தமிழீழ விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி பிரிகேடியர் பானு
8 ஆனி 2012 வெள்ளி 13:58 | பார்வைகள் : 10791
நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம்
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழிநடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது.
தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் பிரிகேடியர்.பானு அவர்களும் ஒருவராகவிருந்தார்.
உலகில் அடக்கப்பட்டு,அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போர் பற்றிய வரலாறு என்பது காலம் குறித்து எழுதி முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல,விரிவாக ஒவ்வொரு காலகட்டத்தையும் வைத்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.தளபதி பானு அவர்களைப் பற்றி எழுதுகின்றபோது, முழு வரலாறும் எழுத வேண்டிய நிலை இருந்தும் இத் தொடரில் அதனை எழுத முடியாது என்பதனால் அவருடைய விடுதலை சார்ந்த சில நிகழ்வுகளை இங்கு பதிவாக வைப்பதற்கு விரும்புகின்றோம்.இணைந்த காலம் முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் ஒருவரான பானு அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது மாபெரும் விடுதலை இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.
தமிழீழத்தின் யாழ் மண்ணின் பெருமைக்குரிய தளபதிகளில் ஒருவரான பானு அரியாலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது 1983 ம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரத்தைக்கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் அரியாலை என்கின்ற ஊர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து அழியாத பதிவைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் பதியப்பட்டுள்ளது. மூத்த மாவீரர்களான லெப்.சீலன், லெப் .கேணல் புலேந்திரன் போன்ற முன்னணிப் போராளிகள் விடுதலைக்கான செயல்பாடுகளுக்காக இங்கு தங்கியிருந்து செயல்பட்டனர். யாழ்ப்பணத்தில் ஏனைய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியபோதும், போராளிகளின் மறைந்த வாழ்விடம் அரியாலையிலும் அமைந்திருந்தது. இந்தவகையில் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் அரியாலை பெற்றுள்ளது.தமிழ்மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக எழுந்த மூத்த போராளிகளான லெப்.கேணல் சந்தோசம், தளபதி பொட்டம்மான் போன்றவர்கள் அரியாலை மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதில் இந்தமண்ணுக்கு மேலும் சிறப்பான ஓர் இடம் வரலாற்றில் கிடைத்திருக்கின்றது.
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தளபதி பானு மன்னார் மாவட்டத்தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்களின் குழுவில் இணைக்கப்பட்டார். லெப்கேணல்.விக்டர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியை மேற்கொண்டிருந்தவேளையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி மன்னார் மாவட்டத் தளபதியாக விக்டர் நியமனம் பெற்றார். அந்த வேளையில் தளபதி பானு லெப்கேணல் விக்டர் அவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று விடுதலைக்கான பணியை மேற் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பொருளாதார மேம்பாட்டைக்கருத்தில்கொண்டு விவசாயப் பண்ணைகள்,நெற்செய்கை ,வியாபாரம் சிறு கைத்தொழில் போன்றவைகளை தனது இளம் வயதில் மிகுந்த திட்டமிடலில் மேற்கொண்டு ஏனைய மாவட்டப் போராளிகளுக்கு முன்மாதிரியாகவிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு-அம்பாறை ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளுக்கும் பொறுப்பாக தளபதிகள் பணிநியமனம் செய்தபோது மன்னார் மாவட்டத்திற்குத் தளபதியாக லெப் கேணல் விக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார். தேசியத்தலைவர் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் லெப் கேணல் விக்டர் அவர்களும் ஒருவர் என்பதில் மன்னார் மண் பெருமிதம் கொள்ளுகின்றது.
இக் காலத்தில் மன்னார் மாவட்ட விடுதலைப்புலிகள் என்றால் அவர்களுக்கு ஒரு அதிரடி அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததற்கு தளபதி விக்டர் அவர்களின் விடுதலையிலிருந்த பற்றும்,தீவிர தாக்குதல் நடவடிக்கைகளும்,தேசியத் தலைவர் மீது வைத்திருந்த மதிப்பும் காரணமாக அமைந்திருந்தன.விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் லெப் கேணல் என்ற நிலையிலும் தளபதி விக்டர் போராட்ட வரலாற்றில் முக்கிய பதிவாகவும் இடம்பெற்றார்.
தளபதி விக்டர் உடன் களமாடிய பானு அன்று ஒவ்வொரு தாக்குதல்களிலும் விக்டருக்கு பாதுகாப்பு அரணாகவே பங்கெடுப்பார். தளபதி விக்டர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னேறிய நிலையிலே தனது தாக்குதலை மேற்கொள்ளுவார் என்பதை அக் காலத்தில் போர்ப் பணியிலிருந்த போராளிகள் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது.
தமிழீழத்தில் தாய்த் தமிழகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள மன்னார் தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் அறியப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகின்றது. தாய்த் தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான போக்கு வரவு த்துத்துறைமுகமாக இருக்க வேண்டிய நிலையிலுள்ள மன்னார் பல உலக நாடுகளின் எதிர் பார்ப்பில் எண்ணை வளமுள்ள இடமாகவும் மன்னார் வளைகுடா இருப்பதும்,இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
லெப்கேணல் விக்டர் அவர்களின் வீரச்சாவினைத் தொடர்ந்து லெப் கேணல் ராதா மன்னார் மாவட்டத் தளபதியாக பணிநியமனம் பெற்றார். இக் காலத்தில் பானு தளபதி ராதா அவர்களின் தலைமையில் நடந்த பல தாக்குதல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
நேர்த்தியான திட்டமிடலிலும், நிருவாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் இனங்காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தளபதியாகும், விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பாசறையில் பயிற்றுனராக பணியாற்றிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவிருந்தார்.மன்னார் மாவட்டத்தில் தளபதி ராதா அவர்களின் தாக்குதல் பணிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஒரு பலமான நிலையை உருவாக்கிக்கொடுத்தன. அமைதியும்,ஆற்றலும் நிறைந்த தளபதி ராதா அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட தளபதி பானு அவர்கள்,தளபதி ராதா அவர்கள் யாழ்மாவட்ட தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட வேளையில் அவருடன் தான் பிறந்த மண்ணுக்கு பயணமானார். அங்கும் தளபதி ராதா அவர்களின் தலைமையில் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களில் பங்குகொண்டார்.
முகாமுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளை தளபதி ராதா அவர்களின் தலைமையில் முன்னின்று தடுத்து ராதா அவர்களின் தாக்குதல் போராளிகளில் முதன்மைப் போராளியாக மாறியிருந்தார். யாழ்ப்பாணம் கட்டுவன் என்ற ஊரில் முன்னேறிய சிங்களப் படையினரை தடுத்து தாக்கும் பணியில் நடந்த சண்டையில் போராளிகளை தளத்திற்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் தளபதி ராதா தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக,வரலாறு உருவாக்கிய தளபதிகள்,தங்கள் வீரச்சாவு வரை விழி மூடாது விடுதலைக்காக உழைத்தனர்.தங்கள் பாதம் பதிந்த தாய் மண்ணில் இறுதிவரை பயணித்தனர்.
1987 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான போர் மூண்டது. தேசியத் தலைவர் அவர்கள் மணலாறு சென்றார். தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மணலாறு சென்ற தளபதி பானு தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார். மணலாற்றில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டு தலைவர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளில் ஒருவரானார்.
மன்னார் மாவட்டத் தளபதியாக பானு தலைவரின் கட்டளைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இக் காலத்தில் மன்னார் மாவட்ட போராளிகள் குழம்பிப் போயிருந்தனர். வழிநடத்தல் ஒழுங்கின்றி சிதறிப் போயிருந்தனர். தளபதி பானு அவர்களின் மன்னார் வருகையைத் தொடர்ந்து மன்னாரில் போர் எழுச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது.போராளிகளை ஒன்றுபடுத்தினார். புதிய போராளிகளை இணைத்து பயிற்சிப் பாசறையை ஆரம்பித்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களை போராளிகளாக உருவாக்கி தலைவரின் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தார். பானு அவர்கள் முதலில் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் விடுதலைக்காக முதல் களமாடிய மன்னார் மாவட்டத்தில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமானது.ஏனெனில் மன்னார் போராளிகளையும், மக்களையும் மிகவும் நெஞ்சார நேசித்தார். அக்காலத்தில் தான் பிறந்த யாழ் மண்ணை விட மன்னார் மண் தளபதி பானுவுக்கு மிகவும் பரீட்சியமானது.
களத்தில் அனைத்தும் தெரிந்த தளபதியாக பானு காணப்பட்டார். இயக்கத்தின் பாசறைகளில் தேவையான அனைத்து உபகரண அமைப்புக்களையும், மின்சார இணைப்புக்களையும் முன்னின்று செய்து தளபதிக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினர். தளத்தில், களத்தில் தளபதி பானு தலைசிறந்த போராளியாக தென்பட்டார். ஆரம்ப காலத்தில் நீண்ட காலம் மன்னாரில் பணியாற்றி மன்னார் மக்களின் பாசத்திற்குரியவரானார்.
மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறமாக அமைந்துள்ள வயலும்,காடும், கடலும் ஒன்றாக பிணைந்து இருக்கின்ற வட்டமாக முள்ளிக்குளம் இருக்கின்றது.
மன்னார் மாவட்டத் தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் இந்தியப் படையினரின் ஆதரவோடு இயங்கிய தமிழ்த் தேசத்துரோகக்கும்பல் ( PLOT ) முள்ளிக்குளத்தில் தங்கியிருந்தனர். இங்கு 25 .11 .1984 அன்று யாழ்ப்பாணம் சுழிபுரம் என்னுமிடத்தில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்காக சென்றிருந்த விடுதலைப் புலிகளான புவி, தேவன், ஈஸ்வரன், சின்னச்சிவா, சிவா, சிவம், சீலன் ஆகியோரை படுகொலை செய்த சங்கிலி தலைமையிலான குழுவினர் தங்கி மேலும் கொலைகள், காசு பறிப்பு கொள்ளை, என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களை தாக்கியழிப்பதற்காக 1990 .01 .01 அன்று கடல் வழியாக தரையிறங்கிய விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு தளபதி பானு தலைமை தாங்கியிருந்தார்.இத் தாக்குதலில் தேசத்துரோகக் கும்பல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் மேஜர் அகத்தியர் உட்பட்ட 10 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
தளபதி பானு விழுப்புண் அடைந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி தாய்த் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று குணமடைந்து திரும்பியிருந்தார்.
சுபன் மன்னார் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றவுடன் தளபதி பானு அவர்கள் யாழ் மணியம் தோட்டத்தில் தங்கியிருந்த விடுதலைக்கான எதிர்ப்பாளர் குழுவினரை விரட்டியடிக்கும் நோக்கோடு தான் பிறந்த மண்ணில் மீண்டும் கால்பதித்து குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து 1990 ம் ஆண்டு தான் பிறந்த மண்ணின் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
பலம் பொருந்திய அமைப்பாகவும், படைத்துறை விரிவாக்கம் பெற்ற நிலையிலும்,நிருவாக்கக் கட்டுமானங்கள் உருவாக்கம் பெற்ற காலத்திலும் மக்கள் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றியமைக்கப்பட்ட காலத்திலும் தளபதி பானு யாழ் மாவட்டத்தில் தளபதியாக பணியிலிருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட செயலகத்தை திறம்பட,சிறப்பாக,தேசியத் தலைவர் பாராட்டுமளவுக்கு செய்து காட்டினார்.
யாழ் மண்ணின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்ப் படையின் தேசியசீருடையில் பவனிவந்த பானு மக்கள், போராளிகள் எல்லோரிடமும் அன்பாகப் பழகி எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றிருந்தார்.படைத்துறையில் நிருவாகச் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவர், போராளிகள் தங்குகின்ற முகாம்கள்,பயிற்சி பெறுகின்ற பாசறைகள்,எதிரியை தடுத்து நிறுத்தும் தடை முகாம் அமைப்புக்கள் என்பவற்றில் தனித்திறமையை வெளிக்காட்டி தலைவரின் பலமான தளபதிகளில் ஒருவரானார்.
மூத்த போராளிகளை மதிக்கும் திறன் அவர்களுக்குரிய பணியை பகிர்ந்தளித்து சிறப்பான பயன்பாட்டை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றில் தளபதி பானு அவர்களின் நிருவாகத்திறன் வெளிப்படுத்தப்பட்டதை போராளிகளின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
யாழ் மாவட்டம்,தமிழீழத்தில் மக்கள் தொகை கூடிய மாவட்டமாகும் தமிழர்களின் தனிச் சிறப்புக்கு அடையாளமாகவும், மண்வாசனையோடு தமிழரின் பண்பாடு மேலோங்கிய இடமாகும் இருக்கின்றது ஆனால் இம் மண்ணில் எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைநிலையில் வைத்திருந்த அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமான யாழ் கோட்டை தீவுகளோடு இணைந்ததாக யாழ் தீபகற்பத்தில் அழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. இக் கோட்டை தமிழர்களின் தனித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவமானச்சின்னமாகும்.எம்மை அடக்கி ஒடுக்கியவர்கள் வாழ்ந்த இடமாகவும் இருப்பதனால் தமிழரின் அடிமை வரலாற்றிலிருந்து இது அழிக்கப்பட வேண்ட&