Paristamil Navigation Paristamil advert login

பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளுமா இலங்கை அரசாங்கம்?

பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளுமா இலங்கை அரசாங்கம்?

28 சித்திரை 2014 திங்கள் 18:46 | பார்வைகள் : 9583


ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இன்னமும் இந்த விசாரணைக் குழுவை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவிக்கவில்லை. விசாரணைக் குழுவில் இடம்பெறப் பொருத்தமானவர்களையும், விசாரணைக்கான வழிகாட்டு முறைகளையும் வகுக்கும் பணிகளையே தற்போது அவர் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான பணிகள் முடிவுக்கு வந்ததும், இலங்கை அரசாங்கத்துக்கு அதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படும். அதற்குப் பின்னரே, இலங்கை அரசாங்கத்தின் அதிகாபூர்வ பதில்ஐநாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எவ்வாறாயினும், ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இந்தத் தீர்மானத்துக்கோ விசாரணைகளுக்கோ ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலைப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் மாறியுள்ளதாகத் தெரியவுமில்லை. மாறப் போவதற்கான அறிகுறிகள் தென்படவுமில்லை.

கடந்த வியாழக்கிழமை ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பில் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சர்வதேச விசாரணைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

எனவே, சர்வதேச விசாரணை பற்றிய இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கும் எந்த விதமான தொடர்புகளும் இருக்கப் போவதில்லை.

இத்தகைய நிலையில் சர்வதேச விசாரணைகளை இலங்கையில் மேற்கொள்வதோ, இலங்கையிலிருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் திரட்டிக் கொளவதோ, ஐநா விசாரணைக் குழுவுக்கு இலகுவான காரியமாக இருக்காது என்றே நம்பப்படுகிறது.

ஐநாவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்து இலங்கை அரசாங்கம் பிடிவாதம் செய்யுமேயானால், அது ஐநா விசாரணைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய நிலையில் இலங்கைக்கு எதிரான தடைகளை விதிக்க மேற்குலக நாடுகள் முன்வரலாம் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரிலேயே இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று சில தரப்பினர் நம்பியிருந்தனர்.

ஆனால் ஜெனிவா அதற்கான களமோ அல்லது அத்தகைய தடைகளை விதிக்கும் இடமோ அல்ல. அதைவிட, சரியான காரணங்களின்றி எந்தவொரு நாட்டின் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது உலகம் ஏற்றுக் கொள்ளத்தக்க காரணம், நியாயம் அதற்குத் தேவை.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி தடைகளை விதிக்க முடியாது. தற்போதும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்ற போதிலும், அது சிரியா போன்ற நாடுகளில் உள்ளது போன்ற மோசமான நிலை இலங்கையில் இல்லை.

எனவே படிப்படியாகத் தான் எந்தவொரு நகர்வையும் சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்க முடியும். ஆனால் ஐநா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் போக்கு, அத்தகைய தடைகளுக்கு காரணமாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஐநாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய மூத்த இராஜதந்திரியான தயான் ஜயதிலக போன்றோர் இத்தகைய பொருளாதாரத் தடைக்கான வாய்ப்புகள் குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதியென்றான போது, இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள், இந்த தீர்மானத்தின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் அல்லது பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை நடத்த ஜனாதிபதியிடம் நேரம் கேட்டிருந்தனர்.

அவர்களின் முக்கியமான நோக்கமே பொருளாதாரத் தடையை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பது தான், ஆனால் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணங்கவில்லை.

இந்தநிலையில், இப்போது பொருளாதாரத் தடை பற்றிய ஒரு வித அச்சம் இலங்கை அரசாங்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளது போலவே தெரிகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தகைய தடையை தன்னிச்சையாக விதிக்க வாய்ப்புகள் உள்ளன. ஐநா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதைக் காரணமாகக் கொண்டு, இந்தத் தடையை விதிக்க மேற்குலக நாடுகள் முனையலாம்.

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கப் போகிறது. அங்கு தமிழ் வாக்காளர்கள் பல தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.

அவர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, டேவிட் கமரூன் அரசாங்கம் இலங்கைக்கு எதிராக வர்த்தகத் தடைகளை விதிக்கலாம். இதற்கு அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதைவிட பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பின் தலைவரே, இத்தகைய தடை விதிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறியிருக்கிறார்.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதைக் காரணம் காட்டி மேற்குலகம் வர்த்தகத் தடைகளை விதித்தால் அது இலங்கைக்குப் பெரும் ஆபத்தைத் தேடித் தரும்.

ஏனென்றால், இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சதவீதம் மேற்குலகச் சந்தைகளை அடிப்படையாகக் கொண்டவை.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தான் இலங்கையின் பிரதான ஏற்றுமதி நாடுகள்.

மேற்குலகிற்கான ஆடை, தேயிலை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி தடைப்படுமேயானால் அது இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை அரசாங்கமும் இது குறித்து மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கத் தலைப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ள தகவலின் படி, தடைகள் விதிக்கப்பட்டால் இலங்கையின் பொருட்களை தென்னாபிரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த செயற்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று நாடுகளும், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத நாடுகள். ரஷ்யா மட்டும் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. தென்னாபிரிக்காவும் ஜப்பானும் வாக்களிப்பில் பங்கேற்காமல் இலங்கைக்கு மறைமுகமாக ஆதரவை அளித்தன.

ஜெனிவா தீர்மானத்தை இந்த நாடுகள் ஆதரித்தன என்பதற்காக மேற்குலகின் பொருளாதாரத் தடையில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் என்று கருத முடியாது.

இந்த மூன்று நாடுகளுமே மேற்குலக சந்தைகளால் நிராகரிக்கப்பட்ட பொருட்களை ஒரேயடியாக வாங்கிக் குவிக்க முடியாது. அவற்றுக்கான தேவையும் அங்கிருக்க வேண்டும்.

இலங்கைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பும், கேள்வியும் இந்த நாடுகளில் இருக்க வேண்டும். இவை எதுவுமில்லாமல் மேற்குலகத்துக்கான ஏற்றுமதி முழுவதையும் இந்த நாடுகள் ஈடுகட்டும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டிருக்க முடியாது.

மேற்குலகினது பொருளாதாரத் தடை குறித்து கவலைப்படும் இலங்கை அரசாங்கம் அதனை தவிர்ப்பதற்கான மாற்று வழிகளையும் சிக்கலான முறைகளிலேயே தேர்வு செய்கிறது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் வழிமுறை ஒன்று உள்ள போதிலும், அதைக் கருத்தில் கொள்ளாமல், ஆபத்தான வழிமுறைகளை தேடிக் கொண்டிருக்கிறது.

உடனடியாகப் பொருளாதாரத் தடை ஒன்றுக்கான சாத்தியங்கள் தென்படாது போனாலும், அதனை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பது இலங்கை அரசாங்கத்தின் கடமை.

ஆனால், அத்தகைய ஆலோசனைகள் சாத்தியமானளவுக்கு இழப்பைக் குறைப்பதாக இருக்க வேண்டும் என்பதும் கூட முக்கியமானது தான்.

ஆனால் அதுமட்டும் ஏனோ அரசாங்கத்துக்குப் புரியவில்லை.

- சத்ரியன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்