இந்தியாவை சீண்டிப் பார்க்கும் அண்டை நாடுகள்!
16 மார்கழி 2012 ஞாயிறு 20:37 | பார்வைகள் : 10271
தெற்காசியாவில் தமக்கெதிரான நகர்வுகளை சீனா இரகசியமாக மேற்கொண்டு வருவதாக நம்பும் இந்தியாவுக்கு அண்மையில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
முதலாவது மாலேயில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப்பணிகளை மேற்கொண்டுவந்த இந்தியாவின் ஜி.எம்.ஆர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மாலைதீவு அரசாங்கம் இரத்துச் செய்த விவகாரம்.
இரண்டாவது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சுங்கவரியை இலங்கை அரசாங்கம் கடுமையாக அதிகரித்தது.
இந்த இரண்டு விவகாரங்களுக்கும் பின்னால் சீனாவே இருப்பதாக இந்தியா வலுவாக நம்புகிறது. அதற்கு காரணங்களும் உள்ளன.
தெற்காசியாவில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்றான மாலே சர்வதேச விமானநிலையம் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே முற்றிலுமாக இருந்து வந்தது.
2010ல் தனியார் மயமாக்கப்பட்ட இந்த விமானநிலையத்தின் விமான கட்டப்பாட்டப்பிரிவு விமான நிலைய சேவைகள் மற்றும் ஓடுபாதை அபிவிருத்தி என்று எல்லாவற்றுக்குமே ஜி.எம்.ஆர் நிறுவனமே பொறுப்பாக இருந்தது.
500 மில்லியன் டொலரை இந்த நிறுவனம் மாலைதீவு விமானநிலைய உடன்பாட்டில் முதலீடு செய்திருந்தது.
முன்னாள ஜனாதிபதி நஸீக்கின் ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த விமான நிலைய உடன்பாட்டில் மோசடிகள் இருப்பதாகக் கூறி மாலைதீவு அமைச்சரவையின் ஒப்புதலுடன் புதிய அரசாங்கம் திடீரென்று ரத்துச் செய்தபோது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி.
500 மில்லியன் முதலீடு பறிபோகிறதே என்பது மட்டும் இந்தியாவினது கவலையில்லை.
பிராந்திய வல்லரசான இந்தியாவைப் பற்றியோ அதன் முடிவைப் பற்றியோ கவலைப்படாமல் சின்னஞ்சிறிய மாலைதீவு அரசாங்கம் ஒரேயடியாக உடன்பாட்டை இரத்துச் செய்ததுதான் இந்தியாவின் கவலைக்கு முக்கிய காரணம்.
இந்த உடன்பாடு ரத்துச் செய்யப்பட்டது இந்தியாவைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியான தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை.
அரசியல் இராஜதந்திர பாதுகாப்பு ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவுக்கு மிக அண்மையில் உள்ள மாலைதீவு இதுவரையில் இந்தியாவின் அரவணைப்பில் தான் இருந்து வந்தது.
ஆபத்து என்றதும் ஓடிப்போய் உதவுவதும் இந்தியா தான்.
1988ம் ஆண்டு புளொட் இயக்க உறுப்பினர்கள் கப்பலொன்றில் சென்று மாலைதீவைக் கைப்பற்றியபோது உடனடியாக தனது படைகளை அனுப்பி மீட்டது இந்தியா தான்.
இப்படி எல்லாமுமாகவே இருந்த இந்தியாவை மாலைதீவு ஒரேயடியாக தாக்கி எறிந்த விவகாரம் கடும் அரசியல் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. மாலைதீவின் முடிவு இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
இந்த நெருக்கடி ஏற்பட பின்னாலிருந்து கிள்ளிவிடும் காரியத்தை மேற்கொள்வது சீனாவே என்று பலமாக நம்புகிறது இந்தியா. அண்மையில் மாலைதீவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத் தொடங்கியது சீனா. அங்கு ஒரு தூதரகத்தை திறந்த போதும் துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணிகளை முன்னெடுத்த போதும் அதை இந்தியா அவ்வளவாகக் கணகெடுக்கவில்லை.
காரணம் மாலே சர்வதேச விமானநிலையம் தான். இந்திய நிறுவனத்தின் கையிலிருக்கிறதே என்ற அசட்டை தான்.
இப்போது அந்த விமானநிலையத்தில் இருந்து இந்திய நிறுவனம் துரத்தப்பட்டதை இந்தியாவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அது தனதும் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடுமோ என்று கலங்குகிறது.
மாலைதீவை சினந்து கொண்டாலும் இந்தியா கடுப்புடன் பார்ப்பது சீனாவைத் தான்.
மாலைதீவு அரசுக்கு இந்த துணிச்சலைக் கொடுத்தது சீனாதான். என்று இந்தியா வலுவாக நம்புகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா மீள்வதற்கிடையில் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தது இலங்கை.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மோட்டார் வாகனங்களுக்கான வரியை கடுமையாக அதிகரித்தது இலங்கை அரசாங்கம்.
கார்கள் மீதான சுங்கவரி 73 சதவீதமும் முச்சக்கர வாகனங்கள் மீதான வரி 45 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.
வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதான வரியும் பல் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
காரணம் இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 13 சதவீதம் இலங்கைக்கே ஏற்றுமதியாகிறது.
கடந்த ஆண்டில் சுமார் 6 பில்லியன் டொலருக்கு மோட்டார் வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது இந்தியா.
இதில் 800 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இலங்கைக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே சீனாவின் முதலீடு உதவிகளுக்கு இணையாக இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கி வந்தது.
இருந்தபோதிலும் அண்டை நாடான இலங்கை இப்படியொரு நடவடிக்கையை மேற்கொள்ளுமென்று இந்தியா எதிர்பார்க்கவே இல்லை.
இந்திய வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
இதனால் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி முற்றாகவே படுத்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவோடு இலங்கை செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டில் வாகனங்கள் சோ்க்கப்படவில்லை.
ஆனால் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடனான உடன்பாட்டில் வாகனங்ள் சோ்க்கப்பட்டுள்ளதால் அவற்றிற்கு இந்த வரி உயர்வு இல்லை.
இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இரண்டு வாகன உதிரிப்பாகங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலைகளை சீனா நிறுவப் போகிறது.
இது சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கிறது இந்தியா.
சீனா கட்டியுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுக சுற்றாடலில் வாகன உதிரிப்பாகங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலைகளை அமைக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது சீனாவைத் தவிர வேறு நாடுகள் அமைக்க முன்வரவில்லை.
இந்தப் பின்னணியில் தான் இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது இலங்கை.
இலங்கை அரசின் இந்த முடிவு இந்திய அரசை எந்தளவுக்கு இறங்கிவரச் செய்கிறதோ இல்லையோ பல இந்திய நிறுவனங்களை வழிக்கு கொண்டுவரச் செய்துள்ளது.
உடனடியாக மாருதி சுசூகி நிறுவனம் இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுபோன்ற முடிவை டாடா, ரிவிஎஸ், அசோக் லேலண்ட, பஜாஜ், மகேந்திரா உள்ளிட்ட மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் விரைவிலேயே எடுக்கலாம்.
அது இலங்கையை ஒரு கைத்தொழில் அபிவிருத்தி நாடாக காண்பிப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவியாக அமையும்.
பிராந்திய வல்லரசான இந்தியாவின் மக்கிய நிறுவனங்களை கடந்த வாரம் மிரள வைத்துவிட்டது இலங்கை அரசாங்கம்.
அதேவேளை இதை இந்திய அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனை ஒரு பொருளாதார ரீதியான நடவடிக்கையாக இந்தியா கருதியதாக தெரியவில்லை.
அதற்குமப்பால் சீனாவின் தூண்டுதல் இருந்திருக்கலாம் என்று இந்தியா கருதுவதால் தான் அதுபற்றிய விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான ஒரு நெருடல் நிலைவரும் சூழலில் இந்தியாவின் கருத்துகளை இலங்கை புறக்கணித்து வரும் நிலையில் இந்திய நலனுக்கு விரோதமான ஒரு நகர்வை வெளிப்படையாக அது மேற்கொண்டது.
மிகச்சிறிய அண்டை நாடுகளான மாலைதீவும் இலங்கையும் சீனாவின் நிழலில் இருந்துகொண்டு தன்னைச் சீண்டிப் பர்ப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.
இந்தியாவின் பதில் நகர்வு அல்லது அடுத்த நகர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது இப்போது சர்வதேச மட்டத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
ஏற்கனவே சீபா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இலங்கையை வலியுறுத்தி வரும் இந்தியா வரும் நாட்கள் அதற்கான அழுத்தங்களை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
- ஹரிகரன்