உறங்கி கிடப்போமா...! ஹீத்ரோவில் சொன்ன சேதி
6 ஆனி 2012 புதன் 05:29 | பார்வைகள் : 10750
அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் ஹீத்ரோ 4ஆவது விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை உயர்த்திபடி நின்றார்கள்.இனப்படுகொலை குற்றவாளி மகிந்த என்று சத்தமிட்டபடியே நின்றிருந்தார்கள்.
அவர்களுக்கு தெரியும் அவர்களின் உறவுகளை கொன்று குவித்து இனப்படுகொலை வெறியாட்டமாடிய அந்த நரபலிமனிதனை அவர்களின் முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்தானிய காவல்துறை அழைத்து கொண்டு வெளியேறாது என்று தெரியும்.
அப்படி இருந்தும் அவர்கள் அந்த வாசலில் தேசியகொடிகளை ஏந்தியபடியே திரண்டு நின்றிருந்தார்கள்.
அவர்களுக்கு நன்கு தெரியும். அந்த சிங்களதேச தலைவனை சுற்றி சர்வதேச இராஜதந்திரிகளுக்கான சலுகைகளும், இறையாண்மை தேசமொன்றின் தலைவன் என்ற காப்பு அரண்களாக அவனை காத்து நிற்கின்றன என்று தெரிந்திருந்தும் அவர்கள் அந்த இரவில் விமானநிலைய வாசலில் நின்றிருந்தார்கள்.
குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் அவர்கள் வந்திருந்தாhர்கள். இத்தனைக்கும் மிகக்குறுகிய கால அவகாசத்தில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளே மக்களை அங்கு திரள வைத்திருந்தது.
அவர்கள் எப்போதும் இதற்கான தயார் நிலையிலேயே கடந்த சில நாட்களாக இருந்திருக்கிறார்கள் என்பது அவர்கள், இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து அங்கு திரண்டிருந்தது காட்டியது.
எங்கள் இனத்தின் அடையாளங்கள அனைத்தையும் அழித்து எறிந்து எம்மை துடைத்தெறிய கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாதத்துக்கு தெளிவாக சில விடயங்களை அங்கு திரண்டிருந்த மக்கள் காட்டியிருக்கிறார்கள்.
ஏதோ ஒரு கடற்கரையில், மரங்களற்ற வெளி ஒன்றில் சிங்கள தேசத்தின் இரண்டு படையணிகள் எதிர் எதிர் திசைகளில் வந்து ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் சிங்ககொடியை நாட்டி விட்டவுடன் தமிழர்களின் உரிமைப்போரும் விடுதலைக்கான பெருங்குரலும் அடங்கிவிடும் என்ற சிங்கள பேரினவாத நினைப்பு பிழை என்பதை அந்த மக்கள் ஹீத்ரோவில் காட்டினார்கள்.
உலகத்து ஆதிக்க சக்திகளின் துணையுடன் எமது மக்களை அழித்து எங்கள் மண்ணை அபகரித்து அதனை ஆக்கிரமித்து நிற்கலாம். ஆனால் நாம் ஒருபோதும் இறுதி நேரம் வரைக்கும் படுகொலை வளையம் நான்கு பக்கமும் சுற்றி இறுக்கி வளைத்து வந்த போதும் நின்றிருந்த வீரர்களையும் மக்களையும் மறந்துபோய் உறங்கி கிடக்க மாட்டோம் என்பதை ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒன்றுகூடி உரத்து சொன்னார்கள்.
அது வார்த்தைகளில் வடித்தெழுதி விடமுடியாத ஒரு உணர்வு எழுச்சி நிறைந்த காட்சியாக இருந்தது. மிக இயல்பாக அவர்கள் தன்னெழுச்சியுடன் ஒருமித்து நின்றிருந்தார்கள். மகிந்தவுக்கு எதிராக, சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக குரல் எழுப்பியபடியே நின்றிருந்தார்கள்.
அவர்களுக்கு முன்பாக நின்றிருந்த ஆயுதம் ஏந்திய காவல்துறையினர், அவர்களும் மனிதர்கள்தானே, அவர்களுக்கு புரிந்திருக்கும். இந்த மக்களின் கோபத்துக்கு காரணம் இருக்கிறது என்று. இந்த மக்கள் சர்வதேசத்தின் இராஜதந்திர ஏமாற்றுகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று.
அதனால்தான் தேசியகொடியை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்திருந்த ஒரு இளைஞனிடம் வந்து ஒரு காவல்துறையினன் உனது கொடியை தலைகீழாக பிடித்திருக்கிறாய் என்று சொல்லி அதனை சரிசெய்ய சொன்னான்.
எப்போவதாவது ஏக்கம் ஒன்றுவந்து நெஞ்சை அடைக்கும். மாவீரர்களின் நினைப்பு வரும்போதோ அல்லது யாராவது ஒரு தோழனின் நினைவுநாள் வந்து செல்லும்போதோ மனது வெறுமையாகி
கண்கள் ஏக்கத்தால் நிறையும். இவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் பொருளற்று போய்விடுமோ என்று.
மாவீரர்கள் மரணம் என்ற இறுதி அதிஉச்ச தியாகத்துள் உறையும் வரைக்கும் அவர்கள் எத்தனை துயர்களை எத்தனை எத்தனை துன்பங்களை, மானுடம் சந்திக்காத வலிகளை சந்தித்திருப்பார்கள். பெரும் பாரத்துடன் அவர்கள் கடந்த தூரங்கள் எவ்வளவு.சேற்றுக்குள்ளாக, சுழித்து ஓடும் நீருக்குள்ளாக எவ்வளவு நடந்திருப்பார்கள். பசியுடன் எத்தனை நாட்கள் இலக்குக்காக காத்திருந்திருப்பார்கள்.
அந்த தியாகங்களுக்கும் வலிகளுக்கும் ஒரு பொருள், ஒரு அர்த்தம் இல்லாமலேயே போய்விடுமோ என்று மனம் கலங்கி இருக்கும். ஆனால் ஹீத்ரோவில் எமது மக்கள் கூடி நின்ற
உணர்வும், எழுச்சியும் அவர்கள் தாமாகவே குழுமிய முறையும் ஒன்றை தெளிவாக சொல்லியது.
‘நாங்கள் தோற்கவில்லை’, ’நாங்கள் ஒருபோதும் தோற்க போவதும் இல்லை’ என்று. எங்களிடம் இருந்து எங்கள் தேசத்து மண்ணை பிடுங்கலாம். எங்கள் விடுதலைவீரர்கள் ஏந்திய ஆயுதங்களை அழித்து எறியலாம். கடைசியாக கிடந்த தடியையும் பிடுங்கி வீசலாம்.
ஆனால் இதோ ஹீத்ரோவில் தனது சின்ன கைகளில் ஏந்திய கொடியுடன் எங்கள் தாயகம் தமிழீழம் என்று முழங்கும் இந்த சின்னக்குரலை எப்படி நிறுத்தமுடியும். எமது மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் செய்த அரசியல் என்பதே அவர்கள் மௌனமான பின்னும் அவர்களின் இலட்சியத்துக்காக திரளும் மக்கள்தான். எமது மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
எந்த கொடியை நிரந்தமாக அகற்றிவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் வெற்றிக்களிப்புடன் பிரகடனப்படுத்துகின்றதோ, எந்த கொடி இனி ஏறாது என்று கனவில் சிங்களம் மிதக்கின்றதோ அந்த கொடியை ஏந்தி உயர்த்தி பிடிப்பதன்மூலமே சிங்களதேசத்தின் கனவுலகை உடைத்தெறியலாம் என்று.
ஹீத்ரோ விமானநிலையத்தில் உணர்வெழுச்சியுடன் கூடிய மக்கள் இனப்படுகொலை குற்றவாளி மகிந்தவுக்கும் சிங்கள பேரினவாத நினைப்புக்கும் மட்டும் சேதி சொல்லவில்லை.
சுற்றிவர சிங்கள புலனாய்வாளர்களும் பெற்றதாயையும் விற்று பிழைக்கும் ஒட்டுகுழுக்களும் நிறைந்த தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவை உணர்வுடன் பல்கலை கழகத்திலும் மற்றும் இடங்களிலும் எழு வைத்துவிட்டு இன்றுவரை சொந்த வீட்டில் உறங்காமல் எந்த நேரமும் மரணம் துரத்த துரத்த தமிழீழ நினைவுடன் செயலாற்றும் எத்தனையோ தோழர்களுக்கும் இந்த ஹீத்ரோ ஆர்ப்பாட்டம் பல சேதிகளை சொல்லி இருக்கும்.
‘நீங்கள் தனித்து நிற்கவில்லை. உங்களுடன் உலகம் முழுதுமான தமிழர்கள் நிற்கின்றோம்’ என்பதை அவர்களுக்கு சொல்லி இருக்கும். நீங்கள் இப்போது ஒருவராக ஓர் இருவராக இருக்கலாம்.
நீங்கள் ஒருநேரம் தங்குவதற்குகூட இடம் இல்லாமல் தவிக்கலாம். ஒரு சுவரொட்டியை ஒட்டுவதற்குகூட உங்களுக்கு கை தர யாரும் இல்லாமல் இப்போது இருக்கலாம். ஆனால் இதோ நாங்கள் இருக்கின்றோம். இந்த இரவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் அழைத்துகொண்டு ஹீத்ரோ வாசலில் நிற்கின்றோமே நாங்கள் நிற்போம் என்றும் உங்களுடன்.
ஹீத்ரோவில் கூடிய தமிம் மக்கள் எமது எதிரிக்கு சொன்ன செய்தியும், எமக்காக இன்னும் உயிர்ப்புடன் இயங்கும் தாயக உள்ளங்களுக்கு சொன்ன சேதியும் அர்த்தமும் ஆழமும் நிறைந்தவை.
எமது எதிரி சோர்ந்திருப்பான்.
விடுதலை தீயை அணையவிடாமல் அலையும் தோழர்கள் இன்னும் உற்சாகம் பெற்றிருப்பார்கள்.
நன்றி எம் மக்களே
ச ச முத்து