Paristamil Navigation Paristamil advert login

ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா?

ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா?

3 பங்குனி 2014 திங்கள் 14:51 | பார்வைகள் : 8829


இம்முறை ஜெனிவாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியானது, முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், துலக்கமான ஒரு கருத்தொருமைப்பாட்டை எட்டியிருப்பது தெரிகிறது. தமிழ் டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், முன்வைக்கப்படும் சுலோகங்கள் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும்.

அதாவது, முன்னைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை போர்க்குற்ற விசாரணை என்ற மையப்பொருளைக் கடந்து இனப்படுகொலை எனப்படுவதே மையப்பொருளாக மாறியிருக்கிறது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதன் மூலம் அதற்குரிய உச்சபட்ச பரிகாரமாக தமிழர்களுக்குரிய ஆகக்கூடியபட்ச தன்னாட்சிக் கட்டமைப்பு ஒன்றைப் பொறுவதே இம்முறை தமிழ் லொபியின் பிரதான சுலோகமாக மாறியிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் அது சில சமயம் தமிழ்;த் தரப்புக்களிற்கும் பொறியாக மாறலாம் என்ற ஒரு அச்சம் தமிழ் லொபியில் ஒரு தரப்பினர் மத்தியில் காணப்படுகின்றது. போர்க் குற்ற விசாரணை எனப்படுவது தனியே அரசாங்கத்தை மட்டும் விசாரிப்பதாக அமையாது. மாறாக, அது தமிழ் இயக்கங்களையும் விசாரிப்பதாக அமையும். இதன்போது இயக்கங்களுகுகிடையிலான சண்டைகள், உள்ளியக்கச் சண்டைகள் என்பவற்றுடன் நிராயுதபாணிகளான தமிழ், சிங்கள் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும் உட்பட ஈழப் போர் பரப்பில் அனைத்துத் தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், விசாரிக்க வேண்டி வரும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் ஐ.பி.கே.எவ். காலத்து குற்றச் செயல்களையும் விசாரிக்க வேண்டி வரும் என்று இந்தியாவை மறைமுகமாக மிரட்டப்பார்க்கிறார்கள். அதாவது, போர்க் குற்ற விசாரணைக்குள் இந்தியாவும் சிக்கவேண்டி வரும் என்பதே இதன் பொருளாகும்.

இப்படிப் பார்த்தால், போர்க் குற்ற விசாரணை என்ற பொதுப் பரப்பிற்குள் தமிழர்களும் விசாரிக்கப்படக்கூடிய ஒரு நிலைமை தோன்றுவதை தவிர்ப்பதற்காகவே தமிழ் லொபியின் ஒரு பகுதியினர் போர்க் குற்ற விசாரணையை விடவும் இனப்படுகொலை மீதான விசாரணையே தேவை என்று கோரி வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், போர்க் குற்ற விசாரணையையும் உள்ளடக்கிய இனப்படுகொலை மீதான விசாரணையை வற்புறுத்துவோர் அதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்.

ONU / UNO போர்க் குற்ற விசாரணை என்று வந்தால், அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ்த் தரப்பிற்கும் எதிராகத் திரும்பும்தான். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை மட்டும் போர்க் குற்றமல்ல. தமிழர்களால் செய்யப்பட்டவையும் போர்க் குற்றம் தான். போர்க் குற்றம் என்று வரும்போது, அதை சிங்களப் போர்க் குற்றம் அல்லது தமிழ்ப் போர்க் குற்றம் என்று பிரிக்க முடியாது. ஒடுக்குபவனின் போர்க் குற்றத்தையும், ஒடுக்கப்படுவோரின் போர்க் குற்றத்தையும் ஒரே தராசில் வைத்துப் நிறுக்கக்கூடாது என்றும் வாதிடமுடியாது. போர்க் குற்றங்களை யார் செய்தாலும் அவை போர்க் குற்றங்கள் தான். ஆனால், போர்க் குற்றங்கள் வெற்றிடத்திலிருந்து வருவதில்லை. அவை போர்க் களத்திலேயே புரியப்படுகின்றன. போர்தான் முதலில் வந்தது. போர்க் குற்றம் பின்னரே வந்தது. போர் எப்படி வந்தது? இன ஒடுக்குமுறைதான் போரைக் கொண்டு வந்தது. எனவே, போர் ஒரு காரணமல்ல. அது ஒரு விளைவுதான். போர்க் குற்றமும் ஒருவிளைவுதான். இங்கு மூல காரணம் இன ஒடுக்குமுறைதான்.

இப்படிப் பார்த்தால், போரும் விளைவுதான், போர்க் குற்றமும் விளைவுதான். போர்க் குற்ற விசாரணை எனப்படுவது போரின் வேர்களை தேடிச் செல்லுமிடத்து, அது தமிழ் தரப்பைவிடவும் சிங்களத் தரப்பிற்கே அதிகம் பாதகமாய் அமையும். இதில் நியாயத் தாரசு தமிழர்களுக்குச் சாதகமாகவே சாயும். எனவே, போர்க் குற்றம், போர் என்பவற்றுக்கான மூல காரணத்தைத் தேடிச் செல்லும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் இனப்படுகொலை மீதான விசாரணையாகவே வந்துமுடியும் என்பது இவர்களுடைய வாதமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், போர்க் குற்ற விசாரணையை மட்டும் குவி மையப்படுத்துவது என்பது இனப்பிரச்சினையின் மையத்தை திசை திரும்பி அதை வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாக சுருக்கிவிடக்கூடும் என்றும் இவர்கள் அச்சப்படுகின்றார்கள். இது ஏறக்குறைய இலங்கை – இந்தியா உடன்படிக்கைக்குப் பின்னாலிருந்த அரசியல் உள்நோக்கத்தை ஒத்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெனிவாக் கூட்டத் தொடரைப் போலவே இலங்கை, இந்திய உடன்படிக்கையின் போதும், தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. இந்த உடன்படிக்கையானது தமிழர்களுக்கு மட்டுமேயான சுட்டிப்பான இனப்பிரச்சினையை முழுத் தீவுக்குமான அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகப் பொதுமைப்படுத்தி தீவு முழுவதற்கும் மாகாண சபைகளை உருவாக்கியது. அதைப் போலவே போர்க் குற்ற விசாரணை எனப்படுவதும் பிரச்சினையின் மையத்தைக் கரைத்து அதைப் பொதுமைப்படுத்துவதிலேயே முடியும் என்பது அவர்களுடைய வாதமாகும்.

இங்கு பிரச்சினையின் மையம் எனப்படுவது தமிழர்களுக்கான ஒரு உச்சபட்ச நீதிக்கான ஒரு கோரிக்கையாகும். எனவே, அதுதான் பிரதான வாதப் பொருளாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அப்பிரச்சினைக்குரிய தீர்வாக உச்சபட்ச தன்னாட்சி ஒன்றைக் குறித்து அனைத்துலக சமூகம் சிந்திக்கும். அனைத்துலக சமூகம் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளும்போதே அதற்குப் பரிகாரமாக தமிழர்களுக்கான உட்பட்ச தன்னாட்சி ஒன்றைக் குறித்து சிந்திக்க முடியும். மாறாக போர்க் களத்தில் புரியப்பட்ட எல்லாக் குற்றங்களுக்குமான விசாரணை என்று பொதுமைப்படுத்தப்படும்போது, தமிழர்களின் பிரச்சினை என்ற சுட்டிப்பான மையம் கரைந்துபோய்விடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே, இனப்படுகொலை மீதான விசாரணை என்று வந்தால் அங்கே பிரச்சினையின் மையத்தை திசை திருப்புவதற்கோ அல்லது அதைப் பொதுமைப்படுத்தி பத்தோடு பதினொன்றாக அதன் வீரியத்தை குறைப்பதற்கோ உரிய ஏது நிலைகள் ஒப்பீட்டளவில் குறைவு என்றும் இவர்கள் வாதாடுகிறார்கள்.

இவை போன்ற விவாதங்கள் கடந்த இரு ஆண்டுகளை விடவும் இவ்வாண்டு அதிகரித்த அளவிலும் பரந்த அளவிலும் நிகழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய உலகளாவிய தமிழ் லொபியின் சட்ட ரீதியிலான கோட்பாட்டு அடித்தளம் போல இது உருவாகி வருகிறது. தமிழ் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டச் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரே இச்செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்கள். அரசியலில் ஈடுபடும் தமிழ் வழக்கறிஞர்களைக் குறித்து சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேலான விமர்சனங்கள் உண்டு இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையா? இல்லையா? என்பதில் இப்பொழுதும் சில வழக்கறிஞர்களுக்கு தடுமாற்றம் உண்டு. ஆனால், இத்தகைய தடுமாற்றங்களோ, தளம்பபல்களோ எதுவுமற்ற ஒரு பகுதி சட்ட நிபுணர்களும், சட்டச் செயற்பட்டாளர்களும் உலகளாவிய தமிழ் லொபிக்கு சட்ட ரீதியிலான நிராகரிக்கப்பட முடியாத ஒரு பொதுச் சுலோக்கத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள். இனப்படுகொலைக்கான தீர்வே இனப்பிரச்சினைக்கான தீர்வுமாகும் என்பதே அப்பொதுச் சுலோகமாகும்.

ஆனால், இது தனிய ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல என்பதே இங்குள்ள மிகக்குருரமான அனைத்துலக யதார்த்தமாகும். எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப கூறப்படுவது போல, அனைத்துலக நீதி எனப்படுவது அல்லது அனைத்துலக சட்டம் என்படுவது அதன் பிரயோக நிலையில் அனைத்துலக அரசியல் தான். அனைத்துலக அரசியல் எனப்படுவது சக்தி மிக்க நாடுகளின் புவி சார் அரசியல் பொருளாதார நலன்களுக்கிடையிலான நீதியற்ற ஒரு சூதாட்டம்தான். அதாவது, பொழிவாகக் கூறின், அனைத்துலக நீதி எனப்படுவது நாடுகளுக்கிடையிலான நலன்களின் நீதியற்ற ஒரு சூதாட்டம்தான். இதில் தமிழர்கள் தமக்குரிய நீதியை பொறுவது எப்படி?

மேலும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு ஏற்கனவே, இருந்த அனைத்துலக சட்டப் பொறி முறைகள் போதாமல் இருந்தன என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான அனைத்துலக நீதிபரிபாலன முறைகளை கெடுபிடிப் போரின் வீழ்ச்சிக்குப் பின் புதுப்பிடிக்கப்படவேண்டிய ஒரு தேவை அதிகரித்து வருகிறது. கெடுபிடிப் போருக்குப் பின்னர் உருவாகி வரும் புதிய அனைத்துலக வலுச்சமநிலை ஒன்றுக்கேற்ப ஐ.நா.வை மறுசீரமைக்கும்போது இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கான அனைத்துலக கட்டமைப்பு ஒன்றைக் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியிருக்கும்.

அதாவது, இனப்படுகொலைகளைத் தடுக்க முடியாததொரு ஐ.நா. மன்றத்திடமிருந்து இனப்படுகொலை மீதான பூரண விசாரணைப் பொறிமுறை ஒன்றை தமிழர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இப்படிப்பட்ட ஒரு குரூரமான ஓர் அனைத்துலகப் பின்னணியில் போர்க் குற்றங்கள் தொடர்பாகக்கூட ஒரு செயலுக்குப்போகும் தீர்மானத்தை இதுவரையிலும் எடுக்கத் தயாரற்ற ஐ.நா. மன்றமும் அனைத்துலகச் சமூகமும் இனப்படுகொலைகள் மீதான விசாரணைகள் தொடர்பில் எத்தகைய முடிவுகளை எடுக்கும்? அப்படியேதும் முடிவுகளை எடுத்தாலும் அது ஒரு சட்டத் தீர்மானமாகவோ அல்லது நீதியின் பாற்பட்ட ஒரு தீர்மானமாகவோ மட்டும் இருக்கப்போவதில்லை. அது அதிகபட்சம் ஓர் அரசியல் தீர்மானமாகத்தான் இருக்கும். உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இங்கு எடுத்துக்காட்டலாம். அது வழக்கறிஞர்களுக்கும், மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றிதான். ஆனால், அது தனிய ஒரு சட்டத் தீர்மானம் மட்டும் அல்ல. அது ஒரு அரசியல் தீர்மானமும்கூட. ஜெனிவாவை நோக்கிச் செல்லும் இந்நாட்களில் அதற்கொரு ராஜதந்திர பரிமாணம் உண்டு. இத்தகைய பொருள் படக்கூறின், அதுவொரு அரசியல் தீர்மானம்தான்.

இப்படிப்பட்டவொரு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டால் மட்டுமே ஜெனிவாவில் செயலுக்குப் போகும் ஒரு தீர்மானம் எடுக்கப்படும். ஜெனிவாக் கூட்டத் தொடரைப் பொறுத்த வரை தமிழர்களுக்கு இப்பொழுது தேவை செயலுக்குப்போகாத் தீர்மானங்கள் அல்ல. மாறாக, கால எல்லைகள் வகுக்கப்பட்ட செய்முறைத் தீர்மானங்களே தேவை. அப்படிபட்ட பிரயோகத் தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால் கியூபா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போலவே இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விடுமா?

அண்மையில் இலங்கை அரசுத் தலைவர் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். மொறாட்டுவப் பிரதேசத்தில் ஒரு வைபவத்தில் உரையாற்றியபோது அவர் கியூப உதாரணத்தை எடுத்துக்காட்டியிருந்தார். கியூபாவிற்கு எதிராக இதுவரையிலும் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், கியூபா அவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கியூபா ஜனாதிபதி தனக்குக் கூறியதை அரசுத் தலைவர் அந்த வைபவத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஆனால், கியூபாவும், சிறிலங்காவும் ஒன்றல்ல. கியூபாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அந்த நாட்டின் சிறிய தேசிய இனங்களின் விவகாரம் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தவில்லை என்பது இங்குள்ள முக்கிய வேறுபாடாகும். மாறாக, சிறிலங்காவில் தமிழர்களின் அரசியலை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன. தமிழர்கள் ஒரு தரப்பாக இல்லாத அந்த அரங்கில் தமிழர்களின் பிரச்சினை ஒரு மனித உரிமை விவகாரமாகச் சுருக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் கூட இதுவரையிலும் செயலுக்குப் போகாத் தீர்மானங்களாகவே காணப்படுகின்றன.

இம்முறை சற்றுக் கடுமையான நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்றொரு எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. இரண்டு கிழமைகளுக்கு முன் கொழும்பிற்கு வந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவாகரங்களுக்கான உதவிச் செயலரான நிசா தேசாய் பிஸ்வால் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை மீதான பொருளாதாரத் தடை குறித்து சூசகமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

இப்பொழுதுள்ள நிலைமைகளின் படி பொருளாதாரத் தடை எனப்படுவது ஒரு பிரயோகத் தீர்மானம் தான். ஒரு விதத்தில் அது பிரம்மாஸ்திரம் தான் அதைப் பிரயோகித்தால் அதன் தர்க்க பூர்வ விளைவாக உருவாகும் அடுத்த கட்டத்திற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தயாராக இருக்கவேண்டும். ஏனெனில், பொருளாதாரத் தடை விதிக்கப்படுமாக இருந்தால் அது குறித்து சீனா எடுக்கப்போகும் முடிவு இங்கு முக்கியமானது. இலங்கைத் தீவானது சீனாவைப் பொறுத்த வரை அதன் ஆகப்பெரிய பிராந்திய நிர்வாக அலகை விடவும் சிறியதொரு நிலப்பரப்புத் தான். சிறியதொரு சனத் தொகையும்தான். எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையிலிருந்து 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்