அமெரிக்க ராஜதந்திர நகர்வில் சிக்கும் சிறிலங்கா!
5 மாசி 2014 புதன் 17:20 | பார்வைகள் : 9925
2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் மீது இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது மீண்டுமொரு தடவை அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.
இது தொடர்பில் சிறிலங்காவைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது நம்பகமான விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி அழுத்தம் கொடுப்பதற்காக கடந்த வார இறுதியில் மூத்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டதானது அமெரிக்காவின் சிறந்த ஒரு நகர்வாகக் காணப்படுகிறது.
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துவதுடன் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுள் பெருமளவானவர்கள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலேயே படுகொலை செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ ரீதியாக பொறுப்புக் கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழித்துள்ளது. அத்துடன் யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வைப்பதற்காக அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
போரின் போது சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளாலும் தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அசட்டை செய்துள்ளார். மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் சிறிலங்காவில் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்குமாறு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு எதிராக கோரிக்கைகளை முன்வைப்பதைக் கைவிடுவதென்பது அனைத்துலக சமூகத்திற்கும் அமெரிக்காவுக்கும் இலகுவான காரியமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறான ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை தொடர்பில் தாம் பதிலாளிக்காது தட்டிக்கழிக்க முடியும் என்கின்ற சமிக்கையை குற்றமிழைத்தவர்களுக்கு வழங்குகின்ற ஒன்றாகவும் துன்பகரமான சம்பவமாகவும் இது காணப்படும்.
ராஜபக்ச தனது உள்நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எவரும் அனுமதிக்கக் கூடாது. முதலீடு தொடர்பில் ராஜபக்ச சிறியளவில் ஆர்வம் காண்பிக்கிறார். ஆனால் இவரது அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை விமர்சிக்கின்றவர்களைப் படுகொலை செய்து வருகிறது.
இந்நிலையில் ராஜபக்சவுக்கு எதிராக அழுத்தங்களை வழங்கி போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பளிக்கக் கூடிய நம்பகமான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்துவருகின்றது என்பது உண்மையாகும். அதாவது அனைத்துலக சமூகத்தின் இவ்வாறான அழுத்தத்தால் ராஜபக்ச தான் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போன சந்தர்ப்பங்கள் பல உண்டு. எடுத்துக்காட்டாக கடந்த செப்ரெம்பரில் ராஜபக்சவின் விருப்பிற்கு மாறாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறக்கூடாது எனப் பல ஆண்டுகள் சிறிலங்கா அதிபர் தனது எதிர்ப்பைக் காண்பித்திருந்தார். தற்போது புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபை அண்மையில் சிறிலங்கா மீது சுயாதீன அனைத்துலக போர்க் குற்ற விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது. போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதற்குப் பொறுப்பளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் இலங்கையர்களுடன் அனைத்துலக சமூகம் இணைந்து செயற்படுவது மிகமுக்கியமானதாகும்.
- நித்தியபாரதி