Paristamil Navigation Paristamil advert login

வட கொரியா சர்வதேசத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

வட கொரியா சர்வதேசத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

12 ஆடி 2023 புதன் 09:22 | பார்வைகள் : 6408


சூழல் மாசடையும் வகையில் தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்  உலகின் பாரிய பிரச்சினையாகவும் மனித குலத்துக்கு சவால் மிக்க ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது. பெரும்பாலான நாடுகள் தங்கள் தொழிற்சாலை கழிவுகளை கடலில் கலக்க விடுவதாகவும், மேலும் சில நாடுகளில் அவை குடி நீருடன் கலந்து, மக்களுக்கு பாரிய சுகாதாரப்  பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் சர்வதேச ரீதியில் கவலை வெளியிடப்பட்டு வருகிறது.  
 
குறிப்பாக வளர்முக நாடுகளில் இந்த பிரச்சினை பூதாகரமாகி உள்ளதை நாம்  சர்வ சாதாரணமாக காணலாம். நீர்நிலைகள், ஓடைகள், துறைமுகப் பகுதிகள் மற்றும் கடற்கரைகள் என எதையும் விட்டு வைக்காத வகையில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
 
இது ஒருபுறமிருக்க பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் நிலைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நீர் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் துர்ப்பாக்கிய  நிலை  ஏற்பட்டுள்ளது. எனினும், இதன் பாரதூரத்தை எவரும் இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை.
 
இவ்வாறான பின்னணியில், உலகின் சர்ச்சைக்குரிய நாடாக விளங்கும் வடகொரியா சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. அதாவது, ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும்  கழிவுநீரை கடலில் விடுவதை ஜப்பான் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே வடகொரியா சர்வதேச சமூகத்திற்கு  விடுத்துள்ள கோரிக்கையாகும்.
 
"மனிதகுலத்தின் இருப்பிடமாக திகழும் உலகை சீர்குலைக்க முயற்சிக்கும் தீய சக்திகளின் மனிதாபிமானமற்ற  மற்றும் போர்க்குணமிக்க நடவடிக்கையை சர்வதேச சமூகம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிராமல், அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும் அழிக்கவும் ஒன்றிணைய வேண்டும்" என்று  வட கொரியாவின்  நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
சுத்திகரிக்கப்பட்ட புகுஷிமா அணு கழிவு நீரை வெளியேற்றுவது பாதுகாப்பானது என்று ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்   தலைவர் முழுமையாக நம்புகிறார் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை, தென் கொரியா, சீனா மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற அயல்  நாடுகளால்    தொடர்ச்சியாக  வெளியிட்டு  வரப்படும்  கவலையை ஒத்ததாகவே  பியோங்யாங்கின் அறிக்கையும்   அமைந்துள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்ற அச்சத்தை அது எழுப்பியுள்ளது என்றும் கவலை வெளியிடப்படுகிறது.
 
இதேவேளை,  கதிரியக்க தாக்க அச்சம் காரணமாக சீன, புகுஷிமா உட்பட 10 ஜப்பானிய மாகாணங்களில் இருந்து உணவு இறக்குமதிக்கான தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.  
 
அத்துடன்,  சீனாவுக்கு ஜப்பானிய உணவுப் பொருட்கள்  இறக்குமதி செய்யப்படும் பொழுது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பொருட்கள் மீதான  கதிரியக்க ஆய்வுகளை வலுப்படுத்த வேண்டும்  என்றும் கோரியுள்ளது.  
 
இதேவேளை, 2011 புகுஷிமா பேரழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்த  ஐ.நா.வின் ஒப்புதல் இதுவரை  சிறிதும்  பூர்த்தி செய்யப்படவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குநர் நாயகம்  ரபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். மேலும்  ஜப்பானிய மீன்பிடி குழுக்கள் மற்றும் உள்ளூர் மேயர்களை சந்தித்துப் பேசிய அவர்,   அவர்களின் நியாயமான அச்சத்தை ஒப்புக் கொண்டதாக கூறினார்.
 
"எனது மனப்பான்மை, அவர்களின் பிரச்சினைகளை கேட்பது மற்றும் அவர்களுக்கு இருக்கும் இந்த கவலைகள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் விளக்குவதாகும்" என்று கூறிய அவர்  "ஒருவர் புகுஷிமாவுக்கு சென்றால், அது  அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கும். அங்குள்ள அனைத்து  தொட்டிகளும், "ரேடியோ நியூக்லிட் "களைக் கொண்ட ஒரு மில்லியன் தொன்னுக்கும்  அதிகமான நீர் நிறைந்த நிலையில்  காணப்படும். இது கடலில் வெளியேற்றப்படப் போகிறது என்று கற்பனை செய்து பார்ப்பதே மிகுந்த அதிர்ச்சியாக  இருக்கும் எனவே  இவற்றை அனைவரும்  தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
இதனிடையே, புகுஷிமாவின் மீன்பிடித் தொழில் அணுசக்தி பேரழிவிலிருந்து தப்பித்து 12 ஆண்டுகள்  கடந்துவிட்ட நிலையில், டோக்கியோவின் அடுத்த நகர்வு  மீன்பிடித் தொழிலை  முடிவுக்கு கொண்டு வந்துவிடுமோ  என்ற  அஞ்சத்தை  மேலோங்கச்  செய்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டின் புகுஷிமா பேரழிவுக்கு  ஆலையின் அணு உலை மையங்கள் அதிக வெப்பமடைந்தமையும், அதிக கதிரியக்கப் பொருட்களுடன் கூடிய நீரும் காரணமாக அமைந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
தற்போது 1.32 மில்லியன் மெட்ரிக் தொன்  அளவில் கதிரியக்க கழிவு நீரை உருவாக்குகிறது. இது,  ஒலிம்பிக் அளவிலான 500க்கும் மேற்பட்ட  நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது என்று கூறப்படுகிறது. இட நெருக்கடி காரணமாக ஏதாவது ஒரு வழியில் அசுத்த நீரை வெளியேற்ற வேண்டும் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறுகின்றனர். இன்றேல்  அணுமின் நிலையத்தை முழுமையாக செயலிழக்க அது வழிவகுக்கும் என்றும் வாதிடுகின்றனர்.
 
இந்த வகையான பின்னணியில் கழிவு நீர் தொடர்பில் சர்வதேச விஞ்ஞானிகள்  கவலை தெரிவித்துள்ளனர்.  நீண்ட கால பாதுகாப்பிற்கு போதுமான  திட்டங்கள் இல்லை என்று கவலை வெளியிட்டுள்ள அவர்கள், கழிவுநீரில் இருந்து அகற்ற முடியாத கதிரியக்க ஐதரசன்  மற்றும் இரசாயனப்பொருட்கள் என்பன  கடல் சுற்றுச்சூழல் மற்றும் உணவுச் சங்கிலிகளில் படிப்படியாக பாதிப்பை உருவாக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்கள். சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதை  உணர்ந்து சர்வதேசம் விழித்துக் கொள்ளாத  வரையில் உலகிற்கு விடிவு பிறக்காது என்பதே யதார்த்தம். 
 
நன்றி வீரகேசரி
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்