Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விசாரணையை கெடுக்குமா தென்னாபிரிக்கா?

சர்வதேச விசாரணையை கெடுக்குமா தென்னாபிரிக்கா?

13 சித்திரை 2014 ஞாயிறு 10:22 | பார்வைகள் : 9086


வாதப்பிரதிவாதங்களுக்கு நடுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கடந்த வாரம் தென்னாபிரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் சரவதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கான தீவிரமான முயற்சிகள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலிலேயே இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்வது உறுதியானதும், அந்தக் கட்சிக்கள் இருந்தே முதலில் எதிர்ப்பும் வெளிப்பட்டது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தான் இதற்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பியிருந்தார்.

அதாவது சர்வதேச விசாரணை முயற்சிகளைத் தடுப்பதற்காகவே தென்னாபிரிக்கா முயற்சிப்பதாகவும், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போகக்கூடாது என்றும் அவர் பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் அவ்வளவாக ஒத்துப் போகாதவரான சிவாஜிலிங்கம், இந்த எதிர்ப்பை நேரடியாகவே தமது கட்சியின் தலைமையிடம் எடுத்துக் கூறியிருக்கலாம்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட அதனை கூட்டமைப்புத் தலைமை கண்டுகொண்டிருக்காது.

எனவே தான், கூட்டமைப்புத் தலைமைக்கு எதிரான கருத்தை ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்த முயன்றார் சிவாஜிலிங்கம்.

ஆனால் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதேவேளை தமது பயணம் ஐநா விசாரணை முயற்சிகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இரா.சம்பந்தன் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

தமது தென்னாபிரிக்க பயணத்தால், சர்வதேச விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதற்கு, கூட்டமைப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டது என்பதை கடந்த வாரம் ஊடகங்களில் உலாவியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த நவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா கொழும்பு வந்திருந்த போது இலங்கையில் நல்லிணக்கத்தையும், நிலையான அரசியல் தீர்வையும் ஏற்படுத்த தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கூறியிருந்தார்.

அரசாங்கத்துடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் அவர் பேச்சுக்களை நடத்தியது, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் நோக்குடன் தான் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கு வசதியாகவே பின்னர் அவர் சிறில் ரமபோசா என்ற சிறப்புத் தூதுவரையும் நியமித்திருந்தார்.

தென்னாபிரிக்காவை, இந்த அரங்கினுள் நுழைய இடமளித்ததன் மூலம், இலங்கை அரசாங்கம் சாதகமான பெறுபேற்றை ஜெனிவாவில் அனுபவித்தது உண்மை.

அதாவது, இலங்கை விவகாரத்தில் தலையிட முயற்சிக்கும் நாடு என்பதால், வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க அந்த நாடு முடிவு செய்திருந்தது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்த தென்னாபிரிக்காவே, திடீரென இலங்கை அரசுக்குச் சார்பாக உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தியமை தமிழர் தரப்பிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியது உண்மை.

அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்கப் பயணம், சர்வதேச விசாரணையைப் பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியது.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என்றும், தமது அனுபவங்களை இருதரப்புடனும் பகிர்ந்து கொள்ளப் போவதாகவுமே கூறி வருகிறது.

அவ்வாறாயின், ஏதேனும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டால் தான், அதனூடாக எவ்வாறு நல்லிணக்கத்தை, தீர்வை அடையலாம் என்று தமது அனுபவங்களை தென்னாபிரிக்கா வெளிப்படுத்த முடியும்.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதில் இலங்கை அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

ஆனால் இப்போது, அத்தகைய உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது குறித்த எந்தப் பேச்சையும் அரசாங்கம் எடுப்பதேயில்லை.

அதுமட்டுமன்றி, ஜெனீவாவில் நடுநிலை வகித்த இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் நம்பகமான ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்கும்படி, அழுத்தம் கொடுத்து வருவதாகவும் செய்திகள் உள்ளன.

என்றாலும் அதற்கு சாதகமான எந்த சமிக்ஞையையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

தென்னாபிரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு முதலில் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

அது உள்நாட்டுப் பொறிமுறையாகவே இருக்கும் என்றும், அதில் தாம் எவ்வகையிலும் தலையிட மாட்டோம் என்றும் அந்த நாடு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இப்போதைய நிலையில், அரசாங்கம் அந்தப் பொறிமுறையை உருவாக்கினால் தான், தென்னாபிரிக்காவின் முயற்சிகள் முன்னகர்த்தப்படும்.

அதேவேளை, எந்தவொரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையும், தற்போது ஜெனீவாவில் இருந்து முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கருதலாம்.

ஏனென்றால், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை அரசு நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை நடத்தக் கோரியுள்ள நிலையில், அதற்குச் சமமாகவே சர்வதேச விசாரணைக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்தின் எந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளையும் கண்காணிக்கவும், அதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பணிக்கப்பட்டுள்ளது.

எனவே, தென்னாபிரிக்காவின் முயற்சியால், உண்மை நல்லிணக்க ஆணைக்­குழு ஒன்று அமைக்கப்பட்டால் கூட, அது சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இதைவிட, நம்பகமான ஒரு உள்நாட்டுப் பொறிமுறை உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவது இலகுவானது என்றே சர்வதேச சமூகம் கருதுகிறது.

ஐ.நா மனிதஉரிமை ஆணை­யாளர் பணி­யகம் மூலம் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணையின் முடிவு, இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமாக அமையுமானால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

ஏனென்றால், அந்த அறிக்கையின்படி, எவரையும் தண்டனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குக் கிடையாது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் மேலதிக நடவடிக்கைக்காக அறிக்கையை ஒப்படைக்க மட்டுமே அதனால் முடியும்.

அங்கு வீட்டோ அதிகாரத்தை வைத்து இலங்கையைக் காப்பாற்ற சீனாவும், ரஷ்யாவும் இருக்கின்றன.

எனவே, சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்பது, இப்போதைக்கு போரின் போது நடந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வர மட்டும் உதவுமே தவிர, சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் எந்தளவுக்கு உதவும் என்று அனுமானிக்க முடியவில்லை.

அதேவேளை, நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டால், அதனை இலங்கை அரசாங்கத்தை வைத்தே நடைமுறைப்படுத்த முடியும்.

அதற்காகத் தான், இதுவரை மேற்கு நாடுகள் உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தி வந்தன.

நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கச் செய்து அதை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரு பகுதியையாவது நடைமுறைப்படுத்த வைப்பதில் சர்வதேச சமூகம் வெற்றி கண்டுள்ளது.

அதுபோலதான், தென்னாபிரிக்க பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவே, சர்வதேச சமூகம் முயற்சிக்கிறது.

ஒருபக்கத்தில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு கொடுத்தாலும், பலம்மிக்க நாடுகள் தென்னாபிரிக்காவினது முயற்சிக்கும் பின் கதவால் ஆதரவு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், அது அவற்றின் மீதான சுமையைக் குறைக்க உதவும்.

இந்தப் பின்னணியில், தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம், உடனடியாக ஒரு விசாரணைப் பொறிமுறைக்கு இலங்கை அரசு இணங்கும் என்று கூறுவதற்கில்லை.

ஏனென்றால், சர்வதேச சமூகம் தனது கையை வைத்தே தன்னை குத்தப் போகிறது என்று புரிந்து கொள்வதற்கு இலங்கை அரசுக்கு அதிக நேரம் தேவையில்லை.

ஆனால், அதைத் தவிர்க்க முடியாது என்ற கட்டம் ஒன்று வரும் போது மட் டுமே, இலங்கை அரசு அதுபற்றிய இணக்கப்பாட்டுக்கு வர முனையும்.

இப்போதைய நிலையில், அத்தகைய இணக்கப்பாடு ஒன்று ஏற்படுவதற்கு முன்னர், சர்வதேச விசாரணை பாதிக் கிணற்றைக் கூடத் தாண்டி விடக் கூடும்.

- சத்ரியன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்