Paristamil Navigation Paristamil advert login

ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்!

ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்!

1 தை 2020 புதன் 16:37 | பார்வைகள் : 8988


நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
 
அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற்றதாக கருத முடியாது .இதுவரை அவர்கள் பெற்ற வெற்றி முழு வெற்றி அல்ல. 19ஆவது திருத்தத்தை அகற்றும் போது தான் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும். அப்படி 19ஆவது திருத்தத்தை அகற்றுவதென்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.
 
எனவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அவர்கள் காத்திருக்க வேண்டும். அத்தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றியை மேலும் புதுப்பித்து அதைவிடக் கூடுதலான வெற்றியைப் பெறுமிடத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு கிட்ட வரலாம். அவ்வாறு வரலாம் என்று நம்புவதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.
 
ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியின் அலை இன்னமும் அடங்கவில்லை. சாதாரண சனங்களைக் கவரும் விதத்தில் கோட்டாபய முன்னெடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் அந்த வெற்றி அலையைத் தெடர்ந்து தக்க வைக்க முயற்சிக்கிறார். அந்த வெற்றி அலை வரும் தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தும். இது முதலாவது காரணம்.
 
புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை. இதன் மூலம் ஆகக் கூடிய பட்சம் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளாலும் ஓரளவுக்கு சிங்கள கிறிஸ்தவ வாக்குகளாலும் வெல்லலாம் என்று ராஜபக்சக்கள் நம்புகிறார்கள். இது இரண்டாவது காரணம்.
 
மூன்றாவது காரணம் வலிமையான எதிர்க்கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமை போட்டி ஒரு முடிவுக்கு வரவில்லை. வந்தாலும் சஜித் பிரேமதாசவின் கீழ் அக்கட்சியானது ராஜபக்சக்கள் பெறக்கூடிய வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் என்று நம்பக்கூடிய ஒரு நிலைமை இன்னும் தோன்றவில்லை.
 
நாலாவது காரணம் முக்கியமானது. அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னரே ஒரு பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கும். ஜெனிவா கூட்டத் தொடரில் அரசாங்கம் மேற்கு நாடுகளோடு செங்குத்தாக மோத வேண்டி வரலாம். ஏற்கெனவே சுவிஸ் தூதரக உள்ளூர் ஊழியர் தொடர்பில் ஒரு மோதல் தொடங்கி விட்டது. அதோடு ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அத்தீர்மானம் இலங்கைத்தீவின் இறைமையை மீறுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தீர்மானத்தை அவர்கள் எதிர்க்கப் போகிறார்கள்.
 
ஆனால் அது லேசான காரியம் அல்ல. அப்படி என்றால் அதாவது தீர்மானத்தை மீளாய்வு செய்வது என்று முடிவெடுத்தால் அதற்கான வேண்டுகோளை ஐ.நாவுக்கு கொடுக்க வேண்டும். அதையும் ஜனவரி 18க்குள் கொடுக்க வேண்டும் என்று விடயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்த வேண்டுகோளை மனித உரிமைகள் பேரவை பரிசீலனைக்கு எடுத்தால் அடுத்த கட்டம் எப்படி அமையும்? அந்த தீர்மானத்துக்கு இரண்டு தடவைகள் கால நீடிப்பு வழங்கியிருக்கும் ஒரு பின்னணியில் அதை இப்பொழுது கைவிடுவதாக கூறுவதை உலக சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?
 
மேலும் சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான 99 ஆண்டு கால குத்தகை உடன்படிக்கையை கைவிட முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஓர் அரசாங்கம் வெளி நாட்டு கொம்பனி ஒன்றுடன் செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கையை கைவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு வெளிநாட்டு கொம்பனியோடு செய்து கொண்ட உடன்படிக்கையை கைவிட முடியாது என்றால் உலக சமூகத்தோடு ஒத்துப் போய் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை ஒருதலைப்பட்சமாக மீற முடியுமா?
 
ஐ.நா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். புதிய அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சரும் உட்பட ஏனைய அமைச்சர்களும் அதைத் திரும்ப திரும்பக் கூறுகிறார்கள். ஐ.நா தீர்மானத்தை பொறுத்தவரை அதைக் கைவிட்டாலோ அல்லது மீளாய்வுக்குட்படுத்தினாலோ அவர்களுக்கு வெற்றி தான் அதை மீளாய்வு செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு வெற்றி தான்.
 
ஒரு கதைக்காக அரசாங்கம் ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வெற்றி பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அது மிக அபூர்வமான ஒரு நிகழ்தகவு. ஒரு கதைக்காக அப்படி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் அது தென்னிலங்கையில் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்படும். தமது யுத்த வெற்றிகளை தடுக்க முற்படும் வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராக நாடு தனது இறைமையை நிலைநாட்டியிருப்பதாக அது காட்டப்படும். புதிய அரசாங்கம் அனைத்துலக அரங்கில் பெற்ற சாதனைக்குரிய பெரிய வெற்றியாக அது கொண்டாடப்படும்.
 
அல்லது தீர்மானத்தை தோற்கடிப்பதில் அரசாங்கம் வெற்றி பெறத் தவறினால் அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தான். அது ஐ.நா.வோடும் மேற்கு நாடுகளோடும் மோதும் ஒரு நிலைமையை உருவாக்கும். தமது யுத்த வெற்றிகளை தட்டிப் பறிக்க முற்படும் அல்லது தமது வெற்றி நாயகர்களை குற்றவாளிகளாக காட்டும் ஐ.நாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக சிங்களக் கூட்டு உளவியலை தூண்டிவிடுவது இலகுவாய் இருக்கும்.
 
எனவே வரும் மார்ச் மாதம் நிகழவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடர் எனப்படுவது இலங்கை தீவை பொறுத்தவரை உணர்ச்சிகரமான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு கூட்டத் தொடராக அமையலாம். அனேகமாக அது தேர்தல் பிரச்சார காலத்திற்கு சிறிது முன்பாக வரும். எனவே ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக சிங்களப் பொது உளவியலை திருப்புவதற்கு அது உதவும். சிங்கள-பௌத்த பொது உளவியலை யாராவது ஒரு அல்லது பல பொது எதிரிகளுக்கு எதிராகத் திருப்புவதன் மூலமே சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அலையைக் கிளப்பலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவ்வாறு தான் நடந்தது.
 
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஏற்படக் கூடிய திருப்பங்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் திட்டமிடலாம்.
இப்படிப் பார்த்தால் ஐநா தீர்மானத்தை மீளாய்வு செய்தாலும் அது அவர்களுக்கு வெற்றி வெற்றிதான். அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியுற்றாலும் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான். எனவே ஐ.நா கூட்டத் தொடரை முன்வைத்து தென்னிலங்கையில் சிங்களக் கூட்டு உளவியலை புதிய அரசாங்கம் தனக்கு வசதியாகக் கையாள முடியும். இதன் மூலம் தமக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குரிய வெற்றியை நோக்கித் தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் திட்டமிடுவார்கள்.
 
 
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால்தான் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி அதன் முழுமையை அடையும். இல்லையென்றால் அது ஓர் அரை வெற்றிதான். 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதற்கு மட்டுமல்ல அதற்கும் அப்பால் ஐ.நா. தீர்மானத்தின் விளைவுகளில் இருந்து தப்புவதற்கும் அது அவர்களுக்குத் தேவை. ஏனெனில் ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் முன்னைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நிலைமாறு கால நீதியை நாட்டில் ஸ்தாபிப்பதற்காக என்று சொல்லி சில கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. புதிய சட்ட மூலங்களின் மூலம் மேற்படி கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
 
அவையாவன காணாமல் போனவர்களுக்கு அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், சாட்சிகளையும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றவையாகும்.
 
இவ்வலுவலகங்களை பாதிக்கப்படட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவற்றுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தியிருக்கிறார்கள். எனினும் ஐ.நா. மற்றும் மேற்கு நாடுகள் அக்கட்டமைப்புக்களைச் சாதகமாகப் பார்க்கின்றன. நம்பிக்கையோடு பார்க்கின்றன. இந்த அலுவலகங்கள் புதிய சட்டங்களின் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறு புதிய சட்டங்களை நிறைவேற்றுவது என்றால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அவ்வாறு முன்னைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தான் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே அவற்றை அகற்றுவதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.
 
அவ்வாறு உருவாக்கப்பட்ட மேற்படி கட்டமைப்புக்கள் மூன்றும் முன்னைய பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் கீழ் இயங்கி வந்தன. அவை உருவாக்கப்படுவதற்கான சட்டங்களின்படி அவை சுயாதீனமான கட்டமைப்புகள் ஆகும்.
 
ஆனால் புதிய அரசாங்கம் இம்மாதத்தின் இரண்டாம் வாரமளவில் வெளியிட்ட ஒரு புதிய அரசிதழின்படி மேற்படி கட்டமைப்புகள் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது ஓர் அமைச்சின் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
 
புதிய அமைச்சரவையில் நீதி ,மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நிமால் சிறிபால டி சில்வா இருக்கிறார். “ராஜபக்ச அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒரு போதும் அடிபணியாது நாட்டுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளாது” என்று கடந்த கிழமை கூறியிருக்கிறார். “ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் குப்பையில் தூக்கி வீசும்” என்றும் கூறியிருக்கிறார்.
 
எனவே ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் முன்னைய அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்புகளை சட்ட ரீதியாக அகற்றுவதற்கும் புதிய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. எனவே ஐ.நா தீர்மானத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சார பிரச்சாரக் களத்தை கொந்தளிப்பாக பேணுவதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்கு காரணமாக இருந்த அதே இன அலையை அதன் அடுத்த கட்டத்துக்கும் புதுப்பிக்கலாம். இதன்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை கைவிடுவது அல்லது மாற்றுவது என்று முடிவெடுத்தால் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.
 
எனவே ஐ.நாத் தீர்மானமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான அடுத்த பொதுத் தேர்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. புதிய அரசாங்கம் இந்த விடயங்களை தேர்தல் வெற்றி என்ற நோக்கு நிலையிலிருந்து அணுகுமாக இருந்தால் அது ஐ.நாவோடும் மேற்கு நாடுகளோடும் மோதலுக்குப் போவது தவிர்க்க முடியாதது. போரில் ராஜபக்ஸ சகோதரர்கள் பெற்ற வெற்றிதான் அவர்கள் பெற்றுவரும் தேர்தல் வெற்றிகளுக்கு முதலீடு. அப்போர் வெற்றிகளின் விளைவுதான் ஐ.நாத் தீர்மானம். இப்பொழுது அத்தீர்மானத்தை எதிர்ப்பதே அவர்களுக்கு அடுத்தடுத்த கட்டத் தேர்தல் வெற்றிகளுக்கு முதலீடாக அமையப்போகிறதா?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்