Paristamil Navigation Paristamil advert login

உயரும் புவி வெப்பம் : தாக்குப்பிடிக்குமா மனித இனம்?

 உயரும் புவி வெப்பம் : தாக்குப்பிடிக்குமா மனித இனம்?

24 ஆடி 2023 திங்கள் 05:27 | பார்வைகள் : 6405


புவியின் வெப்­ப­நிலை அண்மைக் கால­மாக அதி­க­ரித்துச் செல்­வது தொடர்­பான செய்­தி­க­ளையும் ஆய்­வு­க­ளையும் அடிக்­கடி ஊட­கங்­களில் பார்க்க முடி­கின்­றது. இவ்­வாறு உலகின் வெப்­ப­நிலை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வதால் ஏற்­படக் கூடிய பார­தூ­ர­மான விளை­வுகள், பாதிப்­புகள் என்­பவை தொடர்­பான எச்­ச­ரிக்­கை­க­ளையும் அவற்­றிலே அவ­தா­னிக்க முடி­கின்­றது.
 
ஒரு சாமா­னிய மனி­த­னாக இந்தச் செய்­திகள் எமக்குக் கவலை தரு­வ­தாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடி­யாத கையறு நிலை­யி­லேயே நாம் இருக்­கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சைப் பிசை­கி­றது. 
 
புவி வெப்­ப­நிலை அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மான கரி­ய­மில வாயு அதி­க­ளவில் வளி மண்­ட­லத்தில் கலப்­ப­தற்குப் பங்­க­ளிக்கும் வல்­ல­ரசு நாடுகள் பெரு­மெ­டுப்பில் மாநா­டு­க­ளையும் கூட்­டங்­க­ளையும் நடத்தி இதனைப் பற்றிப் பேசி­விட்டுக் கலைந்து செல்­கின்­றன. ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வொரு செயற்­பாடும் உலகில் இல்­லாத நிலையில் புவியின் வெப்பம் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது.
 
இந்த வரு­டத்தின் இறு­தியில் கூட துபாயில் கால­நிலை தொடர்­பி­லான உல­க­ளா­விய மாநாடு நடை­பெற இருக்­கி­றது. கால­நி­லைக்கு அதிகம் பாதிப்பை விளை­விக்கும் பெற்­றோ­லியப் பொருட்­களை உற்­பத்தி செய்யும் ஒரு நாட்டில் கால­நிலை பாதிப்பைப் பற்றி ஆராயும் ஒரு மாநாட்டை நடத்­து­வது எவ்­வ­கையில் உசி­த­மா­னது என்­கின்ற கேள்­விகள் உலகின் பல பகு­தி­க­ளிலும் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.
 
இந்­நி­லையில் மாநாட்டை நடத்தும் நாடோ அன்றி மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடு­களோ உண்­மையில் கால­நி­லையைக் காக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் சிந்தை உள்­ள­னவா என்ற கேள்வி எழு­வது இயல்­பா­னதே.
 
புவியின் வெப்­ப­நி­லையை அள­விடும் உல­க­ளா­விய நடை­முறை 1979ஆம் ஆண்­டி­லேயே அறி­மு­க­மா­கி­யது. அதன் பின்­னான காலப்­ப­கு­தியில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­விய கால­மாகக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அந்த மாதத்தில் புவியின் சரா­சரி வெப்­ப­நிலை 16.92 பாகை  செல்­சி­ய­ஸாக இருந்­தது.
 
அதன் பின்னர் நடப்­பாண்டின் ஜூலை மாதம் உலகின் அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­விய மாத­மாக மாறி­யுள்­ளது. இந்த மாதம் முழு­மைக்­குமே இத்­த­கைய வெப்­ப­நிலை நீடிக்கும் என்­கின்ற அறி­விப்பு வேறு பீதியைக் கிளப்­பு­கி­றது. 
 
முன்னர் வெளி­யான தக­வலின் பிர­காரம் ஜூலை 3ஆம் திகதி நில­விய வெப்­ப­நிலை 17.1 பாகை செல்­சி­ய­ஸாக இருந்­தது. இது 2016இல் பதி­வான  சாத­னையை முறி­ய­டித்­தது. 
 
அந்தச் செய்தி தந்த அதிர்ச்சி மறை­வ­தற்­கி­டையில் ஜூலை 6ஆம் திகதி வெப்­ப­நிலை 17.23 பாகை­யாக உயர்ந்து 3 நாட்­க­ளுக்கு முந்­திய சாத­னையை முறி­ய­டித்­தது. அன்­று­முதல் இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் நாள்­வரை புவியின் சரா­சரி வெப்­ப­நிலை 16.94 பாகைக்குக் கீழ் இறங்­கவே இல்லை. திடீ­ரென ஜூலை 17ஆம் திகதி வெப்­ப­நிலை உயர்ந்து 17.11 பாகையை எட்டிப் பிடித்­தது. இந்­நி­லையில் புவியின் அதி கூடிய சரா­சரி வெப்­ப­நிலை நிலவும் மாத­மாக இந்த வரு­டத்தின் ஜூலை மாதமே விளங்கக் கூடும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.
 
இந்த வரு­டத்தின் அதி­க­ரித்த வெப்­ப­நிலை குறிப்­பாக அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடுகள் மற்றும் சீனா ஆகி­ய­வற்றை அதிகம் பாதிக்கும் என வல்­லு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர். ஐரோப்­பாவைப் பொறுத்­த­வரை இத்­தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகள் அதிக வெப்­ப ­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளன. 
 
இத்­தா­லியத் தலை­நகர் ரோமில் ஜூலை 18ஆம் திக­திய வெப்­ப­நிலை 41.8 பாகை செல்­சி­ய­ஸாகப் பதி­வாகி இருந்­தது. இதுவே அந்த நகரின் இது­வரை பதி­வான அதிக வெப்­ப­நி­லை­யாக உள்­ளது. கடந்த வரு­டத்தில் இதே மாதத்தில் இதனை விட ஒரு பாகை குறை­வான வெப்­ப­நி­லையே அதி­கூ­டிய வெப்­ப­நி­லை­யாகப் பதி­வாகி இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  
 
புவியின் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு என்­பது வெறு­மனே கொழுத்தும் வெயில், அள­வுக்கு அதி­க­மான மழை­வீழ்ச்சி, காட்டுத் தீ என இயற்கை அனர்த்­தங்­க­ளோடு மாத்­திரம் முடிந்து போகின்ற விட­ய­மல்ல. அது மனித வாழ்வின் அனைத்து அம்­சங்­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.
 
மனித உயிர் இழப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் அதே­வேளை, உலக ஒழுங்கை மாற்­று­வ­துடன் பொரு­ளா­தா­ரத்­திலும் அதிக பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.  ஐரோப்­பியக் கண்­டத்தில் மாத்­திரம் கடந்த வரு­டத்தில் அதி­க­ரித்த வெப்­ப ­நி­லை­யோடு தொடர்­பு­பட்ட கார­ணங்­களால் 62,000 பேர் வரை­யானோர் மர­ணத்தைத் தழு­வி­ய­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
 
அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வரை அங்கே ஆண்­டு­தோறும் 700 வரை­யானோர் மர­ணத்தைத் தழு­வு­வ­தாகப் புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன. எனினும், இதே கார­ணங்­களால் அமெ­ரிக்­காவில் பல மடங்கு மக்கள் ஆண்­டு­தோறும் இறப்­ப­தாக சுயா­தீனத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதற்கு ஆதா­ர­மாக அங்கு மர­ணங்கள் தொடர்­பான பதி­வு­களில் உள்ள தவ­று­களை அவர்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர். 
 
இவை ஒரு­புறம் இருக்க இந்தப் பிராந்­தி­யங்­களில் ஏற்­பட்­டுள்ள காட்டுத் தீ உயிர்­க­ளுக்கும் சூழ­லுக்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. கனடா, அமெ­ரிக்கா, கிரேக்கம், சீனா, ஜோர்தான் எனக் காட்டுத் தீ பல்­லா­யிரக் கணக்­கான ஹெக்டயர் காடு­களை எரித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்தக் காட்டுத் தீயை அணைக்க வழி தெரி­யாது அந்­தந்த நாடுகள் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன.
 
ஜூலை 17ஆம் திக­திய தக­வல்­களின் படி அன்­றைய நாளில் மாத்­திரம் கன­டாவில் 900 இடங்­களில் பெரு­ம­ள­வி­லான காட்டுத் தீ பர­வி­ய­தா­கவும் அவற்றுள் 599 இடங்­களில் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­ வர முடி­யாமல் இருந்த­தா­கவும் செய்­திகள் வெளி­யாகி உள்­ளன. இந்தத் தீப் பர­வலில் 26 மில்­லியன் ஏக்கர் காடுகள் அழிந்து நாச­மாகி உள்­ள­தா­கவும் அந்தத் தக­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன. 
 
இதைப் போன்று உலகின் பல பாகங்­க­ளிலும் அதி­க­ரித்த வெப்­ப­நிலை, மோச­மான மழை­வீழ்ச்சி, புயல், வெள்ளம் எனச் செய்­திகள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இவை என்ன கார­ணத்தால் உரு­வா­கின்­றன என்ற அறி­வியல் பூர்­வ­மான தக­வல்கள் ஒன்றும் இர­க­சி­ய­மா­னவை அல்ல.
 
கைத்­தொழில் புரட்சி என மனித இனத்தால் கொண்­டா­டப்­படும் நவீன கண்­டு­பி­டிப்­புகள், அதன் விளை­வான உற்­பத்­திகள், தொழில் வளர்ச்சி என்­ப­வற்றின் பக்க விளை­வு­களே மனித குலத்தை அச்­சு­றுத்தும் இன்­றைய நிலைக்குக் கார­ண­மாக உள்­ளது. தொழில் வளர்ச்சி, உற்­பத்தி போன்­றவை மனித வாழ்வின் தவிர்க்க முடி­யாத அம்­சங்கள் என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. ஆனால், எமது வாழி­டத்தைப் பணயம் வைத்து இவற்றை அடைய வேண்­டுமா என்­பதே கேள்வி.
 
வாக­னங்கள் மற்றும் தொழிற்­சா­லை­களில் இருந்து வெளி­யாகும் கரி­ய­மில வாயுவின் அளவைக் குறைப்­பது, பசுமைப் புரட்சி, காடு வளர்ப்பு எனப் பல திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டாலும் அவை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தப் படு­கின்­ற­னவா என்­பதில் சந்­தேகம் நீடிக்­கவே செய்­கி­றது.
 
ஏனெனில் முத­லா­ளித்­துவ அர­சாங்­கங்கள் மக்கள் நலன் சார்ந்­த­வை­யாக இல்­லாமல் பெரு முத­லா­ளிகள் மென்­மேலும் சொத்துச் சேர்ப்­ப­தற்கு உதவும் நோக்­கி­லேயே செயற்­பட்டு வரு­வதைப் பார்க்க முடி­கின்­றது. சூழல் பாது­காப்பு தொடர்­பி­லான தொண்டு நிறு­வ­னங்­களும், ஆர்­வ­லர்­களும் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் என்னதான் முயற்சி செய்தாலும் பெரு நிறுவனங்களின் பொருளாதார வளத்துக்கும், ஆட் பலத்துக்கும் முன்னால் நின்றுபிடிக்க முடியாத நிலையே உள்ளது.
 
உலகின் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை மனித குலத்துக்கு எதிரான அச்சுறுத்தல் தொடரவே செய்யும்.
 
தமது பிள்ளைகளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே சிறந்த பெற்றோரின் கடமை. அதேபோல் எமது எதிர்காலச் சந்ததிக்காக ஒரு சிறந்த உலகை விட்டுச் செல்வதும் எம் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. போகிற போக்கைப் பார்த்தால் எமது வாழ்நாளிலேயே உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
 
நன்றி வீரகேசரி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்