ஜோன் கெரியின் கையில் சிக்குமா சிறிலங்கா?
7 தை 2013 திங்கள் 18:14 | பார்வைகள் : 9778
சிறிலங்கா பற்றிய கொள்கையை கையில் எடுத்துக் கொள்ள கெரி அனுமதிக்கப்படுவாரேயானால், மனிதஉரிமைகளை விடவும், இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளிலேயே அவரது முக்கிய கவனம் இருக்கும்.
இவ்வாறு international policy digest ஊடகத்தில், Gibson Bateman எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் தொகுப்பு இது.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அணியை மீளமைப்பதில் இன்னமும் ஈடுபட்டு வருகிறார், ஆனால், அடுத்த இராஜாங்கச் செயலராக ஜோன் கெரியே நியமிக்கப்படவுள்ளார்.
பத்தாண்டுகளாக வெளிநாட்டுக் கொள்கையில் கெரி, முக்கியமானதொரு குரலாக ஒலித்து வருகிறார்.
27 ஆண்டுகளாக செனட்டின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக உள்ள இவர், வெளிநாடுகளில் பரந்தளவிலான வலையமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி வைத்துள்ளார்.
மத்திய கிழக்கு அரசியலை இவர் நன்றாகப் புரிந்து கொண்டவர். அத்துடன் ஏற்கனவே, ஒபாமா நிர்வாகத்தின் சார்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.
இராஜாங்கச் செயலர் பதவிக்கான போட்டியில் இருந்து சுசன் ரைஸ் புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். நிச்சயமாக அவர் இராஜாங்கச்செயலரின் மூளையாக இருப்பார்.
உண்மையிலேயே சுசன் ரைசின் பிரச்சினை என்னவென்றால், அவர் ஒரு இராஜதந்திரி அல்ல.
இருதரப்பு செனட்டர்களும் ஜோன் கெரியை விரும்புவார்கள். மதிப்பார்கள்.
ஒபாமா இதற்காக அதிகம் அரசியல் மூலதனத்தை செலவிட வேண்டியிருக்காது. கெரியின் நியமனம் சுலபமாகவே உறுதிப்படுத்தப்படும்.
ஆனால், தெற்காசியா தொடர்பான ஜோன் கெரியின் வெளிவிவகாரக் கொள்கை எவ்வாறு இருக்கும்? அமெரிக்க- சிறிலங்கா உறவுகளின் அர்த்தம் என்ன?
ஊடகவியலாளர்களும், செய்தியாளர்களும் அண்மையில் இந்த இரண்டு கேள்விகளையுமே எழுப்புகின்றனர். கெட்டவாய்ப்பாக, பலரும் ஒரு மையப்புள்ளியை தவற விட்டுவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
வெளிவிவகாரக் கொள்கை என்று வரும் போது, பராக் ஒபாமா தன்னைச் சுற்றி அதிகாரத்தை வைத்திருப்பவர். இவரது வெளிவிவகாரக் கொள்கைத் திட்டமிடல் நிக்சனின் பாணியிலான- அதிகாரங்களை மையப்படுத்தும் வகையிலானது.
வெள்ளை மாளிகையில் உள்ள சிறிய உள்ளக குழுவினால், ஒபாமாவின் உள்வட்டத்தில் உள்ளவர்களால் தான் முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஹிலாரி கிளின்ரன் ஒரு சிறந்த இராஜாங்கச் செயலராக விளங்கினார். தனது கடமைகளை கருணையோடும் கண்ணியத்தோடும் ஆற்றினார்.
ஆனால், அவர் அடிப்படையில் ஒரு கொள்கை நடைமுறைப்படுத்துனராகவே பணியாற்றினாரேயன்றி, ஒரு மூலோபாய வகுப்பாளராக இருக்கவில்லை.
சுசன் ரைஸ், சமந்தா பவர் போன்று, லிபியாவில் அமெரிக்கத் தலையீட்டை ஹிலாரி வெளிப்படையாக ஆதரித்து வந்தவர் என்பது உண்மை தான்.
2008ல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தெரிவின் போது தன்னுடன் போட்டியிடாத ஜோன் கெரியை ஒபாமா நம்புகிறார்.
மிகமுக்கியமான வெளிவிவகாரக் கொள்கை விவகாரங்களை ஒபாமா தனது இறுக்கமான பிடியில் வைத்திருப்பார் என்ற போதிலும், இராஜாங்கச் செயலர் கெரியிடம் சில விவகாரங்களை கொடுப்பதற்கு சாத்தியம் உள்ளது.
சிறிலங்கா பற்றிய கொள்கையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒபாமா தன்வசம் வைத்துக் கொள்வாரா அல்லது ஜோன் கெரி மற்றும் தனது பணியாளர்களிடமோ ஒப்படைக்க விரும்புவாரா என்பதை இந்தக் கட்டத்தில் தெரிந்து கொள்வது கடினம்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் மிகுந்த கரிசனைக்குரிய விவகாரமாக சிறிலங்கா இல்லை. ஆனால், வொசிங்டனுடனான இராஜதந்திர உறவுகள் முக்கியத்துவமற்றது என்று அர்த்தமில்லை. அவர்களின் உறவு முக்கியம்.
ஆனால், அந்த உறவு எவ்வாறு முக்கியமானது என்று ஒபாமா கருதுவார் என்பது தற்போது தெளிவாக இல்லை.
வொசிங்டனின் வெளிவிவகாரக் கொள்கை அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர் ஜோன் கெரி.
சிறிலங்கா பற்றிய கொள்கையை கையில் எடுத்துக் கொள்ள கெரி அனுமதிக்கப்படுவாரேயானால், மனிதஉரிமைகளை விடவும், இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளிலேயே அவரது முக்கிய கவனம் இருக்கும்.
அதற்காக அவர், மனிதஉரிமைகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்று கூறவில்லை, ஆனால் அது பெரும்பாலும் நிச்சயமில்லை.
அவர் பெரும்பாலும் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை கண்டுகொள்ளமாட்டார். போர் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை கெரி நன்றாகவே அறிவார்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஏன் ஆதரவளித்தது என்பதை அவர் முழுமையாக புரிந்து கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வொசிங்டன் வரவுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் என்ன நடக்கப் போகிறதோ என்ற வதந்திகள் ஏற்கனவே கிளம்பிவிட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தின் போது, அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெளிவான அளவீட்டைச் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புக் கிடைக்கும்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் ஜோன் கெரியின் தலைமைத்துவத்தில் அமெரிக்க - சிறிலங்கா உறவுகள் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது சுவாரசியமான விடயமாகவே இருக்கும்.
- கார்வண்ணன்