உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்
1 பங்குனி 2013 வெள்ளி 10:12 | பார்வைகள் : 10555
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்... நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத்தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது.
'இவை அசைக்க முடியாத போர்க் குற்ற ஆவணங்கள்’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். கடந்த ஆண்டு 'கில்லிங் ஃபீல்ட்ஸ்’ என்ற பெயரில் இலங்கையின் கோர முகத்தை வெளிக்கொண்டுவந்த சேனல் 4 தொலைக்காட்சிதான், இந்த ஆண்டு 'நோ ஃபயர் ஸோன்’ என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட புகைப்படங்கள், கேணல் ரமேஷ் அடித்துக் கொல்லப்படும் பதறவைக்கும் காட்சி உள்ளிட்ட பல முக்கியமான ஆதாரங்கள் இதில் உள்ளன. இந்தப் படங்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே, ''இது ஒரு சாட்சியமற்ற போர் என்று கடந்த ஆண்டு குறிப்பிட்டேன். இலங்கை அரசு அப்படித் தான் இதை நடத்தியது. நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஆதாரங்கள் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களால், அவர்களின் செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்டவை. இலங்கையை விட்டு வெளியேறி வந்திருக்கும் அவர்களிடம் இருந்து இதைப் பெற்றுதான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார்.
இலங்கை யுத்தம் நடைபெற்றபோது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அமைதி காத்த மேற்கத்திய நாடுகளும், அவர்களின் ஊடகங்களும் இப்போது பதறுகின்றன. தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்ததைப் போல, 'இலங்கை ஒரு போர்க் குற்றம் புரிந்த நாடு’ என்கிறார்கள். பல நாடுகள் இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றன. ஏதேனும் ஒரு வகையில் நீதியையும் தீர்வையும் தேடும் தமிழர் ஆதரவு அரசியல் சக்திகள், இந்த உலகளாவிய ஆதரவை இலங்கைக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசோ, 'அனைத்தும் பொய்’ என்று போகிற போக்கில் நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தின் கோபமும் எதிர்ப்பும் இலங்கையைத் துரும்பு அளவுக்குக்கூடச் சலனப்படுத்தவில்லை.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றம் குறித்த விவாதங்கள் விரிவாக நடைபெறவிருக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருந்து பல தமிழ் அரசியல் குழுக்கள் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளன. இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவு இலங்கைக்கு ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், யதார்த்தம் என்ன?
கடந்த ஆண்டு நடைபெற்ற இதே ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில், 'நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்’ என்று அமெரிக்கா கண்டிப்பு காட்டியது. அதைப் பெரிய வெற்றியாக எல்லோரும் பேசினார்கள். நல்லிணக்க ஆணைக் குழு என்பது வேறு ஒன்றும் இல்லை... இலங்கை அரசே ஒரு குழு அமைத்து, தன்னைத்தானே விசாரித்துக் கொண்டது. அப்படி விசாரித்து தமிழர்களுக்குச் சில சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்த அந்தக் குழு பரிந்துரைத்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தீர்ப்பு. இந்த ஒரு வருடத்தில் அந்தக் கண்துடைப்பு பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு அமல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் மறுபடியும் ஐ.நா. கூட்டம் நடக்கிறது. இப்போது என்ன நடக்கும்?
''நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மேலும் ஓர் ஆண்டு அவகாசம் கேட்பார்கள். நிச்சயம் அதற்கு அனுமதி அளிக்கப்படும். அதைத் தாண்டி சேனல் 4-ன் ஆதாரங்களால் சில சர்ச்சைகள் உருவாகலாம். இதற்காக, பெயரளவுக்கு இலங்கையை மேற்கத்திய நாடுகள் கண்டிக் கும். அதைப் பெரிய வெற்றியாக நாம் கொண்டா டலாம். ஆனால், அதனால் இலங்கைக்குச் சிறு ஆபத்தும் நேராது. ஏனெனில், இலங்கையை இந்தியா மட்டும் பாதுகாக்கவில்லை. சீனா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையை அரண்போலக் காக்கின்றன!'' என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ப்பது பலருக்கு வியப்பை அளிக்கலாம். 'இலங்கை மீது விசாரணை வேண்டும்; நடவடிக்கை வேண்டும்’ என்ற அமெரிக்காவின் சமீபகாலப் போக்குகளை வைத்துப் பார்க்கும்போது இது முரணாகத் தோன்றலாம். ஆனால், நடைமுறையில் சீனாவின் செல்வாக்கு, இலங்கைத் தீவில் எல்லை கடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கையைச் செல்லமாகக் குட்டிவைக்க அமெரிக்கா நினைக்கிறது; தண்டிப்பதற்கு அல்ல!
இதற்கு உதாரணம் ஒன்றும் சொல்ல முடியும்... 2009 இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த இலங்கை ராணுவ ஜெனரல்களில் ஒருவர் சாவேந்திர சில்வா. போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? அதே அமெரிக்க ராணுவத்துக்கு, பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகரமாக முறியடிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறார். இதுதான் இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் நிஜ முகம்!
இன்னொரு புறம், இத்தகைய ஆதாரங்களை முன்வைத்து இந்திய அரசை மனம் இரங்கவைத்துவிடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பிணங்களைக் கண்டு பதறாத காங்கிரஸ் அரசின் 'கூட்டு மனசாட்சி’, பாலச்சந்திரனின் ஒரே சடலத்தில் விழித்தெழும் என நம்புவது அரசியல் அறியாமை. எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்னொரு கோணத்தையும் நாம் மனதில்கொள்ள வேண்டும்.
சேனல் 4 ஈழப் போர் தொடர்பான ஆதாரங்களைப் படிப்படியாக வெளியிடும் பரபரப்பு உத்தி, மிகவும் ஆபத்தானது. பாலச்சந்திரன் குண்டு துளைக்கப்பட்டு சடலமாக விழுந்துகிடக்கும் புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதை வெளியிட்ட சேனல் 4-தான் இப்போது பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. ''இந்தப் புகைப்படங்கள் ஒரே கேமராவால் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை. உண்மையானவை'' என்று சொல்கிறார் கேலம் மெக்ரே. எனில், நிச்சயம் கடந்த வருடமே பாலச் சந்திரன் உயிருடன் உள்ள புகைப்படமும் அவர் களிடம் இருந்திருக்கிறது. அடுத்த ஆண்டு பாலச் சந்திரன் கொல்லப்பட்ட வீடியோகூட வரலாம். இதை மெக்ரேவும் ஒப்புக்கொள்கிறார். ''எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பொருத்த மான நேரத்தில் வெளியிடுவோம்'' என்கிறார். 'பொருத்தமான நேரம்’ என அவர் சொல்வதன் பொருள் என்ன? அடுத்த ஆண்டு ஜெனிவா கூட்டமா? இங்கிலாந்து அரசு, கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 3.8 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள ஆயுதங்களை இலங்கை ராணுவத்துக்கு வியாபாரம் செய்திருக்கிறது. ஒரு பக்கம் இலங்கை யின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஆயுத வியாபாரம் செய்யும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது சேனல் 4-ன் ஆவணப்படம் சிறு விமர்சனத்தையும் வைக்கவில்லை.
தமிழர் அமைப்புகளும் இதைப் பற்றி எதுவும் கேட்காமல் 'யாரோ ஒருவர் செய்தால் சரிதான்’ என்று ஒதுங்கிப்போகிறார்கள். ஆனால், நிதர்சன யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு, நமக்கான நீதியை யாரேனும் பெற்றுத் தருவார்கள் என நம்பியிருக்காமல், இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அதுதான் தீர்வுக்கான வழி. மற்றபடி மனசாட்சியைத் தட்டி எழுப்பி நியாயம் பெறுவ தற்கு இலங்கையையும் இந்தியாவையும் நியாயவான்கள் ஆட்சி செலுத்தவில்லை. இலங்கை, பிணங்களின் தேசம். ராஜபக்ஷே, சுடுகாட்டின் அரசன்!
-ஆனந்தவிகடன்