நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...!!
19 ஆவணி 2018 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 9238
கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.
படகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
ஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.அது போல கொக்கிளாய் முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.
கொக்கிளாயிலும் நாயாற்றிலும் சுமார் 500 வரையான படகுகள் சகிதம் சிங்கள மீனவர்கள் தற்காலிகமாக வந்து தங்குகிறார்கள். பிரதேச செயலகத்தில் அனுமதி பெறாமலும் உள்ளுர் மீனவ சங்கங்களிடம் தெரிவிக்காமலும் அவர்கள் வாடிகளை அமைந்திருக்கிறார்கள்.
இதில் பிலியந்தலையைச் சேர்ந்த நிசாந்த என்ற பெருஞ்செல்வந்தருக்குச் சொந்தமான 40 படகுகளும் அடங்கும். சிலாபத்தில் அவர்களுடைய கடலில் மீன்பிடி சீசன் முடிந்து வடக்குக் கடலில் அது ஆரம்பமாகும் போது அதாவது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்பு அவர்கள் வடக்கை நோக்கி வருகிறார்கள்.
இங்கு வந்து தமிழ் மீனவர்;களுக்குரிய கடல்படு; அறுவடையில் பங்கு கேட்கிறார்கள். ஆழ்கடல் மீன்பிடித் தொழில் இலங்கையர்கள் யாவருக்கும் பொதுவானது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம்.ஆனால் கடலோரங்கள் அவ்வப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களுக்கே உரியவை.
வழமையாக ஆண்டு தோறும் மார்ச்சிலிருந்து ஒக்ரோபர் மாதத்திற்கு இடையில் சிலாபத்திலிருந்து சிங்கள மீனவர்கள்; முல்லைத்தீவு நோக்கி வருவதுண்டு. இவர்கள் ஒப்பீட்டளவிற் சிறிய தொகையினர்.(78 படகுகள்) அதோடு இங்குள்ள மீனவ சங்கங்களில் பதிவு செய்து தமது தொழிலை முன்னெடுத்து வருபவர்கள். ஆனால் இப்பொழுது வருபவர்கள் அப்படியல்ல. அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகிறார்கள்.
ஒரு பதிவும் இல்லை. கடற்தொழிலாளர் சங்கங்களிடம் அனுமதி பெறுவதுமில்லை. படைத்தரப்பே அனுமதி வழங்கி பாதுகாப்பையும் கொடுக்கிறது. நாயாற்று முகத்துவாரத்தில் கடற்படை முகாம் ஒன்று உண்டு.அந்தக் காணி கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமானது. முன்பு அங்கு ஒரு யூதா ஆலயம் இருந்தது. கொக்கிளாய் முகத்துவாரத்தில் ஒரு கடற்படை முகாமும் ஒரு ராணுவ முகாமும்; உண்டு. இந்த முகாம்களிருக்கும் துணிச்சலில்தான் சிங்கள மீனவர்கள் கொக்கிளாய்,நாயாற்றை நோக்கி வருகிறார்கள்.
அவர்கள் கடற்றொழில் திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். வெளிச்சத்தைப் பாய்ச்சி மீன் பிடிப்பது, டைனமைற்றை வெடிக்கச் செய்து மீன் பிடிப்பது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவது,காவுளாய் எனப்படும் செடியைப் பயன்படுத்தி கணவாய் பிடிப்பது போன்ற சட்ட மீறலான மீன்பிடி முறைகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்ல கரைவலைச் சட்டத்தின் படி கரையிலிருந்து 2700 மீற்றர் வரையிலுமே தொழில் செய்யலாம்.
ஆனால் சிங்கள மீனவர்கள் 5000 – 6000 மீற்றர் வரை போகிறார்கள். இவ்வளவு தூரத்திற்குப் போடப்பட்ட வலையை மனிதர்கள் கரையிலிருந்து இழுக்க முடியாது. எனவே உழவு இயந்திரத்தில் வீஞ்ச் எனப்படும் ஓர் எந்திரத்தைப் பொருத்தி சிங்கள மீனவர்கள் வலையை இழுத்து வருகிறார்கள். இதனால் கடலின் அடியில் உள்ள பவளப் பாறைகள் அழிக்கப்பட்டுவிடும். அண்மை ஆண்டுகளில் சின்னப்பாடு உடப்பு போன்ற பகுதிகளில் மீன் உற்பத்தி குறைந்ததுக்கு இதுவே காரணம் என்று மீன்பிடிச் சங்கங்கள் கூறுகின்றன. கொக்கிளாய் களப்புப் பகுதியில் இறால்களின் இனப்பெருக்கம் அதிகம் என்பதால் அங்கு இயந்திரப்படகு பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் வெளியிலிருந்து வரும் மீனவர்கள் இத்தடையை மதிப்பதில்லை.
இவ்வாறு தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடிப்பதால் சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்களுக்கு உரிய கடல் அறுவடையைப் பங்கு போடுவது மட்டுமல்ல அவர்கள் கடலின் இயற்கைச் குழலை அழிப்பது அதைவிடப் பாரதூரமானது என்று கூறுகிறார் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன். தடை செய்யப்படட முறைகளால் மீன்பிடிக்கும் போது ஒரு கிலோ சிறு மீன்களை பிடிக்க கிட்டத்தட்ட பதினெட்டு கிலோ குஞ்சு மீன்கள் கொல்லப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் போது பெரிய மீன்கள் உயர போய்விடுகின்றன அதாவது கரையிலிருந்து விலகி ஆழ்கடலை நோக்கிப் போய்விடுகின்றன என்றுமவர் கூறுகிறார். குறிப்பாகக் கூடுகட்டிக் கணவாய் பிடிக்கும் போது காவுளாய் எனும் தாவரத்தை நீருக்கடியில் கயிற்றில் கட்டிவிடுவார்கள். அந்தக் கயிற்றில்; ஊரிகள் படிந்து அக்கயிறு காலப் போக்கில் கூராகிவிடும். இது சிறு தொழில் செய்பவர்களின் வலைகளை அறுத்துவிடும் என்றும் ரவிகரன் சுட்டிக்காட்டுகிறார்.கடந்த சில ஆண்டுகளாக ரவிகரன் போராடும் மக்கள் மத்தியிலேயே காணப்படுகிறார்.
இது தொடர்பாக நடந்த சந்திப்புக்களில் கொழும்பிலிருந்து வரும் அமைச்சரகள் கலந்து கொண்டு வாக்குறுதிகளை வழங்கிய பின்னரும் நிலமைகள் மாறவில்லை. 2016 ஆம் ஆண்டு முல்லைத்தீவுக்கு வந்த அப்போதைய கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றார். ஆனால் எதுவும் மாறவில்லை. அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்போதைய அமைச்சர் வந்து போனார்.
ஆனால் அடுத்த நாள் இரவு படகுகள் எரிக்கப்பட்ருக்கின்றன. படகுகள் எரிக்கப்பட்டதையடுத்து விவகாரம் அரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி கடந்த வியாழக்கிழமை சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நன்றி - சமகளம்