Paristamil Navigation Paristamil advert login

குஜராத் தேர்தலில் வன்னிப் போரின் ஒளிப்படம்! மூக்குடைபட்ட இந்திய காங்கிரஸ் கட்சி

குஜராத் தேர்தலில் வன்னிப் போரின் ஒளிப்படம்! மூக்குடைபட்ட இந்திய காங்கிரஸ் கட்சி

2 மார்கழி 2012 ஞாயிறு 07:16 | பார்வைகள் : 10364


போர்க்களங்களில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் காலத்தால் அழிக்கப்படாத இடத்தைப் பெறுகின்றன. வியட்நாம் போரின் கோரத்தின் சாட்சியாக இன்றும் இருப்பது, நேபாம் குண்டு வீச்சுக்குப் பயந்து நிர்வாணமாக ஓடும் ஒன்பது வயதுச் சிறுமியின் ஒளிப்படம்.

வியட்நாம் போர் என்றவுடன் எவருக்கும் நினைவுக்கு வருவது அந்தப் படம் தான்.

அதுபோல வியட்நாமிய ஜெனரல் நுகுயென் கொக் லோன், கைதி ஒருவரைச் சுடும் ஒளிப்படமும் பிரபலமானது.

போரின் கொடுமைகளை வெளிப்படுத்திய இதுபோன்ற ஒளிப்படங்கள் இலங்கையிலும் பரபரப்பை ஏற்படுத்தியதுண்டு.

இலங்கையில் போரின்போது சுதந்திரமாக ஒளிப்படம் எடுப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லாத போதிலும், விடுதலைப்புலிகள் மற்றும் படையினர் தரப்பில் எடுக்கப்பட்ட பல  ஒளிப்படங்கள் கொடுமையான போரை என்றும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரால் எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்கள் இப்போதும் போர்க்குற்றச் சாட்சியங்களாக உலகில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒளிப்படங்கள் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது,

அதிலும் சனல் 4 வெளியிட்ட ஒளிப்படங்களும், வீடியோவும் சமீபகாலப் போர்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.

முள்ளிவாய்க்காலில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த வந்த போரின் அவலங்களை இன்னமும் ஒளிப்படங்கள் தான் பிரதிபலித்துக் கொண்டுள்ளன.

கூகுளில் முள்ளிவாய்க்கால் என்றோ, வன்னிப்போர் என்றோ ஸ்ரீலங்கா என்றோ படங்களைத் தேடுகின்ற ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அவலங்கள் நிறைந்த நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள் அந்தப் போரிள் அவலங்களுக்கு உலகின் முன் சாட்சியாக உள்ளன.

இத்தகைய ஒளிப்படத்தை எடுத்து தமது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்போய் இந்திய காங்கிரஸ் கட்சி தனது தலையிலேயே மண்ணை வாரிக் கொட்டிக்கொண்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் கட்சி படாதபாடு படுகிறது.

மூன்றாவது தடவையும் நரேந்திரமோடியே ஆட்சியமைப்பார் என்ற கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில், அடுத்த வாரம் தேர்தல் நடைபெறப்போகும் குஜராத்தில், காங்கிரஸ் கட்சி ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

பத்திரிகைள், தொலைக்காட்சி, இணையதளங்களில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அந்த விளம்பரத்தின் நோக்கம் மோடியின் ஆட்சியில் குஜராத்திலுள்ள 45 வீதமான குழந்தைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.

குஜராத்தில் எடுக்கப்பட்ட போசாக்கு குறைபாடு பற்றிய புள்ளிவிபரங்களுக்கு உயிரூட்ட ஒரு ஒளிப்படம் தேவைப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு.

ஆனால் குஜராத்தில் அப்படியொரு ஒளிப்படத்தை அவர்களால் எடுக்க முடியவில்லைப் போலும்.

இணையத்தில் தேடிப்பிடித்து ஒரு படத்தை எடுத்து போட்டிருக்கிறார்கள்.

அது இந்தளவுக்கு சர்ச்சையைக் கிளப்பும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்திருக்காது.

அந்த ஒளிப்படம் முள்ளிவாய்க்கால் பகுதியில் எடுக்கப்பட்டது.

கூடாரம் ஒன்றில் இயங்கிய மருத்துவ உதவி நிலையத்தில் போசாக்கு குறைபாடுள்ள மூன்று மாதக் குழந்தையை கையில் ஏந்தியபடி நிற்கும் தாயின் ஒளிப்படம் அது.

2009 மே 6ம் திகதி மாலை 4:23 மணியளவில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது.

அது ஒன்றும் போரின் காயங்களையோ, மரணங்களையோ, நீதிக்குப் புறம்பான கொலைகளையோ, குண்டுவீச்சுக்களின் கொடூரத்தையோ வெளிப்படுத்தும் படம் அல்ல.

இறுதிப் போரில் மக்களுக்கான உணவு மறுக்கப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் குழந்தைகள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சாட்சியே அது.

போசாக்கு குறைபாடுள்ள குழந்தை என்றவுடன் பட்டினியால் வயிறு பருத்து, கண் விழிகள் வெளியே தள்ளியபடி, அத்தனை எலும்புகளும் துருத்தியபடி, கைகளில் தட்டை ஏந்தியபடி நிற்கும் ஆபிரிக்கக் குழந்தைகள் தான் முதலில் நினைவுக்கு வருவதுண்டு.

அந்த பிம்பத்தை மாற்றிய இலங்கையிலும் அத்தகைய அவலநிலை உள்ளது என்பதை வெளிப்படுத்திய படம் இது.

இந்தப்படத்தை எடுத்து தமது தோ்தல் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப் போய், காங்கிரஸ் நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே அது குஜராத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் அல்ல என்பதை பலரும் புரிந்து கொண்டனர்.

காரணம், குஜராத் மக்களின் உடை மற்றும் கலாசார வழக்கங்களுடன் இந்த ஒளிப்படம் பொருந்திப் போகவில்லை.

இந்த விளம்பரத்தைப் பார்த்து குஜராத்தில் மோடியின் ஆட்சியில் இந்த நிலையா என்று வியந்து போய் அந்த ஒளிப்படத்தின் அடிக்குறிப்பைத் தேடியவர்களுக்கு கிடைத்தது அதிர்ச்சி.

அது இலங்கையில் எடுக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்ததும்  சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் சூடுபறக்கத் தொடங்கின.

காங்கிரஸை அடிப்பதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருந்த பாஜவுக்கு அது இன்னும் வாய்ப்பானது.

இலங்கைப் போரில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் இலாபம் தேட முனைகிறது என்று குற்றம் சாட்டியது. ஆரம்பத்தில் இந்த ஒளிப்படம் போரின்போது ஐநா ஒளிப்படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டது.

அத்துடன் இதனை கிறீஸ்தவ இணையத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் உண்மையில் இந்தப் படத்தை ஐநா படப்பிடிப்பாளர்கள் எவரும் எடுக்கவில்லை. இந்தப் படம் எடுக்கப்படுவதற்கு பல மாதங்கள் முன்னதாகவே அவர்கள் வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

சாள்ஸ் பெற்றி குழுவின் அறிக்கையில் இதற்காகத் தான் ஐநா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஒளிப்படத்தை மட்டுமன்றி இறுதிப்போரில் அவலங்களை பெருமளவில் ஒளிப்படங்களாக வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியவர் புலிகளின் குரல் பிரதம செய்தி ஆசிரியர்.

இறுதிப்போரின் பேரழிவுகளை காட்சிப் பதிவுகளாக்கிய அவர் போரின் பின் யார் கண்ணிலும் படவேயில்லை. கடைசியில் என்னவானார் என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் அவரதும் அவர் வெளிக்கொண்டு வந்ததுமான ஒளிப்படங்கள் இன்னமும் அந்தப் போரின் சாட்சியாக உயிருடன் உள்ளன.

விடுதலைப்புலிகள் ஒளிப்படப் பிரிவு போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் போரின் இறுதி நாட்களில் அந்தக் கட்டமைப்புக்கள் எல்லாம் சீர்குலைந்து போயின.

குஜராத் தோ்தலுக்குப் பயன்படுத்திய இந்த ஒளிப்படத்தை இப்போது விலக்கிக் கொண்டுள்ளது காங்கிரஸ்.

ஆனால் இப்படி நடக்கும் என்று தெரியாமலே காங்கிரஸ் கட்சி தனது தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளது.

வன்னிப்போரின்போது இப்படியான நிலையை தமிழ் மக்கள் எதிர்கொண்டார்கள் என்ற உண்மையை அப்போது தெரிந்து கொள்ளாத இந்தியர்களுக்கு இப்போது இந்த ஒளிப்படம் கொண்டு சென்றுள்ளது.

வன்னியில் போரை நிறுத்துவதற்கு இந்தியா எதுவும் செய்யவில்லை, அழிவுகளை தடுக்க முனையவில்லை, காங்கிரஸ் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்து வருகிறது.

ஐநா வின் மீதும் இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. ஐநா தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ள போதும் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த ஒளிப்படத்தின் மூலம் தெரிந்தோ தெரியாமலோ வன்னிப் போரின் அவலத்தை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சுபத்ரா

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்