Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவைச் சீர்குலைப்பதற்கான களமாக பயன்படுகிறதா இலங்கை?

இந்தியாவைச் சீர்குலைப்பதற்கான களமாக பயன்படுகிறதா இலங்கை?

4 வைகாசி 2014 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 9315


கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குள் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்லது அதற்கான ஆளணியையும் தகவல்களையும் திரட்டுவதற்கான களமாக பாகிஸ்தான் கொழும்பிலுள்ள தமது தூதரகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் ஹசேன் என்ற முஸ்லிம் நபர் சென்னையில் கைது செய்யப்பட்டமை, சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை அடுத்து, இந்த விவகாரம் இன்னும் தீவிரம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சென்னையில், கண்டியைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மறுநாளே ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புக்கு, யார் காரணம் என்று இந்தப் பத்தி எழுதப்படும் வரை கண்டறியப்படவில்லை.

பொதுவாகவே, இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், அல்லது தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், அதனை பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி சந்தேகிப்பது வழக்கம்.

ஆனால், இந்தக் குண்டுவெடிப்புக்கு, நக்சலைட் எனப்படும் இடதுசாரித் தீவிரவாதிகள், அல்லது வடகிழக்கு மாநிலங்களில் செயற்படும் ஏதாவது தீவிரவாத அமைப்புக்கூட பொறுப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு.

ஏனென்றால், அசாம் தலைநகர் கௌகாத்தி செல்லும் ரயில், சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் வந்து நின்ற போது தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில், நக்சல்களினது ஆதிக்கமும் அதிகம், ஏனைய சுதந்திரம் கோரும், தனி மாநிலம் கோரும் சிறிய போராளிக் குழுக்களினது செயற்பாடுகளும் அதிகம்.

எனவே, இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று கண்டறியப்பட்ட பின்னரே, இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்குத் தொடர்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தென்னிந்தியாவை அது குறி வைத்துள்ளது என்று சமீபகாலமாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.

தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் குழப்பங்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புக்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

ஆனால், இம்முறை அந்த எச்சரிக்கையையும் மீறி, இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு இந்தியாவினது, குறிப்பாக தமிழ்நாட்டினது பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளும் நெருக்கமும் அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளி அதிகரித்துள்ள சூழலில், தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இது இந்தியாவினது பாதுகாப்பு விடயத்தில், கூடுதல் கவனத்தையும், இலங்கையுடனான நெருக்கத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை புதுடில்லிக்கு உணர்த்தியுள்ளது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள், தென்னிந்தியாவுக்குள் தமது புலனாய்வு முகவர்களை ஊடுருவச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு, இப்போது எழுகின்ற ஒன்றல்ல. ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு பலமுறை கூறப்பட்டது.

கடந்த ஆண்டு, தமீம் அன்சாரி என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக புலனாய்வு முகவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்னர், தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி, அங்கிருந்து மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

குறித்த அதிகாரியை கொழும்பில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, கொழும்புக்கு புதுடில்லி அழுத்தங்களைக் கொடுத்ததாகவும் கூட கூறப்பட்டது. மீண்டும் இப்போது அதே பிரச்சினை தோன்றியுள்ளது.

பொதுவாக, முக்கியமான நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், அந்த நாட்டையோ அல்லது அயல்நாட்டையோ உளவு பார்ப்பதற்கான அதிகாரிகளைக் கொண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

பனிப்போர் காலத்தில் கிழக்கு மேற்கு என்று உலகம் பிளவுபட்டிருந்த போது, புலனாய்வு அதிகாரிகளே சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

அத்தகைய அதிகாரிகளை குறித்த நாடு வெளியேற்றுவதும், அதற்கு பதிலடியாக மற்ற நாடு வெளியேற்றுவதும் சிலவேளைகளில் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரியை பிடித்து தண்டிப்பதும் கூட பனிப்போர் காலத்தில் நிகழ்ந்துள்ளன.

தூதரகங்கள் என்பது தனியே நாடுகளுக்கிடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான களமாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை.

அதையும் தாண்டி, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்ட புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும், சிலவேளைகளில் எதிரி நாட்டைச் சீர்குலைப்பதற்கான களமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இத்தகைய பின்னணிக்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகமும் விதிவிலக்கானதாக இருக்கும் என்று கருத முடியாது.

தூதரகங்ளில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியானது, குறித்த நாடு பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டதே என்பதை நினைவில் கொள்ளலாம்.

எவ்வாறாயினும், தனக்கு எதிரான சதித்திட்டங்களுக்காக கொழும்பு களமாகப் பயன்படுத்தப்படுவதை, புதுடில்லி ஒருபோதும் விரும்பாது.

ஏற்கனவே, இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தானைத் தளமாக கொண்ட லஷ்கர் இ.தொய்பா தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் நுழைவதற்கான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

அதனை இலங்கை அரசாங்கம் அப்போது நிராகரித்திருந்தது.

அதுமட்டுமன்றி, இந்தியாவைக் கண்காணிக்கும் தகவல் தொடர்பு நிலையம் ஒன்றை, வடக்கில் பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகின.

பொதுவாகவே இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவது வழக்கம் என்று சிபிஐயின் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், குறிப்பாக கடந்த இரண்டொரு ஆண்டுகளில் இலங்கை மீதான பாகிஸ்தானின் கரிசனைகள் அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நெருக்கமடைந்துள்ளதை புதுடில்லியால் அவ்வளவு சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.

அண்மைக்காலமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் படை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள் அதிகரித்துள்ளது ஒரு காரணம்.

ஆனால், இவ்வாறு இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் ஜெனரல்களும் சரி, உயர்மட்ட அதிகாரிகள் குழுக்களும் சரி, தமிழ்நாட்டில் இருந்து சில பத்து கி.மீ. தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இது இந்தியாவினது சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இரண்டு பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழுக்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தன.

இவை வெளிப்படையானதாக இருந்தாலும், போருக்குப் பின்னர், இலங்கையைத் தமது இரகசியத் தளமாகப் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கை மையமாகவும் கொழும்பை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மிக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், மத்திய நிதிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை ஒன்றில், கொழும்பிலுள்ள தமது தூதரகம் மூலம், இந்தியாவுக்குள் போலி நாணயத்தாள்களை பாகிஸ்தான் அனுப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.

பங்களாதேஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளையும் இதற்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து ரூபா, பத்து ரூபா, இருபது ரூபா, ஐம்பது ரூபா போலி நாணயத்தாள்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியும் இருந்தனர்.

இந்தப் பின்னணியில் தான், கண்டியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், சென்னையில் பாகிஸ்தான் புலனாய்வு முகவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அங்கு தகவல்களைத் திரட்டவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆட்களைச் சேர்க்கவும் அனுப்பி வைக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இது உண்மையானால் அது தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இலங்கையிலும் கூட அமைதியற்ற நிலையை உருவாக்கும்.

கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையிலான உறவுகள் சற்று குழம்பிப் போயுள்ள சூழலில், புதுடில்லியில் அடுத்துப் பதவியேற்கவுள்ள அரசாங்கத்துக்கு இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

ஏனென்றால், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளன. அது இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் போது இந்தியா சும்மாயிருக்க முடியாது.

அதுவும் இந்த விவகாரத்தில் கடும்போக்கைக் கடைப்பிடிக்கக் கூடிய பாஜக ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டால் இந்த விவகாரத்தில், கொழும்புக்குச் சங்கடங்கள் அதிகம் ஏற்படலாம்.

- சுபத்ரா

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்