போர்க்குற்ற விசாரணை! தமிழர் தரப்பின் குழப்பம்!
23 மார்கழி 2013 திங்கள் 10:27 | பார்வைகள் : 9936
சர்வதேச போர்க்குற்ற விசாரணை இப்போது மெல்ல மெல்ல விவாதத்துக்குரிய விவகாரமாக மாறி வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இன்னமும் நான்கு மாதங்கள் கூட இல்லாத நிலையிலும் அதனை மையப்படுத்திய நகர்வுகள் அனைத்துத் தரப்புகளிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலிலும் போர்க்குற்ற விசாரணை குறித்த விவாதங்கள் உச்சம் பெற்று வருவது இயல்பே.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சூழல் அவதானிக்கப்பட்டதே. என்றாலும், இப்போது சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பதற்கு வலுவான வாதங்களை முன் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
போர் முடிவுக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முழுதாக முடிந்துள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் இதுவரை காத்திரமான, சுதந்திரமான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.
இது ஒன்றே, இனியும் பொறுப்பதற்கில்லை. சர்வதேச விசாரணை ஒன்றே வழி என்ற முடிவுக்கு சர்வதேச சமூகம் வரவேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலையில் ஜேர்மனியின் பிறீமர் நகரில் அண்மையில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் இலங்கை அர சாங்கம் இனப்படுகொலைகளை செய்ததாகவும் இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்துக்கு இழுக்கப் பலதரப்பினரும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரையும், போரின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களையும் ஒன்றிணைக்கும் முயற்சி களும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
போரின் போது நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை, அது எந்தக் கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
ஏனென்றால், இது ஒன்றும் உலகின் தனித்து ஒதுக்கப்பட்டுள்ள பிரச்சினை அல்ல.
உலகின் முக்கியமான அதிகார சக்திகள் எல்லாம் தொடர்புபட்டுள்ள ஒரு விவகாரம்.
தமிழர் தரப்பு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறைகளில் எங்கேனும் ஒரு சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட ஒட் டுமொத்த பொறுப்புக்கூறல் முயற்சிகளையும் அதல பாதாளத்துக்குள் தள்ளி விடும்.
அண்மையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
யதார்த்தத்துக்கு ஏற்ப இலட்சியங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அது இந்த விடயத்தில் முற்றிலும் பொருந்தத்தக்கதொரு விடயம்.
போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு நேரடிக் காரணமானவர்களை நோக்கி சுண்டுவிரல் நீட்டப்படப் போகிறதா அல்லது மறைமுக ஒத்துழைப்பு வழங்கியவர்களை நோக்கியும் குற்றச்சாட்டு நீளப் போகிறதா என்பதைப் பொறுத்தே இதன் சாத்தியப்பாடு அமையப் போகிறது.
அண்மைக்காலத்தில் இந்தியாவும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளி என்று வலியுறுத்தப்படும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் நோக்கில், உள்ளூர் அரசியல் சக்திகள் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை புலம்பெயர் தமிழர்களில் ஒருபகுதியினரும் கைதட்டி வரவேற்பதைக் காணமுடிகிறது.
இங்கு காங்கிரஸைத் தோற்கடிப்பது என்பது வேறு விடயம். இந்தியாவைக் குற்றவாளியாக நிறுத்துவதென்பது வேறு விடயம்.
ஆனால், இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஜெனீவாவில் தமிழர் தரப்புக்குப் பாதிப்புக்களைத் தரக்கூடியது என்பதை பலரும் நினைவில் கொள்ளவில்லை.
மன்னாரில் நெல்சன் மண்டேலாவின் நினைவு நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிப் பிரமுகர் ஒருவர் உரையாற்றிய போது இந்தியாவும் போர்க்குற்றங்களுக்குக் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனை தமிழ் இணைய ஊடகங்கள் பலவும் முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தன.
ஆனால், அது எந்தளவுக்கு போர்க்குற்ற விசாரணையைப் பலவீனப்படுத்தும் என்பதையிட்டு பெரிதாக யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னிலைப்படுத்தி அதனை நடத்திய இல ங்கை அரசாங்கத்தையும் அதற்கு உடந்தையாக இருந்த நாடுகள், நபர்களையும் சர்வதேச அளவில் குற்றவாளிகளாக்க தமிழர் தரப்பு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலிக்கப் போவதில்லை.
ஏனென்றால் புலிகளுக்கு எதிரான போருக்கான நியாயப்பாடுகளை உலகம் இன்னமும் உண்மையானதாகவே ஏற்றுக் கொள்கிறது.
அது தவறாக முன்னெடுக்கப்பட்ட போர் என்ற கருத்து உலகின் எந்தவொரு நாட்டிடமும் ஏற்படவில்லை. அதனால் தான் புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த இயக்கத்தின் மீது தடைவிதித்துள்ள 32 நாடுகளில் ஒன்றுகூட அதை நீக்க முனையவில்லை.
அத்துடன் போரின் போது நடந்த மீறல்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தும் அரசியல் தீர்வுக்கு வலியுறுத்தும் அமெரிக்கா, இந் தியா போன்ற நாடுகளும் கூட ஏதோ ஒரு வகையில் இந்தப் போருக்கு ஆதரவு அளித்துள்ளன.
அமெரிக்கா கொடுத்த தகவல்களின் பேரில் தான் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்தியா கொடுத்த ஆயுத தளபாடங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தான், புலிகளுக்கு எதிரான போர் தீவிரம் பெறக் காரணமாயின.
எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதி ரான போரை நடத்திய, அதற்கு ஆதரவளித்த அல்லது உடந்தையாக இருந்த நாடுகளையெல்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது இன்றைய நிலையில் மிகையானது.
அத்தகைய எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. அத்தகையதொரு முயற்சியில் எவரே னும் இறங்கினால், அதனை ஒரு நாடும் ஆதரிக்கப் போவதும் இல்லை. ஆனால், அரசாங்கமோ மிகத் தந்திரமாக இந்தப் போர்க்குற்ற விவகாரத்துக்குள் இந்தியாவையும் இழுத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது, இந்தியப் படைகளும் தமிழர் களைப் படுகொலை செய்துள்ளதான கருத்துகளையும், ஆதாரங்களையும் அரசாங்கம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கத் தொடங்கியுள்ளது,
இது, ஜெனீவாவில் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் இந்தியாவை அதிலிருந்து விலக வைப்பதற்கான ஒரு நகர்வு என்பதே உண்மை.
இத்தகைய கட்டத்தில் புலிகளுக்கு எதிரான போரை மையப்படுத்தி, அதில் சம்பந்தப்பட்ட தரப்புகளை சர்வதேச விசாரணைக்கு இழுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை.
அதேவேளை, போரின் போது நிகழ்ந்த மீறல்கள், குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தும் முயற்சிகளையும் அது பலவீனப்படுத்தி பின்வாங்க வைத்துவிடும். போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மீறல்களுக்கு பொறுப்புக் கூறவைக்கும் முயற்சிகள் தான், சர்வதேச அளவில் வலுவுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
அதை பலவீனப்படுத்த அரசாங்கம் தன் னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தகையதொரு முயற்சி தான் இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற கருத்து.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் மட்டுமன்றி, இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு உள்ளிட்ட எல்லா விடயங்களிலுமே, இந்தியா முக்கியமானதொரு பாத்திரத்தை வகிக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக, கத்தியை நீட் டிக் கொண்டு ஒருபோதும் இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்கவோ, தமிழ ருக்கான ஒரு தீர்வைப் பெற்று விடவோ முடியாது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விடயத்தில் முழுமையான கருத்து ஒருமைப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
யதார்த்தத்தையும், பூகோள அரசியல் சூழ லையும் புரிந்து கொள்ளாமல், எந்தத் தரப்பு எத்தகைய வலுவான முயற்சிகளை மேற் கொண்டாலும் அது பயனற்றுப் போகும்.
குறிப்பாக விடுதலைப் புலிகளையே அதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
விடுதலைப் புலிகள் கூட கடைசியில் ஒரு கட்டத்தில் இந்தியாவின் தயவுக்காக, அதன் ஆதரவுக்காக ஏங்கினார்கள் என்பது வெளிப்படை. அதுபோலத் தான் அமெரிக்கா விடயத்திலும்.
சர்வதேச சக்திகளின் ஆதரவுடன்தான், தமிழர்கள் இனி தமக்கான எந்த தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டு விட்ட நிலையில், முடிந்தளவுக்கு வெளியுலகில் நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதே புத்திசாலித்தனமான அணுகு முறையாக இருக்கும்.
- சுபத்ரா