Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலையில் தொடங்கப் போகும் மகிந்தவின் வீழ்ச்சி

திருகோணமலையில் தொடங்கப் போகும் மகிந்தவின் வீழ்ச்சி

11 ஆவணி 2014 திங்கள் 04:03 | பார்வைகள் : 9772


சிறிலங்காவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

சீன அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையில், விமானப் பராமரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால், அதுபற்றித் தெரியப்படுத்துமாறு அவர் கோரியிருந்தார்.

அந்த திட்டம், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறுகின்ற ஒன்று என்றும், அது இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது இதுபோன்றதொரு கேள்வியை, நாடாளுமன்றத்தில் 2003 ஒக்ரோபர் 12ம் நாள் எழுப்பியிருந்தார்.

“இந்தியாவின் தேவைகள் குறித்து நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய- சிறிலங்கா உடன்பாடு குறித்து உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அதன்படி, திருகோணமலைத் துறைமுகம், மற்றும் சிறிலங்காவின் ஆள்புல ஒருமைப்பாடு குறித்து இந்தியா கரிசனை கொள்வதற்கு உரிமை உள்ளது.

திருகோணமலையைச் சுற்றி, விடுதலைப் புலிகள் அமைத்துள்ள புதிய தளங்கள், துறைமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்” என்று கதிர்காமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச, கதிர்காமரைப் பாராட்டி விட்டு அந்த விவகாரத்தை தான் எழுப்பினார்.

அதுமட்டுமன்றி, திருகோணமலைக்குப் பயணம் செய்து அங்குள்ள உண்மை நிலவரங்களை பார்வையிடுவதற்காக, உலங்குவானூர்தி ஒன்றைத் தருமாறு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் அவர் கோரினார்.

ரணில் உலங்குவானூர்திக்கு அனுமதி அளித்தார்.

அதேவேளை, அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த ஒஸ்ரின் பெர்னான்டோ அதனை எதிர்த்தார்.

மகிந்த உலங்குவானூர்தியில் சென்று, திருகோணமலையில் பொறுப்பாக இருந்த கடற்படை அதிகாரிகளைச் சந்தித்தார்.

அப்போது, கிழக்குத் தளபதியாக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட இருந்தார்.

இந்தப் பயணத்தின் போது, மகிந்தவுக்கு அவர் நண்பனானார்.

விடுதலைப் புலிகளால், திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை ஒன்றை மகிந்தவிடம் கொடுத்தார் வசந்த கரன்னகொட.

இந்த அறிக்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கைகளுக்குச் சென்றது. இறுதியில் அது வெளியிடப்பட்டது.

அதன் பிரதி ஒன்றை இந்தியாவும் பெற்றுக் கொண்டது.

முடிவாக, 2003 நொவம்பர் மாதம் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று அமைச்சுக்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சை சந்திரிகா தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டதற்கு திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தான் பிரதானமான காரணம்.

சந்திரிகா 2003 நொவம்பர் 4ம் நாள் மூன்று அமைச்சுக்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டார்.

அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ரணிலுக்கு சந்திரிகா எழுதிய கடிதம் ஒன்றில், திருகோணமலைத் துறைமுகத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக உள்நாட்டு, வெளிநாட்டு கடற்படை அறிக்கைகள் கூறுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நகர்வின் பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அவர், இந்த அச்சுறுத்தல் குறித்தும் கூடப் பேசினார்.

அவரது ஆலோசகரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லக்ஸ்மன் கதிர்காமர், தான் இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த போது, திருகோணமலைத் துறைமுக விவகாரம் இந்தியாவுக்கு முக்கியமானது என்று தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில், பாதுகாப்புச் செயலராக இருந்த ஒஸ்ரின் பெர்னான்டோ, பின்னர் எழுதிய நூலில், அமைச்சுக்களை சந்திரிகா பொறுப்பேற்றது மற்றும் ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்ததில் இந்தியாவின் மறைகரம் பின்னணியில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஜேவிபியையும் அப்போது இந்தியத் தூதுவராக இருந்த நிருபம் சென்னே ஒன்றுபடுத்தும் கருவியாக இருந்தார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இருகட்சிகளும் சந்தித்துக் கொண்டதாக அறிக்கைகள் கூறின.

திருகோணமலைத் துறைமுகத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது இந்தியாவின் கவலையாக இருந்திருந்தால், திருகோணமலையில் அமைக்கப்படும் சீன விமான பராமரிப்பு திட்டம், இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற ரணிலின் கருத்தும் சரியானதே.

இந்திய- சிறிலங்கா உடன்பாட்டின் கீழ் திருகோணமலைத் துறைமுக விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் உரிமையை இந்தியா கொண்டுள்ளதாக, ரணிலும், கதிர்காமரும் கூட வாதிடுகின்றனர்.

இந்திய - சிறிலங்கா உடன்பாட்டின் இணைப்பாக உள்ளடக்கப்பட்டுள்ள, சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும், ஒப்பமிட்ட கடிதத்தில், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தையோ அல்லது வேறெந்த துறைமுகத்தையோ, எந்தவொரு வெளிநாட்டுக்கும் இராணுவ அல்லது இராணுவப் பயன்பாட்டற்ற தேவைக்கும் வழங்குவதில்லை என்று சிறிலங்கா இணங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், திருகோணமலைத் துறைமுகம் தான், இந்திய - சிறிலங்கா உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்குக் காரணமாகும்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை அமெரிக்காவுக்கு சிறிலங்கா குத்தகைக்கு விடவுள்ளதாக, கிடைத்த இரகசிய அறிக்கையை அடுத்து, ஜே.ஆர். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளித்தது இந்தியா.

ஜே.ஆரை வீட்டுக்கு அனுப்ப விரும்பியது இந்தியா.

ஆனால், தனது அதிபர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜே.ஆர். இந்தியாவிடம் சரணடைந்தார்.

இந்த உண்மைகளைக் கவனத்தில் கொள்ளும் போது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருகோணமலையை அமெரிக்காவுக்கு வழங்க முற்பட்டதன் விளைவாக ஜே.ஆர், எல்லாவற்றையும் கைவிட்டார்.

திருகோணமலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த விடுதலைப் புலிகளுக்கு இடமளித்ததால், ரணில் தனது அரசாங்கத்தை இழந்தார்.

தற்போது, திருகோணமலைக்குள் நுழைவதற்கு சீனாவை அனுமதித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

ரணிலுக்கு நடந்ததே மகிந்தவுக்கும் நடக்கும் என்று நாம் கணிக்க முடியாது.

எவ்வாறாயினும், ஜேஆரின் காலத்தில், ரஸ்யா சார்பானவர்களாக காந்திகள் இருந்ததால், அமெரிக்காவை இந்தியா எதிரியாக கருதியது.

திருகோணமலைக்கு அமெரிக்கா வருகிறது என்ற செய்தி அதன் காதுகளை எட்டிய போது, இந்தியா பயந்தது.

ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், புலிகள் இந்தியாவின் எதிரியானார்கள்.

திருகோணமலையைச் சுற்றி விடுதலைப் புலிகள் தமது அரண்களைப் பலப்படுத்திய போது, இந்தியா அச்சம் கொண்டது.

சீனா, இன்று இந்தியாவின் எதிரியல்ல. ஆனால், இந்தியா சந்தேகிக்கிறது.

திருகோணமலையில் நுழைய சீனாவுக்கு மகிந்த அனுமதி அளித்தால், அதுவே ஆட்சியின் முடிவாக இருக்கும்.

- புதினப்பலகை

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்