. சீனா மற்றும் இந்தியா போன்ற பொருளாதாரங்களுக்கு டொலர்மயமாதல் நீக்கம் கைகொடுக்கும், ஏனெனில் இது போன்ற நாடுகள் பிராந்திய மற்றும் உலகளவில் தங்களின் செல்வாக்கை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் தங்களது நாணயங்களை அதிகரிக்கவும், அவற்றின் அபிவிருத்தி வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவும்.
டொலர்மயமாதல் நீக்கத்தின் தீமைகள்
டொலர்மயமாதல் நீக்கம் அதனது தீமைகளையும் கொண்டுள்ளது. நாடுகள் அமெரிக்க டொலரில் இருந்து மற்றொரு நாணயத்திற்கு மாறும்போது, பரிவர்த்தனை செலவீனங்கள் செயற்படுத்தப்படும். டொலர்மயமாதல் நீக்கத்தினை யதார்த்தமாக்குவதற்கு நாடுகளுக்கு முறையான வங்கி உட்கட்டமைப்பு, நிதியியல் கட்டுப்பாடுகள் மற்றும் போதுமான இருப்புக்கள் ஆகியவை அவசியமாகின்றது. இது தனது பிரதானமாக முதலீட்டு பாய்ச்சல்கள் மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் இடையூறுகள் காரணமாக சர்வதேச வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
அதிகளவான சர்வதேச வர்த்தகம் டொலரின் மூலமாக நடாத்தப்படுவதால், சில நாடுகள் சர்வதேச பரிவர்த்தனைகளில் யுவான் அல்லது ரூபிள் போன்ற மாற்று நாணயங்களை ஏற்கத் தயங்குகின்றன.
டொலர்மயமாதல் நீக்கத்தின் எதிர்காலம்
டொலர்மயமாதல் நீக்கம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, ஆனால் தாமதமாக அது வேகமாக நிலையை அடைந்தது. இந்த செயன்முறையை கையாளும் போது, ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பாக, நாடுகள் அதனது நன்மை தீமைகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதுடன் பாரபட்சமின்றி இருக்க வேண்டும்.
டொலர்மயமாதல் நீக்கம் பரவலாக கலந்துரையாடப்பட்டாலும், டொலர் இன்னமும் அனைத்து நாணயங்களின் ராஜாவாக செயற்படுகிறது. அதனது பயன்பாடு குறையுமா இல்லையா என்பது கணிக்க முடியாத பட்சத்தில் மிகவும் விவாதத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. மற்றைய நாணயங்களின் விருத்தியும், உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள மாற்றமும், அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்கள் அந்த வரிசையில் அமெரிக்க டொலர் தனது ஆதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்பதை வெளிக்காட்டுகிறது.
ருமேத் ஜயசிங்க தற்போது தனது உயர் கல்விக்காக பொருளாதார கற்கையை தொடர்கின்ற மாணவியாவார். 2022 இல் தனது உயர்தர கல்வியை நிறைவுசெய்த அவருக்கு, சர்வதேச உறவுகள், விளையாட்டு இராஜதந்திரம் மற்றும் இசை உள்ளிட்ட பரந்துபட்ட ஆர்வங்கள் உள்ளன. அவரை rumethj17@gmail.com எனு் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி வீரகேசரி