Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வெளிப்பட்டுள்ள போர்க்குற்ற ஆதாரம்!

மீண்டும் வெளிப்பட்டுள்ள போர்க்குற்ற ஆதாரம்!

16 பங்குனி 2014 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 9338


மீண்டும் ஒரு போர்க்குற்ற ஆதாரத்தை கடந்த வாரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சனல் 4 தொலைக்காட்சி.
பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருந்தாலும் கூட இலங்கையில் அத்தகைய ஒருவர் இருப்பாரா என்பது சந்தேகம் தான்.

காரணம் போர் முடிவுக்கு வந்த பின்னர் சனல் 4  தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள் தான் அத்தகைய நிலையை ஏற்படுத்தின.

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடக அறம் குறித்து இனம்சார் நிலையில் இருவேறு கருத்துக்கள் நிலவினாலும் ஏதோவொரு வகையில் இது எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிக்கொண்டு வருவதில் சனல் 4 முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

குறிப்பாக படையினரின் போர்க்குற்ற மீறல்களை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் பலவற்றை சனல் 4 இதுவரை முன்வைத்துள்ளது.

இவையனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் போலியானவை என்றும் நாடகம் என்றும் திரிபு படுத்தப்பட்டவை என்றும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கடந்த 9ம் திகதி மீண்டும் ஒரு போர்க்குற்ற ஆதாரத்தை சனல் 4 வெளியிட்டது.

கொல்லப்பட்ட பின்னர் பெண் போராளிகளின் உடல்கள் மீது படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொள்வது தொடர்பான சிறியதொரு வீடியோவையே சனல் 4 கடைசியாக வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 10ம் திகதி லண்டனில் நடைபெற்ற கொமன்வெல்த் தின நிகழ்வில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெனிவாவில் இலங்கைக்கெதிரான தீர்மான வரைபு விவாதங்களுக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் தான் இந்த வீடியோவை சனல் 4 வெளியிட்டது.

போரில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் கௌரவமாக நடத்த வேண்டும் என்கிறது சர்வதேச போர் விதிமுறை.

இலங்கையில் நடந்த போரின் போது அவையெல்லாம் மீறப்பட்டன என்பதே சனல் 4 சுமத்தும் குற்றச்சாட்டு.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் முக்கிய பிரமுகர்கள், தளபதிகள் பலர் எங்கே கொண்டு செல்லப்பட்டனர், என்னவாயினர் என்ற தகவல் இதுவரை இல்லை.

அவர்கள் சரணடைந்ததை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருந்தும் அவர்கள் யாருமே படையினரிடம் சரணடையவில்லை என்றும் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் கூறி வருகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதற்கு பல ஒளிப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை சனல் 4 வெளியிட்ட போதும் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதையும் போலியான நாடகம் என்று ஒரே வார்த்தையைக் கூறி நிராகரித்து விட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டதையும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் ஒளிப்பட ஆதாரங்களையும் கூட அரசாங்கம் நிராகரித்தது.

புலிகளின் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிரோடு பிடித்துச் செல்லப்படும் காட்சியும், அவர் அலங்கோலமான நிலையில் பிணமாகக் கிடக்கும் காட்சிகளும் வெளியிடப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு இதேவிதமாகத்தான் இருந்தது.

இசைப்பிரியா போரிலேயே கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியிருந்தாலும், அவரது இறந்த உடல் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படும் காட்சியைக் குறித்து அரசாங்கம் எதையும் கூறவில்லை.

சனல் 4 எதை வெளியிட்டாலும் தமக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் அதை உடனடியாகவே போலி என்றும் புலம்பெயர் புலிகளின் மோசடி என்றும் வர்ணிப்பதும், நிராகரிப்பதும் அரசின் வழக்கமாகி விட்டது.

அதனை ஆராய்ந்து பார்த்து உண்மை பொய்யை அறிந்து கொள்ளும் வழக்கத்தையே இலங்கை அரசாங்கம் பின்பற்றுவதில்லை.

இறுதியாக வெளியிடப்பட்ட போர்க்குற்ற வீடியோ கொல்லப்பட்டுக் கிடக்கும் பெண் போராளிகளின் உடல்களின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை விபரிப்பதாக சனல் 4 குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் போரின் இறுதி 3 ஆண்டுகளுக்குள் கொல்லப்பட்டதாகவும் ஆனால் சரியாக எங்கே எப்போது என்று கூற முடியவில்லை என்றும் சனல் 4  கூறியுள்ளது.

எனினும் தடயவியல் ஆய்வில் எது உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை இவர்கள் சண்டை ஒன்றில் உயிரிழந்திருப்பதற்கான தடயங்கள் தெரியவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவாக இல்லாவிட்டாலும் இதையும் கூட ஒரு படுகொலையாகவே இருக்கலாம் என்று சனல் 4 குற்றம் சாட்டுகிறது. இவர்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களாகவே இருந்தாலும் கூட அதை மரியாதையாக நடத்த வேண்டியதே படையினரின் கடமை.

ஆனால் பெண் போராளிகளின் இறந்த உடல்களை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்துவது போன்ற படையினரின் அநாகரீகமான செயன்முறைகள் வெளிச்சத்துக்கு வருவது இதுவே முதன்முறை அல்ல.

1995ம் ஆண்டு யூலை மாதம் வெலிஓயாவில் 5 இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பெரும் தாக்குதல் தோல்வியில் முடிந்த போது பெருமளவு பெண் போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

அவர்களில் பெருமளவானோரின் உடல்களைக் கைப்பற்றிய படையினர் ஆடைகளைக் களைந்து அலங்கோலமான நிலையில் வரிசையாக வைத்துக் காட்சிப்படுத்தியிருந்தனர். அது தொடர்பான ஒளிப்படங்கள் அப்போது வெளிநாட்டு ஊடகங்களில் கூட பிரசுரமாகியிருந்தன.

1994ம் ஆண்டு இறுதிப்பகுதியில் சந்திரிகா அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் போர்நிறுத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்த போது அதே வெலிஓயா பகுதியில் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப். கேர்ணல் மல்லி என்ற முக்கிய தளபதி பதுங்கித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்ட்படார். அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்றிருந்தனர்.

போர்முனையில் இதுபோன்று கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அவமதிக்கப்பட்ட பெருமளவு சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிகள் வேண்டுமென்றே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு உளரீதியாகப் பலவீனப்படுத்தும் உத்தியும் கையாளப்பட்டது.

இதுபோலவே சனல் 4 வெளியிட்டுள்ள புதிய வீடியோவும் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் சடலங்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை வெளிக்காட்டியுள்ளது. இதில் படையினரின் முகங்ள் தெளிவாகவே பதிவாகியுள்ளன.

ஆனால் இவை உண்மையானவையா அதில் தோன்றும் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் எவராவது இராணுவத்தில் இருக்கின்றனரா என்றெல்லாம் விசாரிக்காமலேயே அரசாங்கம் அதனைப் போலி என்று முடிவுகட்டி விட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் கொல்ப்பட்டுக் கிடக்கும் தலிபான்களின் மீது நான்கு அமெரிக்க மைரன் படையினர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நிஜனைவில் இருக்கலாம்.

உடனடியாக அமெரிக்கா அதை நிராகரிக்கவில்லை. விசாரிப்போம் என்று தான் கூறியது. விசாரணையில் சம்பந்தப்பட்ட படையினர் அடையாளம் காணப்பட்ட போது அவர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டன.

இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி பறிக்கப்பட்டதுடன் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.

இது ஒரு காரணத்துக்காக கூறப்பட்டவையன்றி அமெரிக்கா முற்றுமுழுதாக இத்தகைய மீறல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூற வரவில்லை.

அதேவேளை இலங்கை இராணுவம் இப்போது தாம் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாகக் கடைப்பிடிப்பதாகக் காண்பிக்க முனைகிறது.

கொள்ளைச் சம்பவங்கள் கொலைச்சம்பவங்களில் அண்“மைக்காலங்களில் ஈடுபட்ட படையினரை உடனடியாவே பதவி நீக்கும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன.

இது இலங்கை இராணுவம் ஒழுக்கத்தைக கடுமையாக பின்பற்றுகிறது என்று வெளிப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

 ஆனால் மோசமான சம்பவங்கள் தொடர்பாகவோ உயரதிகாரிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதோ எந்த நடவடிக்கைகளும் எடுப்பட்படுவதில்லை.

வெலிவேரியவில் போராட்டம் நடத்திய சிங்கள பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் கேர்ணல் சியாமல் டி சில்வா ஆகியோருக்கு எதிஜராக எந்தத் துறை ரீதியான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஐநா மனித உரிமை மீறல்கள் ஆணையாளரின் அறிக்கையில் கூட இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி வெலிக்கடைச் சிறைக் கலவரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் நியாயமான நீதி விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

ஒருதலைப்பட்சமான விசாரணைகளே மேற்கொள்ளப்பட்டன.

படையினருக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகளை உடனடியாகவே நிராகரித்து விடுவது அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுவதே இலங்கையில் வழக்கமாகி விட்டது.

சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்தாமல் தாமே ஒரு தீர்ப்பை வழங்கிவிடும் அரசாங்கம் தான் சர்வதேச சமூகம் ஏற்கனவே தீர்மானித்து விட்டு நியாயம் வழங்க முனைவதாக அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது.

சனல் 4 இப்போது முன்வைத்துள்ள வீடியோ விவகாரம் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.

ஏற்கனவே வெளியான சனல் 4 ஆதாரங்கள் குறித்து மேஜர் ஜெனரல் சிறிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ விசாரணை நீதிமன்றம் ஒரு விசாரணையைத் தொடங்கியது. ஆனால் அது ஆண்டுக்கணக்காகத் தொடர்கிறது.

இதுபற்றி ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இன்னமும் விசாரணை நடப்பதாக அதற்குப் பதிலளித்திருந்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.

அதேவேளை எல்லா இராணுவ விசாரணைகள் குறித்த அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்ற ஐநா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்கவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் புதிய போர்க்குற்ற ஆதாரத்தையும் அரசாங்கம் நிராகரித்து விட்டது.

இந்த ஒற்றைவரி நிராகரிப்புடன் எல்லாமே முடிந்து போய் விட்டதாக கருத முடியாது. தீவிரமான பொறுப்புக்கூறல் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது இவையெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக சாட்சி சொல்லும் வல்லமை பெற்றதாகவே இருக்கும்.

பொதுவாக எல்லா இராணுவங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதிகளவான மீறல்கள் அங்கு நடப்பது வழக்கம்.

ஆனால் அத்தகைய மீறல்களை மறைத்து குற்றம் செய்வோரைப் பாதுகாக்கின்ற அணுகுமுறை தான் சர்வதேச சமூகததினால் வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் அதுதான சிக்கல்.

குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் தான் இன்று சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் நிலை உருவாகியுள்ளது.

வெற்றியைப் பெற்றுத்தந்த படையினரைக் காட்டிக் கொடுக்க மாட்டோம், அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

ஒருவகையில் பார்த்தால் இதுவே குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும் அமைந்து விடுகிறதே.

- சுபத்ரா

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்