Paristamil Navigation Paristamil advert login

புலிகளின் மர்மங்களை ஆட்லறிகள் மூலம் உறுத்திப்படுத்தியது நீலம் புயல்!

புலிகளின் மர்மங்களை ஆட்லறிகள் மூலம் உறுத்திப்படுத்தியது நீலம் புயல்!

4 கார்த்திகை 2012 ஞாயிறு 18:42 | பார்வைகள் : 9912


போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான நீலம் புயல் முல்லைத்தீவைத் தாக்கப் போவதாகப் பயமுறுத்திவிட்டு தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து போனது.

இந்தப் புயல் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் வெளியே கொண்டுவந்து விட்டது.

இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடற்கரை மணலில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த மூன்று ஆட்லறிகள் ஒரே நேரத்தில் படையினரின் கண்களில் அகப்பட்டன. இதற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பல ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.

வாகரையிலும் தொப்பிகலையிலும் புதுக்குடியிருப்பு மேற்கேயும் ஆனந்தபுரம் சமரின் போதும் தேவிபுரம் காட்டுப் பகுதியிலும் விடுதலைப்புலிகளின் ஆட்லறிகளை இலங்கைப் படையினர் கண்டுபிடித்திருந்தனர்.

ஆனால் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் ஒரு ஆட்லறி கூட இராணுவத்தினரின் கைகளில் சிக்கவில்லை.

இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் 2009 மே 17ம் திகதி விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்கள் பலவற்றை ஒரே இடத்தில் வைத்து அழித்திருந்தனர்.

அவ்வாறு அழிக்கப்பட்ட பல டாங்கிகள் கனரக வாகனங்கள் விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்றவற்றை தீயில் கருகிய நிலையில் இராணுவத்தினர் கண்டுபிடித்திருந்தனர்.

எனினும் அப்போது அழிக்கப்பட்ட நிலையில்கூட ஒரு ஆட்லறியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

போரின் கடைசி நாட்களில் அரசபடையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை தன்னியங்கத் துப்பாக்கிகள் இயந்திர துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் தான்.

ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் கனரக ஆயுதங்களை அரச படையினரால் பெருமளவு கைப்பற்ற முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் கணிசமானவளவு ஆயுதங்கள் இருந்ததை அரச படையினர் அழித்திருந்த போதும் கடைசிநேரத்தில் அவை எங்கே போயின, அவற்றிற்கு என்னவாயிற்று என்ற கேள்வி இருந்தே வந்தது.

2006க்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில் விடுதலைப்புலிகளின் 85 மில்லி மீற்றர் ஆடலறி - 01,  122 மில்லி மீற்றர் ஆட்லறி - 01, 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் -  08,  152 மில்லிமீற்றர் ஆட்லறிகள் - 05 என்பவற்றை மீட்டதாக பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்ட Humanitarian Operation Factual Analysis என்ற அறிக்கையில் கூறியிருந்தது.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 15 ஆட்லறிகளில் 6 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட நிலையில் அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் மீட்கப்பட்டவை.

எஞ்சியவைதான பயன்பாட்டு நிலையில் இருந்தன.

இந்தநிலையில் தான் முதன்முறையாக ஒரேநேரத்தில் விடுதலைப்புலிகளின் 5 ஆட்லறிகளை நீலம் புயல் வெளியே கொண்டுவந்துள்ளது.

2009 மே 18ம்' திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் ஆயுதங்களையும் புலிகளின் ஏனைய பொருட்களையும் சல்லடை போட்டு தேடுதல் நடத்தியிருந்தனர்.

குறிப்பிட்ட சில சதுர கிலோமீற்றர் பரப்பளவை மட்டும் கொண்ட அந்தக் குறுகிய நிலப்பரப்பில் இந்தத் தேடுதல்கள் சுமார் மூன்று ஆண்டுகள் வரை இடம்பெற்றிருந்தன.

இந்தளவு காலமும் படையினரின் கண்களில் அகப்படாத இந்த ஆட்லறிகள் புயலினால் வெளிப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு போரின் கடைசி நேரம் வரை ஆட்லறிகளை பயன்படுத்தக்கூடிய நிலை இருந்திருக்கவில்லை.

அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். அவர்களிடம் இறுதிக்கட்டத்தில் போதிய ஆட்லறி குண்டுகள் இருக்கவில்லை.

கப்பலகள் மூலம் வெளியிலிருந்து குண்டுகளை கொண்டுவரும் வசதிகள் முற்றாகவே இல்லாமல் போனதால் அவற்றைப் பயன்படுத்த முடியாத கட்டம் ஏற்பட்டது

விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய ஆயுதங்களின் பட்டியலில் கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆட்லறி குண்டுகள் மிகமிகக் குறைவு.

அதைவிட ஆனந்தபுரம் சமரின்போது விடுதலைப்புலிகளின் ஆட்லறிகள் மட்டும் படையினரிடம் சிக்கவில்லை.

ஆட்லறிகளை இயக்கும் திறமையான தளபதிகள் போராளிகள் பலரும் அந்த முற்றுகைச் சமரில் பலியாகினர். அவர்களில் பிரிகேடியர் மணிவண்ணன், கேணல் கோபால் போன்றவாகள் ஆட்லறி படைப்பிரிவைச் சோ்ந்த முக்கியமான தளபதிகள்.

அதைவிட ஆட்லறி படைப்பிரிவைக் கையாண்ட மற்றொரு தளபதியான பிரிகேடியர் பானுவும் இந்தச் சமரில் படுகாயமடைந்தார்.

போரின் இறுதி நாட்களில் ஆட்லறி குண்டு கையிருப்பு குறைந்து போனதாலும் அவற்றை இயக்கும் திறமையான போராளிகளின் பற்றாக்குறையாலும் ஆட்லறிகளை முன்னரே புலிகள் மறைத்துவிட்டதாக கருதப்படுகிறது.

அதேவேளை மோதல் சிறிய இடத்திற்குள் குறுகிப் போனபோது ஆடலறிகளை பெரிதாக பயன்படுத்த முடியாத நிலையும் புலிகளுக்கிருந்தது.

கண்ணுக்கு முன்னே நின்ற அரசபடையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அங்கே ஆட்லறிகள் தேவைப்படவில்லை.

அவற்றை குறுந்தூரத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தவும் முடியாது.

அதேவேளை பின்புலப் படைத்தளங்களை அவற்றின் மூலம் தாக்குவதாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதால் புலிகள் முன்னரே அவற்றை பாதுகாப்பாக மறைத்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

போரின் கடைசிநாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இந்த ஆட்லறிகள் புதைக்கப்பட்டிருந்தால் அவை நிச்சயம் இராணுவத்தினரின் கண்களில் சுலபமாகவே சிக்கியிருக்கும்.

அதேவேளை இந்தப் புதைப்பு நடவடிக்கையை அறிந்த புலிகள் எவரும் அரசபடையினரிடம் சிக்கவில்லைப் போலவும் உள்ளது.

அப்படி எவராவது சிக்கியிருந்தால் அவர்களிடமிருந்து இதுபற்றிய தகவல்களை படைத்தரப்பினர் விசாரணைகளின்போது கறந்திருப்பார்கள்.

சில வேளைகளில் அறிந்திருந்த ஒரு சிலர் இது பற்றி மூச்சுவிடாமல் இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எவ்வாறாயினும் இந்த ஆட்லறிகள் வெளிப்பட்டதன் மூலம் புலிகளின் ஆயுதப் புதையல்கள் இன்னமும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்தியுள்ளது.

இந்தநிலையில் விடுதலைப்புலிகளின் இந்த ஆட்லறிகள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன. இவை வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டவையா? அல்லது அரசபடையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டவையா? என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் ஆட்லறிகளை அரச படையினரிடமிருந்து கைப்பற்றிய சம்பவங்கள் ஒரு சில மட்டுந்தான்.

முல்லைத்தீவில் இரண்டு 122 மி.மீ. ஆட்லறிகள் புளுக்குணாவவில் ஒரு 85 மி.மீ. ஆட்லறி, ஆனையிறவில் மூன்று 152 மி.மீ. ஆட்லறிகள் மற்றும் இரண்டு 122 மி.மீ. ஆட்லறிகள் மொத்தம் 8 ஆட்லறிகள் தான் இராணுவத்தினரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்தனர்.

முல்லைத்தீவில் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டதையடுத்து அரச படையினர் தாக்குதல் தளத்துக்கு வெளியே வைத்து அவற்றைப் பயன்படுத்தும் விலைவாக பின்னகர்த்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

இதனால் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது படைத்தளங்கள் பல தொடர்ச்சியாக வீழ்ந்த போதிலும் ஆனையிறவைத் தவிர வேறு இடங்களில் படையினரின் ஆட்லறிகள் புலிகளிடம் சிக்கவில்லை.

ஆனையிறவில் கூட முற்றுகையிலிருந்து வெளியே கொண்டுசெல்ல முற்பட்டபோது தான் அவை புலிகளின் கையில் அகப்பட்டன.

புளுக்குணாவவில் புலிகள் கைப்பற்றிய 85 மி.மீ. ஆட்லறியை படையினர் மீளக் கைப்பற்றிவிட்டனர். ஆனால் முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் இழக்கப்பட்ட நான்கு 122 மி.மீ. ஆட்லறிகளில் ஒன்றே ஒன்றுதான் மீளக் கிடைத்துள்ளது.

மீதமுள்ள மூன்று 122 மி.மீ. ஆட்லறிகளும் எங்கே என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேவேளை இதுவரை ஒன்பது 152மி. மீ. ஆட்லறிகள் படையினரிடம் சிக்கியுள்ளன.

ஆனால் அரச படையினர் புலிகளிடம் பறிகொடுத்தது மூன்றை மட்டுந்தான்.

இதைத்தவிர 130 மி.மீ. ஆட்லறிகள் ஒன்பதும் படையினரிடம் சிக்கியுள்ளன.

இத்தகைய ஆட்லறிகளை அரசபடையினர் ஒருபோதும் விடுதலைப்புலிகளிடம் இழக்கவில்லை. இந்தநிலையில் அரச படையினர் பறிகொடுத்ததையும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டதையும் வைத்துக் கணக்குப் போட்டால் ஆட்லறிகளை வெளிநாடுகளிலிருந்தே புலிகள் இறக்குமதி செய்துள்ளனர் என்பது உறுதியாகும்.

எவ்வளவு ஆட்லறிகள் விடுதலைப்புலிகளிடம் இருந்தன என்று சரியான கணக்கு படைத்தரப்பிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான். அவ்வாறு ஒரு தரவு கிடைத்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மூன்றரை ஆண்டுகள் கழித்து ஆட்லறிகள் வெளியே கிளம்பும் நிலை ஏற்பட்டிருக்காது.

புலிகளிடமிருந்து அரச படையினர் இதுவரை கைப்பற்றியுள்ள ஆட்லறிகள் அனைத்துமே சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

ஆனால் அவற்றை சீனா நேரடியாக அவர்களுக்கு விற்கவில்லை.

சீனாவிடம் இந்த ஆட்லறிகளை புலிகள் வாங்குவதற்கு ஆபிரிக்க நாடொன்று உதவியதாக தகவல்கள் உள்ளன.

எனினும் அது தொடர்பான முழுமையான விசாரணைத் தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அதிகளவு ஆட்லறிகள் படையினரின் கைகளில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆட்லறிகள் தொடர்பான சர்ச்சையும் சந்தேகங்களும் மீளவும் வலுப்பெற்றுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகிவிட்ட போதிலும் அந்த இயக்கம் பற்றிய மர்மங்கள் பல இன்னமும் முழுமையாக வெளிவராமலே  உள்ளன.

இதனைத் தான் இந்த ஆட்லறிகள் மூலம் நீலம் புயல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

- சுபத்ரா

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்