தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமறைவு வாழ்க்கை
14 மாசி 2014 வெள்ளி 11:30 | பார்வைகள் : 10217
இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், -அதுவும் பின்நாட்களில் ஊடகங்களில் பிரபல்யமாக இருந்த சில விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் எப்படி இன்னல்களை அனுபவித்தார்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிக் கடந்த சில வாரங்களாக விரிவாகப் பார்த்து வந்தோம்.
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் முதற்கொண்டு, கேணல் சூசை, தமிழ் செல்வன், கேணல் சொர்ணம் அடங்கலாக பலரது அனுபங்களையும் இந்தத் தொடரில் ஆராய்ந்திருந்தோம்.
அந்த வகையில் விடுதலைப் புலிகளின் தவைர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு காலங்களில்; எப்படியான இன்னல்களை எதிர்கொண்டார், அவற்றை எப்படி சமாளித்தார் போன்ற விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் மீட்டுப் பார்க்க இருக்கின்றோம். -சற்று விரிவாக.
தந்திரோபாய நடவடிக்கைகள்
இந்தியப்படை ஈழ மண்ணில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்த காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியிலான நகர்வுகளையே முழுக்க முழுக்க மேற்கொண்டிருந்தார்கள். மரபு, வீரம் என்று பம்மாத்துக் காண்பித்து, இந்தியப் படையினரை எதிர்த்து நின்று அநியாயத்திற்கு போராளிகளை பலிகொடுக்காமல், இந்தியப் படையினர் பாரிய எடுப்புக்களில் முன்னெறும் போது தந்திரோபாயமாகப் பின்வாங்குவதும், பின்னர் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது பதுங்கியிருந்து பதிலடி கொடுப்பது என்றும் இந்தியப் படையினருக்கு எதிரான போரை புலிகள் மிகவும் லாவகமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கடலில் ஒரு பெரிய அலை அடித்து வரும்போது வீரம் என்று கூறிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலைக்கு எதிரில் நின்றால், வேகத்துடன் வரும் அலை எம்மை அடித்து, சுருட்டி, தூக்கி எறிந்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும். அதேவேளை அலையில் திசையில் அலையுடன் சேர்ந்து சிறிது நீந்திச் சென்று பின்னர் தருனம் பார்த்து எமக்கு விருப்பிய திசையில் நீந்துவதே பாரிய அலையைச் சமாளிப்பதற்குள்ள ஒரே வழி. சிறந்த வழியும் அதுதான்.
இந்தியப் படை என்கின்ற பாரிய அலை ஈழத்தில் அடித்து வந்தபோது விடுதலைப் புலிகள் அதனை அவ்வாறே சமாளித்தார்கள். அலையில் போக்கில் சிறிது ஓடி, போக்குக் காண்பித்து விட்டு, பின்னர் இந்திய அலையை எதிர்த்து நீந்த ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தியப் படையினர் பாரிய எண்ணிக்கையிலும், பலத்துடனும் புலிகள் மீது படையெடுத்தபோது இந்தியப் படையினருக்குப் போக்கு காண்பித்துவிட்டு தமது பலத்தைத் தக்கவைத்தபடி புலிகள் பின்வாங்கினார்கள். தமக்குச் சாதகமான இடங்களில் மட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு, இந்தியப் படையினர் பலவீனமாக இருந்த இடங்களில் மட்டும் பதம்பார்த்துவிட்டு அவர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.
பதுங்கிப் பாய்தல்
இந்தியப் படையினர் தமது யுத்தப்பாதையில் சந்தித்த உண்மையான இக்கட்டும் புலிகளின் இந்தப் பதுங்கலாகத்தான் இருந்தது. இந்தியப் படையினருக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் போன விடயமும் புலிகளின் இந்தப் பதுங்கிப் பாய்தலுக்குத்தான். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வன்னியில் வசமாகப் பதுங்கிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருந்ததுதான் இந்தியப் படையினர் ஏறத்தாழ இரண்டு வருடங்களான ஈழத்தில் திண்டாடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிக்க முடியாததும், அவரை அழிக்க முடியாததுமே இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் பெரிய தோல்வியாக இருந்தது. புலிகளின் தலைவரை மட்டும் அழித்துவிட்டால் புலிகளின் போராட்டத்தை ஒரேடியாக நசித்துவிட முடியும் என்பது இந்தியப் படை அதிகாரிகளுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றாகவே தெரியும். அதற்கான பல முயற்சிகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளவும் பட்டன.
ஆனாலும் புலிகளின் தலைமை இந்தியப் படையினரின் அத்தனை அழுத்தங்களையும் சமாளித்தபடி தன்னையும் பாதுகாத்து, தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பாதுகாத்ததுதான் இந்தியப் படையினருடனான விடுதலைப் புலிகளின் சமருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
ஆனாலும் அந்தப் பாரிய வெற்றியைப் புலிகள் இலகுவாக ஒன்றும் பெற்றுவிடவில்லை. பெறுமதி வாய்ந்த விலைகளைக் கொடுத்தே புலிகளின் தலைமை அந்த வெற்றியை பெற்றிருந்தது. பல கஷ்டங்களை அனுபவித்தும், பல சவால்களை எதிர்கொண்டுமே புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் தேசியப் போராட்டத்தையும், அதன் வீச்சையும் தக்கவைத்திருந்தார்.
தலைவரைக் குறி வைத்து
இந்தியப் படையினர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி புலிகளுடனான யுத்தத்தை ஆரம்பித்தபோது அவர்கள் புலிகளின் தலைவரைக் குறிவைத்தே தமது முதலாவது நகர்வை ஆரம்பித்திருந்தார்கள். முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப் படையினரது பிரதான திட்டமாக இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள்.
அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கனித்திருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.
இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.
அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.
ஆனால் புலிகளின் பதிலடி அவர்கள் திட்டத்தை சுக்குநூறாக்கியிருந்தது.
இந்தியப் படையினர் பாரிய எடுப்புடன் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறங்கும் முன்னதாகவே தலைவர் பிரபாகரன் அவர்கள் பிரம்படி வீதியில் இருந்த அவரது இருப்பிடத்தை விட்டு வெளியேறி வன்னி சென்றிருந்தார். இந்தியப் படையினர் தரையிறங்கி பல இழப்புக்களைச்; சந்தித்த பின்னரே இந்தியப் படையினருக்கு புலிகளின் தலைவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லாத விடயம் தெரிந்திருந்தது.
உண்மையை அவர்கள் அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்சநஞ்மல்ல.
இதேபோன்று புலிகளின் தலைமையை அழிப்பதற்கென்று ஆரம்பம் முதல் இறுதிவரை இந்தியப் படையினர் பல முயற்சிகளை எடுத்திருந்தனர். ஆனால் பலத்த விலை கொடுத்து அவர்கள் தோல்லியையே கண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் தலைமையைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட நகர்வுகள் பற்றியும், அவற்றை முறியடித்த தேசியத் தலைமையின் வீரம் பற்றியும், அதேவேளை இந்தியப் படையினரின் இடைவிடாத அழுத்தம் காரணமாக புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக் கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்க முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.