ஜனாதிபதி மஹிந்தவின் யாழ். பயணம் புலப்படுத்தும் பரிமாணங்கள்
19 மாசி 2013 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 10096
ஒரு நாட்டின் அதிபர் தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு பிரதேசத்துக்கு பயணம் செய்யும் போது அந்தப் பகுதி மக்களிடையே பலவிதமான எதிர்பார்ப்புக்கள் எழுவதுண்டு.
அவர்கள் தாம் முகம் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுமெனவும் தமது நலன்கள் தொடர்பான ஏதாவது புதிய வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் எனவும் கற்பனைகள் செய்வதுண்டு.
அவ்வகையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பயணம் செய்த போது அவரின் வரவு தொடர்பாகச் சில ஆரூடங்கள் கூறப்பட்டன.
அவரின் பயணத்தின் போது வழமை போலவே திறப்பு விழாக்கள், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்குகள் எனச் சம்பிரதாயபூர்வமான சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த நெருக்கடிகளுக்கு விமோசனம் காணப்படுவது தொடர்பாகவோ எந்தவித கருத்தும் முன்வைக்கப்படவில்லை.
மாறாக அவரின் விஜயத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பவையாகவும், தமிழ் மக்கள் மீது தொடரப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதைப் பிரகடனம் செய்யும் வகையிலும் அமைந்திருந்தன.
நடைபெற்ற பல சம்பவங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் விதத்திலும் தேவைகளை உதாசீனம் செய்யும் வகையிலுமே அமைந்திருந்தன.
ஒரு நாட்டின் தலைவர் ஒரு பிரதேசத்துக்கு வருகை தரும் போது அவர் அந்தப் பகுதி மக்களின் பாரம்பரிய பண்பாட்டு முறைமைகள் மூலமே வரவேற்கப்படுவதுண்டு.
அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அவர்கள் வரவேற்கப்படும் போது நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றி மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர் பயணம் செய்த சகல இடங்களிலும் பௌத்த கலாசார முறைப்படி அவரை வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.
இந்த வரவேற்புகளை ஏற்பாடு செய்தவர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதையோ இது தமிழ் மக்கள் பாரம்பரியமாகத் தமது பண்பாட்டைப் பேணி வாழும் மண் என்பதையோ மறந்துவிட்டனர்.
அவர்கள் சிங்கள, பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கு அடிமைப்பட்டு செயற்பட்டுள்ளனர்.
அதேவேளையில் மூவினங்களின் அதிபர் எனச் சொல்லிக் கொள்ளும் ஜனாதிபதி கூட அத்தகைய ஒரு வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே திருமலையில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தில் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் சிங்கள பௌத்த முறையில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையின் போது அவரின் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றவர்கள்.
அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாகவும் நேர்மையாகவும் குரல் கொடுத்து வருபவர்கள்.
அவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என்றால் அங்கு தமிழ் மக்களின் குரல் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்பதுதான். அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை தமிழ் மக்களின் குரலைச் செவிமடுக்க ஜனாதிபதி தயாரில்லை என்பதன் பகிரங்க வெளிப்பாடாகும்.
சிங்கள, பௌத்த முறைப்படி ஜனாதிபதி வரவேற்கப்பட்டதும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்படாமையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமிழ் மக்களின் தேவைகளையும் நிராகரிக்கும் செயற்பாடுகள் எனத் தமிழ் மக்கள் நம்புவதில் எவ்வித தவறும் இருக்க முடியாது.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் தமிழ் மக்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை என்பதும் தமிழ் மக்களின் தேவைகளைத் தீர்மானிப்பதில் எவ்வித பங்கும் அவர்களுக்கு இல்லை என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.
எனினும் கூட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அழைக்கப்படாமலே இந்த அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் வலி.வடக்கில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமை தொடர்பாக ஒரு மனுவை ஜனாதிபதியிடம் கையளித்து உரையாற்றினார்.
அப்போது ஜனாதிபதி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டவை சரியானவையா எனப் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அங்கிருந்தவர்களில் சிலர் கேலி செய்யும் முறையில் பலமாகச் சிரித்து மீண்டுமொரு முறை ஜனாதிபதிக்கு வெற்றிலை வைத்தனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவை பிரதேச செயலர்களிடம் திரட்டப்பட்ட விவரங்கள் எனக் கூறித் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி அந்த மனுவை வாங்கி அதைப் பரிசீலனை செய்யும்படி வடபகுதியின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கையளித்தார்.
ஒரு மாவட்டத்தில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி மாவட்ட அரச அதிபர். ஜனாதிபதியின் சார்பாக சிவில் நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றுபவர் அவரே. ஜனாதிபதிக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட்டால் குறிப்பிட்ட மாவட்டத்தில் அதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அவருக்கே உரியதாகும்.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க வடக்கின் இராணுவக் கட்டளைத் தளபதி. அவரின் கட்டுப்பாட்டின் கீழே வலிகாமம் வடக்கில் 24 கிராமசேவகர் பிரிவுகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முட்கம்பி வேலி போடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன.
அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய பொறுப்பு மேற்படி அத்துமீறல்களைப் புரியும் இராணுவக் கட்டளைத் தளபதியிடமே ஒப்படைக்கப்படுகிறது. ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுபவரே நீதி வழங்கும் அதிகாரம் கொண்டவராக அங்கீகரிக்கப்படும் அதேவேளையில் மறுபுறம் சிவில் நிர்வாகம் இராணுவத் தரப்பிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஜனாதிபதி இந்த நடவடிக்கை மூலம் ஒரு விடயத்தை தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார். அதாவது வடக்கின் சகல நிர்வாகங்களையும் தீர்மானிக்கும் சக்தி இராணுவத் தரப்பு என்பதுதான் அது.
அதேவேளையில் பாதுகாப்பு வலயத்தைத் தளர்த்தி 24 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீளக்குடியேற அனுமதிக்கும்படி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி, சில சமயம் அந்தக் காணிகள் இராணுவத்தினருக்குத் தேவைப்படலாம் எனப் பதிலளித்தார்.
மக்கள் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து, வீடமைத்து, பயிர் செய்து வாழ்ந்த காணிகள் படையினர் தேவையெனக் கருதினால் அபகரிக்கப்படும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனவே வலி.வடக்கில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் படையினரால் அபகரிக்கப்படும் என்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சமிக்ஞை என்றே கருத வேண்டியுள்ளது. அதே வேளையில் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது குறிப்பிட்ட சில கருத்துக்களை நாம் இங்கு கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
"இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமமானவர்கள். நாம் எந்தவித பேதத்துக்கும் இடமளிக்க மாட்டோம். யாழ். மாவட்ட மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த துன்பங்களை நானறிவேன். இன்று அந்த நிலை இல்லை. அவர்கள் சமாதானத்துடன் வாழ்கிறார்கள்.''
இது ஜனாதிபதியின் உரையில் ஒரு முக்கிய பகுதியாகும்.
இங்கு இனபேதம், மதபேதம் எதுவுமே கிடையாது. நாம் எல்லோரும் சமமானவர்கள் என்ற வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது ஒரு தூய்மையான மனதிலிருந்து வரும் ஒரு சமவுடமைக் கொள்கையாளனின் கருத்துக்கள் போன்றே தோன்றும். ஆனால் அவற்றுக்குள் ஓர் இன அழிப்பின் நீண்டகால நிகழ்ச்சி நிரல் இருப்பதை எம்மில் பலரும் புரிந்து கொள்வதில்லை.
ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்துவமான குணாம்சங்கள் உண்டு. மொழி, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள் எனப் பல்வேறு கலாசார அடித்தளங்களைக் கொண்டவையாக ஒவ்வொரு இனமும் மதமும் விளங்கும். அவையே அவற்றின் தனித்துவங்களை வெளிப்படுத்தும் அடையாளங்களாகும்.
ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு மதமும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதித்து அவற்றின் தனித்துவ அடையாளங்களுக்கு மரியாதை கொடுத்து வாழும் போது ஐக்கியமும் நல்லிணக்கமும் இயல்பாகவே உருவாகும். அதாவது இன, மத பேதங்கள் பேணப்படும் அதேவேளையில் ஒன்றை மற்றொன்று அங்கீகரித்து மதிக்க வேண்டும்.
அதேவேளையில் இன, மத, பேதங்கள் இல்லையென்பது அதிகாரத்திலுள்ள இனமும், மதமும் தமக்குள் ஏனைய இனங்களையும் மதங்களையும் கருவறுத்து தமக்குள் கரைத்துக் கொள்ளும் பயங்கரச் சூழ்ச்சியின் அலங்கார வடிவமாகும்.
எனவே ஜனாதிபதியின் வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்கிக் கொள்வதும் இன அழிப்பின் நீண்டகால நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.
கடந்த முப்பது ஆண்டுகள் வடபகுதி மக்கள் துன்பம் அனுபவித்ததாகவும் தற்சமயம் மக்கள் வடக்கில் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
போர் முடிந்த பின்பு வடக்கில் நிலவும் சமாதானம் பற்றி உலகறியும். இனம்புரியாதோரால் நடத்தப்படும் மர்மக் கொலைகள், கொள்ளைகள், கப்பம் கோரிக் கடத்தல்கள், கடத்தப்பட்டுக் காணாமற் போதல், பாடசாலைப் பிள்ளைகள் கடத்தப்படல், கிறீஸ்பூத அச்சுறுத்தல், நியாயங்ளுக்காகக் குரல் கொடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள், கழிவு ஒயில் வீசல் உட்பட்ட வன்முறைகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கொலை முயற்சிகள் என வடபகுதி மக்கள் நிம்மதியற்ற ஒரு வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒரு சமாதானமான சந்தோஷமான வாழ்வு என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
அதாவது இதே மாதிரி வன்முறைகள் தொடரும் என்பதையும் அவற்றை நாம் சமாதான வாழ்வு எனவும் சந்தோஷ வாழ்வு எனவும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்தும் செய்தியாகும்.
அதாவது ஜனாதிபதியின் யாழ். பயணத்தின் போது தமிழ் மக்களின் தனித்துவ அம்சங்கள், பண்பாடுகள் மதிக்கப்படமாட்டா என்பதும் தமிழ் மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படமாட்டா என்பதும் வடக்கில் இராணுவ நிர்வாகம் இடம்பெறும் என்பதும் வடக்கில் இடம்பெறும் வன்முறைகள் தொடரும் என்பதும் தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளன.
இவை ஏற்கனவே தமிழ் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டவை எனினும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளன.