தனது மோசமான தவறுகளில் இருந்து ஐ.நாவால் பாடம் கற்க முடியுமா?
7 மார்கழி 2012 வெள்ளி 14:09 | பார்வைகள் : 9427
பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க்குற்றவாளிகளின் பெருங் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என Alex Longley எழுதியுள்ள Can the UN Learn From Its Own Grave Failures? கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்ளக அறிக்கை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில்,வெளியிடப்பட்டது. போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான தனிநாடொன்றை அமைப்பதை நோக்காகக் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் புலிகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 25 ஆண்டுகால யுத்தத்தில் 100,000 வரையான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இறுதிக் கட்ட யுத்தத்தில் 50,000 இற்கும்மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பல்வேறு கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் மனிதஉரிமை அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மனித கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டமை ஆகிய இரு மனிதகுலத்துக்கு எதிரான முதன்மையான குற்றங்களாக காணப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டும் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான மிகக் கொடுமையான துன்பியல் சம்பவங்களை நிறுத்த தவறிவிட்ட அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகள் போர்ச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான மீறல்களை அனைத்துலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில் சனல் 04 தொலைக்காட்சி ‘சிறிலங்காவின் கொலைக் களங்கள்’ எனும் தலைப்பில் கானொளி ஆவணம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. இதில் ‘பாதுகாப்பு வலயங்களில்’ தஞ்சம் புகுந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் யுத்த வலயத்தில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா பாதுகாக்கத் தவறியமையானது மிகப் பெரிய குற்றச்சாட்டாக அனைத்துலக
மனிதஉரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், இதற்கான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சாசனங்களை ஏற்றுக் கொண்ட நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தாலும், புலிகளாலும் இழைக்கப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலமே உண்மையான குற்றவாளிகளை இனங்காண முடியும். இந்த விடயத்துக்கு, ஐ.நா அறிக்கையில் மிகக் குறைந்தளவு முக்கியத்துவமே அளிக்கப்பட்டுள்ளது.
தான் விட்ட தவறுகளைக் கற்றுக் கொண்டு, தனது நடவடிக்கைகளை முன்னேற்றி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை வலுப்படுத்துவதற்கான குறியீடாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையானது இதற்குப் பதிலாககுற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவிப்பதற்கான உடனடி செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்றது போன்று மிக மோசமான நிலைமையை சீர்செய்வதென்பது சாத்தியப்படற்ற விடயமாக இருக்கும் எனவும், இது தொடர்பில் ஐ.நா சங்கடமான நிலையை எதிர்நோக்குவதாகவும் ஐ.நாவின் முன்னாள் மனிதாபிமான விவகாரச் செயலர் ஜோன் ஹோல்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா உள்ளக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் வழமைபோல் ஏற்க மறுத்துள்ளதானது முட்டாள்தனமான செயலாகும்.
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் உள்ளக ஆய்வறிக்கையானது எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்தளவான விடயங்களையே சுட்டிக்காட்டியுள்ளது.
மோதல் இடம்பெறும்இடங்களில் மோதல் தவிர்ப்பை மேற்கொண்டு பாதிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை, தனது அறிக்கையில், சிறிலங்காவில் மக்கள் கொல்லப்பட்டமை உள்ளடங்கலாக இடம்பெற்ற பல்வேறு மீறல் சம்பவங்களை முதன்மைப்படுத்தி பொறுப்பளிக்க வேண்டிய தனது கடப்பாட்டிலிருந்து தவறியுள்ளது என்பதை இந்த அறிக்கையின் மூலம் அறியலாம்.
மோதலில் சிக்குண்ட மக்களை ஐக்கிய நாடுகள் சபை காப்பாற்றத் தவறியதோடு மட்டுமல்லாது, சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் திட்டமிட்ட ரீதியில் எவ்வாறான தவறுகளை இழைத்துள்ளது என்பதையும் இந்த அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது தவிர்ப்பதற்கு, தற்போது உலகின் பல பகுதிகளிலும் வெளித்தெரியாது இடம்பெறும் மோதல்களை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த மோதல்களில் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை மிகப் பயனுள்ள வகையில் வெளிப்படுத்தி அவற்றை முதன்மைப்படுத்தி, எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஐ.நா ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
தற்போது சிரியாவிலும், கொங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளில் தொடரப்படும் மோதல்களை தடுப்பதற்கு, கடந்த காலத்தில் ஐ.நா தான் தவறிழைத்த மோதல்கள் தொடர்பில் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான முறைமை ஒன்றை வரையறுக்க வேண்டும். ஐ.நா நடைமுறை சார்ந்த மற்றும் தனது மூலோபாய மட்டத்தில் எவ்வாறான குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொள்வது மிகமுக்கியமானதாகும். இது இந்த நிறுவனத்தின் கொள்திறனை மேம்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும்.
ஐக்கிய நாடுகள் சபையானது தனது கடப்பாட்டை மேற்கொள்ளத் தவறிய குறிப்பிடத்தக்க சில மோதல்களில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரும் ஒன்றாகும். இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தன்னிச்சையாக செயற்படுவதை தடுப்பதில் இதன் அதிகாரம் மிக்க உறுப்புநாடுகள் அதிக செல்வாக்கைச் செலுத்துகின்றன.
இராணுவம் இல்லாமல் ஐ.நா இவ்வாறான அட்டூழியங்களை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்காது. இதேபோன்று, பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க் குற்றவாளிகளின் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
ஒருபுறம் பொதுமக்களைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டை ஐ.நா தனது ஆணையாகக் கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும்.
இருந்தும் ஐ.நா, மக்கள் இழப்புக்களைத் தடுப்பதில் தன்னால் முடியுமானளவு செயற்படுவதுடன், பெருமளவான இழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அதன் நடைமுறையிலுள்ள முறைமையின் கீழ் நான்கு மாதங்களில் கொல்லப்பட்ட 40,000 மக்களின் உயிர்களைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை என்பதே ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
- நித்தியபாரதி