Paristamil Navigation Paristamil advert login

அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் பொறுப்புடன் செயற்படுவோம்

அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் பொறுப்புடன் செயற்படுவோம்

14 ஆடி 2023 வெள்ளி 09:50 | பார்வைகள் : 6901


நாம் நமது கவன குறைவினால் செய்யும் சிறிய விடயங்கள் கூட மிக பெரிய இழப்புகளை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக நாம் அறியாமலே செய்யும் சில விடயஙகள் பெரும் விபத்துகளை உருவாக்கி விடுகின்றன. 
 
விபத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம். ஆனால் சில நேரங்களில்   எமது விலைமதிக்க முடியாத உயிரை கூட நாம் இழந்து விடுகின்றோம். இந்த விபத்துகள் எந்த வகையிலும் உருவாகலாம். இவற்றில் முக்கியமானதும் வருடா வருடம் உலகளவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்வதற்கும் காரணமாக அமைவது வாகன விபத்துகளே ஆகும்.
 
அந்தவகையில். கடந்த சில நாட்களாகவே நாடளாவிய ரீதியில் பல வாகன விபத்துகள் இடம் பெற்றுள்ளமையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமையையும் நாம் அறிவோம். ஆயினும் இந்த வருடம் தொடங்கி 6மாதம் முடிவடைந்துள்ள நிலையில் ஆயிரம் உயிர்களை விபத்தில் நாம்  இழந்துள்ளோம் என்பது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
 
 ஆம், இலங்கையில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். 
 
தரை வழி போக்குவரத்தில்  வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்துகள் வாகன விபத்துகள் எனப்படும்.  குறிப்பாக வீதியில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான விபத்துக்கள் நடக்கின்றன.
 
மற்றும் பள்ளத்தாக்குகள் ஆறுகள் உள்ளி;ட்ட நீர் நிலைகளின்  அருகாமையில் செல்லும் போது வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிலோ நீர் நிலைகளிலோ வாகனங்கள் விழுவதனாலும் விபத்துக்கள் உருவாகுகின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன சாரதியின் வாகனம் செலுத்தல் திறன் மற்றும் வாகன  சாரதியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.
 
விபத்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆயினும் வேக கட்டுப்பாடை பின்பற்றாமல் இருப்பது மது அருந்திவிட்டோ, தூக்கத்திலோ வாகனங்களை செலுத்துவது.
 
கைப்பேசியில்; பேசிக்கொண்டு வாகனங்களை செலுத்துதல் ஏனைய வாகனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு தமது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளை நினைக்காமல் ஓட்டபந்தயகாரர்கள் போல சாரதிகள் செயல்படுவது போன்ற காரணங்களும் பெரும்பாலான விபத்துகளுக்கு தலையாய காரணமாக அமைகின்றன. 
 
 மேலும் சன நடமாட்டம் குறைவாக உள்ள வீதிகளில் வாகனங்களை செலுத்துவது போல வாகன நெரிசல்களும் சன நடமாட்டங்களும் அதிகமாக உள்ள இடங்களிலும் சிலர் வாகனங்களை அதிவேகத்தில் செலுத்துகின்றனர். அதுபோல சம தரையில் வகனத்தை செலுத்துவது போல மலையகம் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் போது அதிவேகமாக  வாகனத்தை செலுத்துவதோடு; போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது கிடையாது.
 
இதனால் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவது அதிகமாகவே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம்  இந்த வருட ஆரம்பத்தில் கொழும்பில் இருந்து பாடசாலை சுற்றுலாவிற்காக நுவரெலியா சென்ற பஸ்களில் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் மோதிவிபத்தை ஏற்படுத்தியது.
 
இதில் வேனில் பயணித்தவர்களும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களும் பரிதாபமாக உயிரிழந்ததோடு பாடசாலை மாணவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இதற்கு காரணம் வாகன சாரதியின் கவன குறைவு என்று கூறப்பட்டது.
 
இது போல பல விபத்துகள் தினந்தோறும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மன்னபிட்டிய பஸ் விபத்து 12 உயிர்களை காவுகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் பல வாகன விபத்துகள் இடம் பெற்றுள்ளதோடு அவற்றிலும் பல உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளன. 
 
நாட்டில் எத்தனை கடுமையான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. விபத்துகளில் உயிர் இழப்புகளும் குறைந்தப்பாடில்லை. உண்மையில் எம்முடைய பொறுப்பற்ற செயற்பாடுகளே இது போன்ற விபத்துகளை உருவாக்கி விடுகின்றன.
 
வாகனங்களை செலுத்துபவர்கள் தகுதியான நிலையில் வாகனங்கள் இருக்கின்றனவா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் அது போல வாகனம் செலுத்தும் திறன் இருக்கும் பட்சத்தில் மிக மிக நிதானமான முறையிலேயே வாகனத்தை செலுத்த வேண்டும். 
 
வாகனப்பயணங்கள் என்பது சாரதி என்ற ஒருவருடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, அவரை நம்பி பயணிக்கும் பல உயிர்களுக்கு அவர் பொறுப்பானவர் என்பதனை கவனத்தில் வைத்து வாhகனங்களை செலுத்தும் போது விபத்துகளில் இருந்து எம்மையும் எம்முடன் பயணிக்கும் ஏனையவர்களையும் காத்துக்கொள்ளலாம். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்