Paristamil Navigation Paristamil advert login

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பரப்பட்ட வதந்திகள்!

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பரப்பட்ட வதந்திகள்!

18 தை 2013 வெள்ளி 12:46 | பார்வைகள் : 9572


இலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப்படைத் தொகுதிக்கு தலைமை தாங்கி வந்த இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவைச் சந்திக்கச் சென்றபோது, மாத்தையா அந்த இந்திய உயரதிகாரியுடன் பேசத் தயாராக இருக்கவில்லை.

எக்காரணம் கொண்டும் இந்தியப்படை அதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடாத்த மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

மாத்தையாவின் இந்தச் செய்கை இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்திருந்தது. இப்படியான ஒரு கட்டத்தை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை.

நாங்கள் உங்களுக்கு சமாதானத்தின் செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்தியாவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே இங்கு வந்துள்ளோம்|| என்று அந்த இந்திய உயரதிகாரி மாத்தையாவிடம் தெரிவித்தார்.

அதற்கு மாத்தையா, எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை மீண்டும் எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் வரை உங்களுடன் பேச நாங்கள் தயாரில்லை என்று உறுதியாகவே தெரிவித்து விட்டார்.

பின்னர் அந்த இந்திய உயரதிகாரிகளை புலிகள் தமது அலுவலகத்தினுள் அழைத்துச் சென்று உபசரித்த போதிலும், எந்தவிதப் பேச்சுவார்த்தையையும் நடாத்தவில்லை.

இந்திய அதிகாரிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் தமது முகாமிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

பரப்பப்பட்ட வதந்திகள்


இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா தடுத்துவைத்துள்ள செய்தி தமிழ் மக்களிடையே மிக வேகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. இந்தச் செய்தியுடன் பல வதந்திகளும் சேர்ந்து பரவ ஆரம்பித்தன.

தலைவர் பிரபாகரன் இந்தியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் பலாலி இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பலவாறான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததினால், புலிகளின் தலைவர் அந்தமான் தீவுகளுக்கு இந்தியாவினால் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் சில வதந்திகள் யாழ்ப்பாண மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்தியப் படைகளின் வருகையினாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதினாலும் ஒருவித மாயையில் இருந்த தமிழ் மக்கள் அப்பொழுதுதான் விழித்தெழ ஆரம்பித்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே என்ற கேள்வி அப்பொழுதுதான் அவர்களின் மனங்களில் எழ ஆரம்பித்தது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து ஒரு பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு புலிகளின் தலைவர்கள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் சொகுசு பங்களாக்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதாகவும், ஒரு வதந்தி சென்னையில் பரப்பப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பெருந்தொகைப் பணத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொண்டு, தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், மற்றொரு வதந்தி தமிழ்நாட்டில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

புலிகளினால் தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாமல் தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களே இந்த வதந்திகளைப் பரப்புவதில் முன்நின்று செயற்பட்டார்கள். ஈழத் தமிழர்கள் தங்கியிருந்த வீடுகள், விடுதிகளுக்குச் சென்ற இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்பினார்கள்.

உண்மையிலேயே, இப்படியான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவிக்கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவினால் புதுடில்லியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் தனது எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வதற்கான சூழ்நிலை ஒன்று உருவாகும் வரையில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக்கொள்ளவே இந்தியா திட்டம் தீட்டியிருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்திலும், இந்தியப் படைகள் தமிழ் மண்ணில் வந்திறங்கும் சந்தர்ப்பத்திலும், புலிகளிடம் ஆயுதங்களை களையும் சந்தர்ப்பத்திலும், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மண்ணில் இருப்பது தமது நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று ராஜீவ் காந்தி நினைத்திருந்தார்.

பிரபாகரனின் குணம் அவருக்கு நன்கு தெரியும். பிரபாகரனின் கொள்கைப்பிடிப்பு பற்றியும், அவரது போர்க் குணம் பற்றியும் இந்தியாவின் பிரதமர் நன்கு அறிந்திருந்தார்.

அதனால், தமது இந்த தகிடுதத்தங்கள் எல்லாம் நிறைவடையும் வரை பிரபாகரனை ஈழ மண்ணில் இருந்து அன்னியப்படுத்தி, தனது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம் என்று அவர் எண்ணியிருந்தார்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் பிரபாகரனை யாழ்ப்பாணம் அனுப்புவதில்லை என்றுதான் இந்தியா முதலில் எண்ணியிருந்தது. ஆனால் கள நிலவரம் அதற்கு ஒத்துளைக்கவில்லை.

ஆயுத ஒப்படைப்பு சம்பந்தமான எந்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக தமது தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று புலிகள் தரப்பு ஊறுதியாகவே தெரிவித்துவிட்டது.

அத்தோடு, யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப்படைகள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு பல நெருக்குதல்கள் அங்கு அவர்களுக்கு ஏற்பட ஆரம்பித்தன.

பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியப்படைகள் வெளிக்கிளம்பும் போது, வீதிகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டு வந்து, பிரபாகரன் எங்கே? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள்.

வீதிகளின் நடுவில் நூற்றுக்கணக்கில் மக்கள் அமர்ந்து இந்திப்படைகளின் நகர்வுகளை தடுக்க ஆரம்பித்தார்கள்.

இது போன்ற நடவடிக்கைகள், இந்திய அரசிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. இந்தியப்படைகளின் வருகையை சிங்கள மக்கள் பெருமளவில் எதிர்க்க ஆரம்பித்திருந்த நிலையில், தமிழ் மக்களிடம் இருந்தும் தமக்கு எதிர்ப்புக்கள் உள்ளன என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்தியா அப்பொழுது விரும்பவில்லை.

தமிழ் மக்களின் வீதி மறியல் போராட்டத்தால், இந்தியப்படைகளின் சமாதான முயற்சிகள் பற்றிய சந்தேகம் சர்வதேச மட்டத்தில் தோற்றுவிக்கப்படக் கூடியதான ஒரு அபாயத்தை இந்தியா எதிர்கொண்டது.

ஈழத் தமிழர்களை மீட்க இந்தியா தனது படைகளை அனுப்பியதாகவே தமிழ் நாட்டு மக்களுக்கு கூறப்பட்டிருந்த நிலையில், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படைகளுக்கு அங்கு காண்பிக்க ஆரம்பித்திருந்த எதிர்ப்புக்கள் தமிழ் நாட்டில் ஒரு புதிய சிக்லைத் தோற்றுவித்து விடும் என்றும் ராஜீவ் காந்திக்கு அச்சம் ஏற்பட்டிருந்தது..

அத்தோடு, இலங்கை சென்றிருந்த இந்தியப் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்ற மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், உடனடியான பிரபாகரனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று, தென்னிந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் இடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரபாகரன் இங்கு இல்லாமல் இந்தியப்படைகளால் எந்த ஒரு விடயத்தையும் சீரானமுறையில் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. புலிகள் ஒழுங்கான முறையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனடியாக பிரபாகரனை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் அவர் தெளிவுபட அறிவித்திருந்தார்.

பிரபாகரன் வருகை


02.07.1987ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் பலாலி விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள், புலிகளின் முன்னைநாள் யாழ்.மாவட்ட தளபதி கிட்டு போன்றோரும் வந்திறங்கியிருந்தார்கள்.

(இந்த விமாணத்தில், பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வந்ததாக, இந்திய இரணுவப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது இந்தக் கூற்றை உறுதிப்படுத்தக்கூடிய மேலதிக தரவுகள் எதுவும் என்னிடம் இல்லை.)

பலாலி வந்திறங்கிய பிரபாகரனும் குழுவினரும் பலத்த பாதுகாப்புடன் இந்தியப்படைகளின் கவச வாகனங்களின் மூலம் (APC- Armoured Personal Carriers)  யாழ்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதி ஒரே தோற்றத்தில் அமைந்த பல கவச வாகனங்கள் இந்தியப் படையினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் ஒன்றிலேயே பிரபாகரன் அவர்கள் பயணம் செய்த போதிலும், அவர் எந்த வாகனத்தில் பயணிக்கின்றார் என்பது வெளியில் எவருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, அனைத்து கவச வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணம் செய்தன. இந்த வாகனத் தொடரணிக்கு ஆயுதம் தாங்கிய புலிகளும், இந்தியப் படையினரும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இதேவேளை, தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பை முன்னிட்டு, அவரது வாகனம் பயணம் செய்த பிரதேசங்களில் புலிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். வீதிகளில் எவரும் நடமாட புலிகள் அணுமதிக்கவில்லை. வீதிகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

சுதுமலை அம்மன் கோவிலில் வைத்து புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் பிரபாகனை கையளித்த இந்தியப் படையினர், பிரபாகரனை தாம் பாதுகாப்பாக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு படிவத்தில் கையொப்பமும் பெற்றுக் கொண்டார்கள்.

இதே சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் வைத்துத்தான் 24.07.1987ம் திகதி இந்திய விமானம் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத இருக்கும் ஒரு சரித்திர நாயகன் என்கின்ற எண்ணமோ, கர்வமோ சிறிதும் இல்லாமல், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி இருந்தார்.

– நிராஜ் டேவிட்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்