நரேந்திர மோடி விடயத்தில் தப்பாகிப் போன இலங்கை அரசின் கணக்கு!
23 ஆனி 2014 திங்கள் 19:56 | பார்வைகள் : 9679
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொண்டிருந்தார்.
நரேந்திர மோடியை முதலாவதாக தமது நாட்டுக்கே வரவழைக்கப் பல நாடுகள் போட்டி போட்டன.
அவர் இலங்கைக்கே முதலில் பயணம் மேற்கொள்வார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.
பின்னர், அவர் ஜப்பானுக்குச் செல்லப் போவதாக தகவல்கள் கசிந்தன.
கொழும்பு ஊடகங்களும், ஜப்பானிய ஊடகங்களும், நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் தமது நாட்டுக்கே என்று செய்திகளையும் வெளியிட்டன. ஆனால், அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொண்டிருந்தார்.
நரேந்திர மோடியுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் அவரை முதல் முதலாக கொழும்புக்கு வரவழைக்கவும், இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது உண்மை.
ஆனால், அவர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொள்ளாததையிட்டு இலங்கை அரசாங்கம் வருத்தம் கொண்டிருக்கும் என்று கருத முடியாது.
ஏனென்றால், நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அவர் வெளியிட்ட சில இறுக்கமான நிலைப்பாடுகள், இலங்கை அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கவில்லை.
13வது திருத்தச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதலாவது சந்திப்பிலேயே எடுத்துக் கூறியிருந்தார்.
இத்தகைய பின்னணியில், நரேந்திர மோடி தனது முதலாவது பயணத்தை, கொழும்புக்கு மேற்கொண்டால், அதுபற்றி மேலும் வலியுறுத்துவார் என்பதையும், அதுபற்றிய புதிய வாக்குறுதிகளை எதிர்பார்ப்பார் அல்லது ஒரு காலக்கெடுவைக் கொடுக்கலாம் என்றும் கொழும்பு எதிர்பார்த்திருக்கும்.
எனவே, நரேந்திர மோடி தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, இலங்கைக்கு மேற்கொள்ளாததையிட்டு கொழும்பு அதிகம் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு பின்தள்ளப்படுவதையிட்டு கொழும்பு சற்று கிலேசமடைந்திருக்கலாம்.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்ளாமல், இமாலய நாடான பூட்டானுக்கு எதற்காக தமது முதல் பயணத்தைத் தெரிவு செய்தார் என்பது முக்கியமான விவகாரம்.
இலங்கைக்கோ, பாகிஸ்தானுக்கோ அவர் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தைத் தெரிவு செய்திருந்தால், அந்த இரண்டு நாடுகளுமே, தம்மை அதிக முக்கியத்துவத்துடன் இந்தியா பார்க்கிறது என்று கருதிவிடக் கூடிய சூழல் இருந்தது.
பாகிஸ்தானுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாலும், இருநாடுகளுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன.
அதைவிட, இந்தியா தனக்கு இணையான நாடாக பாகிஸ்தானை ஒரு போதும் கருதியதில்லை.
ஆனால், வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தையிட்டுத் தான் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் தீவிரவாதம் குறித்து இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்தியா தனக்குச் சவாலாக கருதும், சீனாவும் பாகிஸ்தானும் நெருக்கமாகி வருவதை விரும்பவில்லை.
முன்னர் அமெரிக்காவின் நிழலில் இருந்த பாகிஸ்தான் இப்போது கணிசமாக சீனாவின் சிறகுக்குள் வந்து விட்டது.
இத்தகைய பின்னணியில், பாகிஸ்தானுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால், சீனாவுடன் இணைந்து கொண்டு அந்த நாடு இந்தியாவுக்கு தண்ணி காட்டத் தொடங்கிவிடும்.
அதுபோலவே, சீனாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் இலங்கைக்கும், முக்கியத்துவம் கொடுக்க நரேந்திர மோடி விரும்பவில்லை.
ஏற்கனவே, சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது கொழும்பு.
இந்தியா கைவிட்டால் இருக்கவே இருக்கிறது சீனா என்ற வகையில், இலங்கை செயற்படத் தொடங்கி நெடுங்காலமாகி விட்டது.
இந்தப் பின்புலத்தில், நரேந்திர மோடி முதலாவதாக கொழும்புக்கு வந்திருந்தால், இலங்கை அரசின் தலைக்கனம் இன்னும் அதிகரித்திருக்கும்.
இலங்கைக்கு, இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கருதி, தனது பேரம் பேசலை ஆரம்பித்திருக்கும். இதனை இந்தியா சரியாகவே கணக்குப் போட்டது.
அதனால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதல் வெளிநாட்டுப் பயணத்தை எந்த நாட்டுக்கு மேற்கொள்ளலாம் என்று சவுத் புளொக்கில் ஆலோசனை நடத்தப்பட்ட போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் குறித்துப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில், சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், கொழும்பு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜக் ஷ முதல் வேலையாக சம்பூர் அனல் மின் திட்டத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அது இந்தியாவை குறிப்பாக நரேந்திர மோடியை குளிர்விக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில், சம்பூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகள் வரும் ஒக்டோபர் மாதமளவில், ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.
வரும் ஒக்டோபர் மாதம், மாத்தளையில் இந்தியாவின் 450 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் காந்தி மண்டபத் திறப்பு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கும் திட்டத்தில் கொழும்பு இருக்கிறது.
ஒருவேளை, அவர் கொழும்பு வரும் போது, அதேநாளில் சம்பூர் அனல் மின் நிலையக கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும் விழாவையும் கூட நடத்த அரசாங்கம் முயற்சிக்கலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்த நிகழ்வுக்கு வர இணங்க வைக்க வேண்டியது முக்கியமானதொரு சிக்கல்.
ஏனென்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த சில மாதங்களுக்கு தொடர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அவற்றில் சார்க், ஆசியான், பிறிக்ஸ் மாநாடுகளும், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டமும் அடங்கியுள்ளன..
வெளிநாடுகளுடனான உறவுகளுக்கு நரேந்திர மோடி முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தாலும், மன்மோகன் சிங் போன்று அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஒருவராக இருக்கமாட்டார் என்றே கருதப்படுகிறது.
சீரழிந்து போயுள்ள நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் வரை, வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரைக்கும் தவிர்க்கவே அவர் விரும்புவதாகத் தெரிகிறது.
இது இலங்கை அரசாங்கம் அவரை கொழும்புக்கு அழைப்பதில் எதிர்நோக்கவுள்ள ஒரு சிக்கல்.
அடுத்து, இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று புதுடில்லி வலுவாகவே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியப் பிரதமராகப் 10 ஆண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங், உலகெங்கும் சுற்றிய பிரதமராக இருந்த போதிலும், அதிகாரபூர்வ பயணமாக ஒரு போதும் இலங்கைக்கு வந்திருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எத்தனையோ முறை அழைத்தும் அவரை கொழும்புக்கு கொண்டு வந்து சேர்க்க முடியாமல் போனது.
கடைசியாக, கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் வாய்ப்பையும், அவர் தமிழ்நாட்டின் எதிர்ப்பினால் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஒரே ஒரு முறை சார்க் மாநாட்டுக்காக, 2008ஆம் ஆண்டில் கொழும்பு வந்திருந்தார் மன்மோகன் சிங்.
ஆனால், இலங்கை அரசின் விருந்தினராக அவர் ஒருபோதும் வரவில்லை.
இது இலங்கை அரசுக்கு ஒரு சங்கடமான விவகாரமாகவே இருந்து வந்தது.
ஆனால், இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை கொழும்புக்கு விருந்தினராகச் செல்வதில்லை என்ற உறுதியைக் கடைப்பிடித்திருந்தார் மன்மோகன் சிங்.
இப்படிப்பட்ட நிலையில், நரேந்திர மோடியும் கூட, அதே எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம்.
அதாவது இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கலாம்.
அது இலங்கை அரசுக்கு சிக்கலான விடயம்.
அதாவது 13வது திருத்தம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் ஒரு போதும் தயாராக இல்லை.
இந்தநிலையில், இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மறக்கவில்லை என்று காட்டுவதற்கு, சம்பூர் அனல்மின் திட்டத்தை அரசாங்கம் பயன்படுத்த முனையலாம்.
ஆனால், அதற்கு நரேந்திர மோடி அரசாங்கம் அவ்வளவு இலகுவாக உடன்படுமா என்ற கேள்வி உள்ளது.
அதேவேளை, சீனாவின் ஆதிக்கம் விரிவுபடுத்தப்படுவதை தடுப்பதில் தமது அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை தனது முதல் பயணத்திலேயே நிரூபித்துள்ளார் நரேந்திர மோடி.
பூட்டானுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கு எதிராக, அதனைச் சுற்றியுள்ள நாடுகளை திருப்பும் சீனத் திட்டத்தை முறியடிப்பதற்கானதேயாகும்.
ஏற்கனவே, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் சீனா நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் கூட, துறைமுகம் ஒன்றை அமைக்க சீனாவின் தயவை நாடியுள்ளது பங்களாதேஷ்.
இத்தகைய பின்னணியில், பூட்டானையும் தன் பக்கம் திருப்ப சீனா முயன்று வந்தது.
அதுமட்டுமல்லாமல், தெற்காசியப் பிராந்திய நாடுகளின் ஆதரவை வைத்துக் கொண்டு, சார்க் அமைப்புக்குள்ளேயும் நுழைய சீனா முயன்றது.
ஏற்கனவே சீனாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பினும், சார்க் அமைப்பினுள் சீனா நுழைந்தால் அது தெற்காசியாவில் இந்தியாவினது முக்கியத்துவத்தை இழக்கச் செய்து விடும்.
எனவே இந்தியா இந்த விவகாரத்தில் மிக கவனமாகவே நடந்து கொள்ள முனைகிறது.
பூட்டான் பயணத்தின் போது, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அந்த நாட்டில் இடமளிக்கப்படாது என்ற உறுதிமொழியை பெற்று வந்துள்ளார் நரேந்திர மோடி.
இது, சீனாவின் தயவை விரும்பும் அல்லது அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்ட முக்கியமான செய்தியும் கூட.
சீனாவுடன் நெருங்கிச் செல்வதற்கு இந்தியா இடமளிக்காது என்ற செய்தி இலங்கைக்கும் கூட அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில், சீனாவை வைத்து இந்தியாவையும் அமெரிக்காவையும் கையாளலாம் என்ற இலங்கையின் கணக்கு எந்தளவுக்கு சரியாகும் என்று கூறமுடியாது.
அதாவது சீனாவைக் காட்டி பேரம் பேச முனைவதற்கு இந்தியா இடமளிக்காது என்ற சமிக்ஞை, தெளிவாக காட்டப்படுமிடத்து, கொழும்பு தானாகவே 13ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி உந்தப்பட வாய்ப்புள்ளது.
இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, புதுடில்லியை மிகச் சுலபமாக கையாளலாம் என்று ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்தினால் போடப்பட்ட கணக்கு தவறாகி கொண்டே வருகிறது போலவே தோன்றுகிறது.
- ஹரிகரன்