சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்?
26 மார்கழி 2012 புதன் 19:04 | பார்வைகள் : 9432
சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர்.
இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் சீன-சிறிலங்கா உறவுநிலையிலேயே தங்கியுள்ளது. இந்த உறவுநிலையானது நீண்ட காலமாக தொடரும் சீன-இந்திய விரிசலை கருத்திற் கொள்ளும் போது இது இந்தியாவிற்கு எவ்வித நலனையும் அளிக்காது.
சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. சிறிலங்கா வாழ் தமிழர்களின் உரிமை தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர்.
இந்நிலையில் சீனா இராணுவ வளங்களைப் பயன்படுத்தி சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் கட்டப்படும் புதிய துறைமுகம் உள்ளடங்கலாக சீனாவுடனான சிறிலங்காவின் ஆழமான உறவினை இந்தியா எதிர்த்து நிற்பதில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் இயங்குவியல்கள் துணைநிற்கின்றன. இதன் மூலம் இந்திய மாக்கடலில் சிறிலங்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் சமநிலையில் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
சிறிலங்காவிலிருந்து மிக ஒடுங்கிய பாக்குநீரிணையால் பிரிக்கப்படும் இந்தியாவின் தென்கிழக்கில் தமிழ்நாடு அமைந்துள்ளது. இது மிகப் பெரிய மாநிலமாக காணப்படுவதுடன், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகவும் காணப்படுகிறது. 2011ல் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளின்ரன் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாடு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை உறுதிப்படுத்த முடியும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் தமிழ் இந்துக்களாவர்.
இந்திய மாக்கடலின் வடக்கே அமைந்துள்ள சிறிலங்கா கேந்திரம் முக்கியத்துவம் மிக்க, சுறுசுறுப்பான கப்பல் போக்குவரத்து மார்க்கங்களை கொண்டுள்ளது. இது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் வர்த்தகத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. மத்திய கிழக்கிலிருந்து சீனாவால் இறக்குமதி செய்யப்படும் 80 சதவீதமான ஹைட்ரோகாபன்கள் சிறிலங்காவின் 50 கடல்மைல் தூரத்திற்குள் கப்பல்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தென்னாசியப் பிராந்தியத்திற்கான ஒத்துழைப்புச் சங்கமான சார்க் நாடுகளுடன் சீனாவின் வர்த்தக செயற்பாடுகள் 1995ல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. ஆனால் 2008ல் இத்தொகை 65 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தது. இதேபோன்று ஆபிரிக்காவுடனான சீனாவின் வர்த்தக செயற்பாடு 2011ல் 160 பில்லியன் டொலர்களாகும். ஆனால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் 60 சதவீதமாக இது காணப்படுகிறது.
இவ்வாறு சீனாவால் மேற்கொள்ளப்படும் வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் சிறிலங்காவின் தென் கரையோரத்தின் ஊடாகவே நடைபெறுகிறது. தற்போது சீனாவானது சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகும். 2007ல் சீனா சிறிலங்காவுக்கு17.7 சதவீத நிதியுதவிகளையும் கடன் உதவிகளையும் வழங்கியது. ஆனால் 2009ல் இது 44.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைவிட சிறிலங்காவின் அபிவிருத்தி திட்டங்கள், பராமரிப்பு மற்றும் ஏனைய திட்டங்களுக்காக 3 பில்லியன் டொலர்களை வழங்குவதாக சீனா வாக்குறுதி அளித்துள்ளது.
இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்காக தற்போது இந்தியா பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் Airborne எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு முறைமை, இந்தியாவின் வடபிராந்தியத்தில் 3500கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய அக்னி – 03 ஏவுகணைகள் போன்றவை இவற்றுள் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காக இந்தியாவால் எடுக்கப்பட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். மேலும், சிறிலங்காவின் வடக்கே உள்ள வங்காள விரிகுடாவில் விமானத் தளம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமிடலில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் சீனா 'முத்துமாலை' என்கின்ற மூலோபாயத்தின் மூலம் இந்திய மாக்கடலில் தன்னைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக பாகிஸ்தானின் குவாடரிலும், பங்களாதேசின் சிற்றகொங்கிலும், சிறிலங்காவின் அம்பாந்தோட்டையிலும் புதிய துறைமுகங்களை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் தென் வாயிலில் சீனாவானது தனது நங்கூரத்தை விரைவில் கட்டும் என்பதையே சிறிலங்காவில் சீனா தற்போது மேற்கொள்ளும் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுவதாக இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள அம்பாந்தோட்டையில் சீன நிதியுதவியுடன் புதிய துறைமுகம் கட்டப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று சரக்கு ஏற்றியிறக்குமிடங்கள் ஒவ்வொன்றும் கால் மைல் நீளமானவை. இங்கு கப்பல்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளை சீனா செய்துவருகிறது.
இதுஒருபுறமிருக்க, இந்தியாவின் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன இரு முக்கிய கட்சிகளாகக் காணப்படுகின்றன. இவ்விரு கட்சிகளும் தமிழ்நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியா மற்றும் சிறிலங்காவில் தமிழ்த் தேசியவாத உரிமையை நிலைநிறுத்துவதற்காக ஆதரவளிக்க வேண்டிய கடப்பாட்டை இவ்விரு கட்சிகளும் கொண்டுள்ளன. ஏனெனில் இவை இவ்வாறு ஆதரவளிக்கத் தவறினால் தேர்தலில் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகும்.
இந்திய மத்திய அரசாங்கத்தை ஆளும் ஐக்கிய கூட்டணி கட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய கூட்டணியாக காணப்படுகிறது. இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் காணப்படும் 500 ஆசனங்களில் 262 ஆசனங்களை ஆளும் கூட்டணி கொண்டுள்ளது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 18 ஆசனங்களைக் கொண்டுள்ளது. தி.மு.க உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியுடன் இணைவதும் அதிலிருந்து பிரிவதும் என பல்வேறு வரலாறுகளைக் கொண்டுள்ளனர். தி.மு.க கூட்டணியிலிருந்து விலகினால் ஆளும் இந்திய அரசாங்க கட்சியானது 251 ஆசனங்களை மட்டுமே கொண்டிருக்கும். இதனால் முன்னர் ஏற்பட்டது போன்று இது தொடர்ந்தும் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்காது.
"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் ஆதரவில்லாது இந்திய மத்திய அரசாங்கம் உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வது மிகக் கடினமானது" என ஹவாட் பல்கலைக்கழக பேராசிரியர் சுகற்ற பொஸ் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றீடானது தமிழ்நாட்டு அரசியல் அழுத்தங்களால் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த விடயத்தில் சிறிலங்காத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அத்துடன் சிறிலங்காவுடனான சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவுநிலையை எதிர்கொள்வதற்கும் இந்தியா சிறிலங்காத் தமிழர்கள் விடயத்தில் ஆதரவளிக்க வேண்டிய கட்டாய நிலையிலுள்ளது" என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் கொள்கை மாற்றீடுகளுக்கான மையத்தை சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
சீனா-சிறிலங்கா உறவை இந்தியா கட்டுப்படுத்த வேண்டுமாயின் முதலில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வலைகள் என்பது இந்தியத் தேர்தல்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள காரணியாகும். இந்நிலையில் தொடர்ந்தும் சீனாவானது அம்பாந்தோட்டையில் கால்பதித்து தனது செல்வாக்கை பிரயோகிப்பதன் மூலம் இந்திய மாக்கடலில் சீனாவின் தலையீடு அதிகரித்துக் காணப்படும்.
இது மட்டுமல்லாது இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் அதிகாரத்தை தற்போது இந்தியா தக்கவைத்துள்ள போதிலும் சிறிலங்காவுடனான சீனாவின் ஆழமான உறவின் மூலம் இதனை சீனா தனது கையில் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க முடியாது. இந்தியாவானது சிறிலங்காவுடன் கலாசார, உதவி, பொருளாதார ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலம் இந்நாடுகளின் உறவுநிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியற் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் கவனத்திற் கொண்டு செயற்படவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் முக்கியத்துவப்படுத்தப்படாவிட்டால், கிட்டிய எதிர்காலத்தில் சீனப் போர்க்கப்பல்கள் தென்சிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான அல்லது சிறிலங்காவின் கடலில் நடமாடுவதற்கான வாய்ப்பு காணப்படுவது தவிர்க்க முடியாததாகும்.
- நித்தியபாரதி