Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை ஆதரிக்கும் இந்தியா..! எதிர்க்கும் அமெரிக்கா..!

இலங்கையை ஆதரிக்கும் இந்தியா..! எதிர்க்கும் அமெரிக்கா..!

21 கார்த்திகை 2012 புதன் 16:01 | பார்வைகள் : 10036


ஈழப் பிரச்னையில் இன்னமும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் ஆடுகிறது மத்திய காங்கிரஸ் அரசு. கடந்த வாரம் நடந்த ஐ.நா. சபையின் விசாரணையில், அது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது!

2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்​பட்டனர். அதற்குக் காரணமான ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்பது உலகத் தமிழர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.

இதற்கு பலநாட்டு அரசுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஒருசில நாடுகள் மட்டும் எதிர்க்கவும் செய்கின்றன. ஆனால், நம் மத்திய அரசு இரண்டுக்கும் மத்தியில் சிக்கித் திணறிக்கொண்டு இருக்கிறது.

ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக்கி விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், தொடர்ந்து இந்தியா மௌனம் சாதித்தே வருகிறது.

இந்தியா தனக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் ராஜபக்ச தெளிவாக இருக்கிறார். அதற்காகவே அடிக்கடி டெல்லிக்கு வந்து, தன்னுடைய நட்பை புதுப்பித்துக் கொள்கிறார். கடந்த செப்டம்பர் மாதக் கடைசியில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு புத்த மைய விழாவுக்கு அவர் வந்தது குறித்து, 'மிரண்டு ஓடிவரும் ராஜபக்ச’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். இப்போது அதற்கான பலனை ஜெனீவாவில் அடைந்து விட்டார் ராஜபக்ச.

அவசரமாக மூடப்பட்ட முகாம்கள்!

இலங்கை தொடர்பான விசாரணை நவம்பர் 1-ம் தேதி நடக்கும் என்று ஐ.நா. மன்றம் அறிவித்து இருந்​தது. அதற்கு முன்னதாக மன்றமும் மேற்குலக நாடு​​களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, ஈழத்தில் இருக்கும் அனைத்து முகாம்களையும் மூடிவிட வேண்​டும் என்று இலங்கை அரசு அவசரமாக முடிவு எடுத்தது. அப்போது, நல்லிணக்க ஆய்வுக் குழு​வின் பரிந்துரைகள் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்​சாட்டு அதிகம் எழுந்தன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக், 'நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். வடக்கில் அதிக அளவில் நிலைகொண்டுள்ள படையினரைக் குறைத்து, சிவில் நிர்​வாகத்தில் இராணுவத் தலையீடுகளை நீக்க வேண்டும். இவை எதையும் இலங்கை செய்யவில்லை.

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், போரில் நடந்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதையும் இலங்கை செய்யவில்லை. இதன் விளைவு ஐ.நா. கூட்டத் தொடரின்போது தெரியும்’ என்று எச்சரிக்கை செய்தார். இது ராஜபக்சவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ஐ.நா. கூடியது.

மௌனித்த மத்திய அரசு!

ஐ.நா. கூட்டத்துக்கு முன்னதாக மத்திய அரசு சில கருத்துக்களைச் சொல்லியது. அதே கருத்தை ஐ.நா. கூட்டத்திலும் இந்தியா சொன்னது.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தலையீடு மிகுந்த கவலை அளிக்கிறது. வடக்கில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது’ என்று நவம்பர் 1-ம் தேதி இந்தியா சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் 5-ம் தேதி வரை அந்தக் கருத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனாலும், 'கொலை செய்தவனே கொலையை விசாரிக்கலாம்’ என்பதை முன்னிறுத்தி, ஒரு திருத்தமும் கொடுத்தது.

அதேவேலையைத்தான் இப்போதும் இந்தியா செய்து இருக்கிறது என்று தமிழ் அமைப்புகள் விமர்சனம் செய்கின்றன. கண்டிப்பதுபோல் கண்டித்துவிட்டு, கருத்து முன்வைக்க வேண்டிய நவம்பர் 5-ம் தேதி எதையுமே பேசாமல் தப்பித்து விட்டது.

தமிழர்களை அரவணைத்த அமெரிக்கா!

அமெரிக்கா எவ்வித சமரசமும் இல்லாமல் இலங்கைக்குத் தன் பரிந்துரைகளை முன்வைத்தது. 'இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடப்பதில் இருக்கும் சுணக்கம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளில் இராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காணுதல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்கு முறையைத் தவிர்த்தல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது இலங்கையின் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றங்கள் சுமத்தி தீர்மானம் ஒன்றை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற காரியங்களில் இலங்கை அரசு ஈடுபடக் கூடாது’ என்று அமெரிக்கா சார்பில் பேசிய பிரதிநிதி திட்டவட்டமாகப் பேசினார்.

ஆனால், இந்திய அரசு சார்பில் பேசியவர், 'நீதித்துறை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை’ என்று இலங்கையின் நிலையை ஆதரித்தது, குறிப்பிடத்தக்கது.

வாட்டிய ஆம்னெஸ்டி!


இலங்கை தொடர்பான கருத்தை ஐ.நா-வில் வெளியிட்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த யோலாண்டா போஸ்டர்,

மனித உரிமை தொடர்பாக இலங்கை அரசு பல ஆண்டுகளாகப் பொய் வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அங்கு மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக மிரட்டலும் எதிர்மறையான பிரச்சினைகளும் தொடர்கிறது.

பலர் திடீர் திடீரெனக் காணாமல் போகின்றனர். படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. மொத்தத்தில் அங்கு அமைதியும் பாதுகாப்பும் அற்றசூழலே நிலவுகிறது'' என்று தெளிவான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார்.

210-ல் 100 மட்டுமே!

இலங்கை தொடர்பாக உலக நாடுகள் 210 பரிந்துரைகளை முன்வைத்தன. அதில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. 'போர் சம்பந்தமாக இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தி, 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இலங்கை அரசான நாங்கள் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின் பரிந்துரைகளைத்தான் எங்களால் ஏற்க முடியும். எல்லா நடவடிக்கைகளும் எங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகத்தான் இருக்க வேண்டும். மற்றபடி உலக நாடுகளின் கண்காணிப்பின் கீழ் அல்லது ஐ.நா-வின் மேற்பார்வையின் கீழோ நாங்கள் செயல்பட முடியாது.

மனித உரிமை, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்களே நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்பதால், இந்தப் பரிந்துரைகளையும் ஏற்க முடியாது’ என்று கறாராகவே இலங்கை அரசு சொல்லியது.

ஜெனீவாவில் நடந்த மீளாய்வுக் கூட்டத் தொடரின் முடிவுக்குப் பின்னர் பேசிய மகிந்த சமரசிங்க, ''ஐ.நா. இதே போன்றுதான் 2008 மீளாய்வின்போதும் சாத்தியப்படாத சில பரிந்துரைகளை முன்வைத்தது. அப்போதும் நாங்கள் தைரியமாக அதனை நிராகரித்தோம்'' என்றார்.

இலங்கையின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பிற மேற்குலக நாடுகள் கடுமையாக விமர்சித்து உள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு கொடுக்கின்றன.

ஐ.நா. முடிவு எப்போது?

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மன்றம் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஐ.நா.வின் பரிந்துரைகளை நிராகரிப்பது, இலங்கையைக் கடுமையான நெருக்கடிக்குக் கொண்டுசெல்லும் என்றும் சொல்கிறார்கள்.

மார்ச் 2012-ல் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை அரசு என்னென்ன முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது மார்ச் 2013 கூட்டத்தொடரின் போது விவாதிக்கப்படும்.

இத்தகைய செய்திகளுக்கு உலகப் பத்திரிகைகள் பலவும் முக்கியத்துவம் கொடுப்பதுகூட ராஜபக்​சவினால் ஜீரணிக்க முடியவில்லை. 'புலிகள் ஆயுதங்களைவிட்டு ஊடகங்கள் வழியே இன்று போராடுகின்றனர்’ என்று 'அலரி’ மாளிகையில் இருந்து அலறி உள்ளார். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி எவ்வளவு காலம்தான் தாமதிக்குமோ?

- ஜூனியர் விகடன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்