ஈழத்தில் போரை முடிக்க செய்யப்பட்ட சதிகள்!
24 ஐப்பசி 2012 புதன் 03:08 | பார்வைகள் : 10407
உலகநாடுகளின் நேரடி ஆசீர்வாதத்துடன் களம் இறக்கப்பட்ட நோர்வே பல்வேறு விதமான விசனத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நோர்வே அரசினால் நியமிக்கப்பட்ட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சமீபத்தில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டி பல்வேறு விதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்தப் பேட்டியில் அவர், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை போராட எடுத்த முடிவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
சொல்ஹெய்ம் மேலும் கூறுகையில், “போரின் முடிவு சிறிலங்கா அரசுக்கு இராணுவ வெற்றியைக் கொடுக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவைத் தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தை நாம் முன்வைத்தோம்.
விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்தத் திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் முடிவு செய்யப்பட்டிருக்கும்…” “…சர்வதேச அமைப்புகள் உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு, வடக்கு–கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பி வைப்பதென்றும், அதில் ஐ.நா. அதிகாரிகளோ அல்லது மற்ற அனைத்துலக அமைப்பைச் சேர்ந்தவர்களோ இருந்து, எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்யப்படும்.
அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்ந்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதே அந்தத் திட்டம்" என்று கூறியிருந்தார் சொல்ஹெய்ம்.
இணைத்தலைமை நாடுகள் முன்வைத்த சரணடையும் திட்டம் சிறிலங்காவுக்குத் தெரியாதென்றும் இந்தியா அறிந்திருந்தது என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். அந்தத் திட்டத்தை முக்கிய தரப்பான சிறிலங்கா ஏற்றுக்கொள்ளுமென்றும், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தம் காரணமாக அதற்கு இணங்குவதை விட அதற்கு வேறு வழியில்லையென்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
இவருடைய கூற்றுக்கள் பல்வேறு முரண்பட்ட வினாக்களை எழுப்புவதாக உள்ளது. சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் மற்றும் சிறிலங்கா அரசுடன் இதயசுக்தியுடன் நோர்வே ஈடுபட்டு இருந்திருக்குமேயானால் பின்னர் எப்படி விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க நோர்வே போன்ற மத்தியஸ்த நாடுகள் நேரடியாக அனுமதித்திருக்க முடியும் என்கிற வினா எழுகிறது. இது போன்று பல்வேறு வினாக்களை இக்கட்டுரையின் ஊடாக அலசலாம்.
யாரைத் திருப்திப்படுத்த சொல்ஹெய்ம் முற்படுகிறார்?
யாரையோ திருப்திப்படுத்தவே சொல்ஹெய்ம் முற்படுகிறார் என்பது இவருடைய குறித்த கருத்துக்கள் மூலமாக அறியப்படுகிறது.
2001-ஆம் ஆண்டின் இறுதிக்காலத்தில் விடுதலைப்புலிகளின் தன்னிச்சையான போர் நிறுத்தம் ஊடாகவேதான் ரணில் தலைமையிலான அரசு 2002-ஆம் ஆண்டு போர் நிறுத்தம் செய்யும் சூழ்நிலை உருவானது. இதற்கு நோர்வே பக்கபலமாகச் செயற்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் இரு தரப்பினரும் செய்து கொண்டனர். சுமூகமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகத் தமிழ் மக்கள் அன்று நம்பினர்.
தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலையேதான் ரணில் அரசு அப்போது ஈடுபட்டது. குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் சுமூகமான காலநிலை ஒன்றை உருவாக்க தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ இராணுவத்தின் தொல்லைகள் அகற்றப்பட வேண்டுமென்றும், மக்கள் பொருட்களைக் கொள்முதல் செய்ய வசதியாகவும் மற்றும் தமது சுமுகமானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்தை மேற்கொள்ள இராணுவக் கெடுபிடிகளை அகற்றி, பாதைகளைத் திறந்துவிட வேண்டுமென்றும் கோரினார்கள் விடுதலைப்புலிகள். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நோர்வே தலைமையில் இடம்பெற்று இருந்தாலும் மக்களுக்கு அவசியமான தேவைகளைச் சிங்களத் தலைமை செய்ய மறுத்தது.
சமாதானப் பொட்டலம் தாம் வைத்துள்ளதாகத் தொடர்ந்தும் கூறிவந்த சிங்கள அரசு தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் அரசியல் பொட்டலம் என்னவென்று கூற மறுத்ததுடன், பேச்சுக்களை இழுத்து காலத்தை வீணடித்து விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையே செய்து வந்தது. இவைகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட அனைத்து இணைத்தலைமை நாடுகளுக்கும் தெரிந்திருந்தது என்பதனை நன்கே அறிந்து வைத்திருந்தார்கள் விடுதலைப்புலிகள். அத்துடன் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் விரித்த சதிவலைக்குள் சிக்காமல் இருந்தும் வந்தது விடுதலைப்புலிகளின் தலைமை.
எப்படியேனும் விடுதலைப்புலிகளை உடைக்க வேண்டுமென்கிற இறுமாப்புடன் செயற்பட்டது ரணில் அரசு. எப்படியோ கருணா மற்றும் பிள்ளையானை விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிக்கும் சதி வேலைகளைச் செய்து வெற்றியும் கண்டது சிங்கள அரசு. இதன் மூலமாக விடுதலைப்புலிகளின் இராணுவத் தந்திரோபாயங்களை அறியும் வேலைகளையும் செய்தது சிங்களம்.
மாறாக வலிந்த தாக்குதல் எதனையும் முன்னெடுக்காமல் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க பொறுமை காத்தனர் விடுதலைப்புலிகள். சர்வதேச நாடுகள் பல்வேறு விதமான உறுதிகளை விடுதலைப்புலிகளுக்கு அளித்தன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஈழப் போருக்கு வலுச்சேர்க்கும் முகமாக இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக ஆதரவளிப்பதென்கிற உறுதியுடன், விடுதலைப்புலிகளின் செல்வாக்குகள் குறைவடையாமல் பார்த்துக்கொள்வது என்கிற உறுதிப்பாடு வழங்கிய பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமையும் நம்பியது.
தமிழ் மக்கள் பெரும் அழிவைச் சந்திக்கக் காரணமாக இருந்தன நோர்வே மற்றும் உலக நாடுகள். பதினேழு நாடுகள் நேரடியாகச் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை மட்டுமின்றி நேரடியாகத் தமது படையணிகளையும் அனுப்பி களத்திலிருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரிட உதவிகள் செய்துள்ளன. சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியப் படைகளின் நேரடிப் பங்களிப்பு அதிகமாகவே இருந்துள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானை எதிரி நாடுகளாகவே இந்தியா பார்த்தபோதிலும், நான்காம் கட்ட ஈழப் போரில் எதிரிகளும் நண்பர்களாகி சிங்களத்துடன் கைகோர்த்து போரைச் செய்தன என்பதுதான் யாமறிந்த உண்மை. நிச்சயமாக சிறிலங்கா, இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகளைத் திருப்திப்படுத்தவே சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகள் மீது பழியைப் போடும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார்.
விடை தெரியா வினாக்கள்
சொல்ஹெய்மின் கருத்துக் குறித்து பி.பி.சியின் தமிழோசையிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் கூறுகையில், 2009-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க, நோர்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்தக் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, என்பதால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதெனவும் சொன்னார். இக்கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்த கருத்தை விடுதலைப்புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்து அதை நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டுமென்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் சரணடைந்திருந்தால் இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமென்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதைத் தவிர்த்திருக்க முடியாதென்றும் அவர் கூறினார். இலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.
ருத்ரகுமாரனின் கருத்து சொல்ஹெய்மின் கருத்துக்களுக்கு எதிர்மாறாக இருக்கிறது. இணைத்தலைமை நாடுகள் முன்வைத்த யோசனையை விடுதலைப்புலிகள்தான் ஏற்கவில்லை என்பது அப்பட்டமான பொய் என்பது ருத்ரகுமாரனின் அறிக்கை மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. எந்தவொரு செயற்பாடும் எழுத்து மூலமாகத் தான் இருக்க வேண்டும் என்பது நோர்வேயின் முக்கிய அமைச்சர் ஒருவருக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
எழுத்து மூலமாக எதுவித ஒப்பந்தங்களும் இடம்பெறாமல் இருக்கையில் குறிப்பாக இச்சம்பவம் பெப்ரவரி 2009-இல் இடம்பெற்றுள்ளது. மே நடுப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும் பெப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலேயே அதிகமான மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
சூனியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியில் தங்கலாம் என்று வாக்குறுதி கொடுத்த சிங்கள அரசு. மக்கள் அப் பகுதிகளில் தங்கியிருந்த வேளையில் குண்டுமழை பொழிந்து மக்களை அநியாயமாக கொலை செய்தது. இவைகள் அனைத்தையும் செய்மதி ஊடாகப் படம்பிடித்தன வல்லரசுகள்.
வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு சொன்ன சர்வதேச சமூகத்தின் வேண்டுதலுக்குப் பின்னர் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதும், பலர் சிறைப் பிடிக்கப்பட்டு இன்று அவர்களின் நிலையென்ன என்று தெரியாத நிலை இருப்பது நோர்வே போன்ற மத்தியஸ்த நாட்டுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
சொல்ஹெய்மின் கூற்றின்படி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் போன்றவர்களுக்குப் பொது மன்னிப்பு கிடையாதென்று பெப்ரவரியில் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு யோசனை கூறப்பட்டிருக்குமாயின், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் போன்றவர்களை களத்திலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள் விடுதலைப்புலிப் போராளிகள். பல தடவைகள் செத்து எழுந்தவர்களா சிங்கள அரசிடம் சரணடைவார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
இந்திய மற்றும் சிங்கள அரசுகளின் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளை அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பிரபாகரனா சிங்கள அரசிடம் பிடிபட்டுத் தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கும் வேலையைச் செய்திருப்பார் என்கிற வினா எழுகிறது. தோல்வியைச் சந்திக்கப் போவதாக விடுதலைப்புலிகளின் தலைமை எப்பவோ கருதியிருந்தால் எதற்காக விடுதலைப்புலிகளின் தலைமை வலிந்த இராணுவத் தாக்குதல்களை நடத்தவில்லை.
கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் பல இராணுவ நடவடிக்கைகள் மூலமாக எதிரியைப் பலமிழக்கச் செய்யும் வல்லமை படைத்த பிரபாகரனின் தலைமையில் இயங்கிய போராளிகள் எதற்காக எதிரி வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்த வேளையில் தற்காப்புப் போர் முறையை பின்பற்றி வந்தார்கள் என்கிற கேள்வி பலரிடம் எழுகிறது. இது போன்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அனைவர் மனங்களிலும் எழுந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைமையை சர்வதேச சமூகம் நன்றாகவே ஏமாற்றிவிட்டது என்பதே சொல்ஹேய்மின் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகளின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்ட நோர்வேயின் மத்தியஸ்தம் தமிழினத்தின் அழிவுக்குக் காரணமாகவும், சிங்கள அரசின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவும் இருந்துவிட்டது. பல்லாயிரம் மக்களைக் கொன்ற நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலத்தில் இடம்பெற்ற சதிவேலைகளைப்பற்றி பல்வேறு தரப்பினர் தமக்கு ஏற்றவாறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். சில ஆண்டுகள் அன்னியோன்னியமாக இரு தரப்பினருடனும் பழகிய எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் கூறும் கருத்துக்கள் தமிழ் உள்ளங்களில் வேலைப் பாய்ச்சும் செயலாக இருக்கிறது.
சிறிலங்கா மற்றும் இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட போரே பல்லாயிரம் மக்களைக் காவு கொண்டது என்பதே சொல்ஹெய்மின் கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. விடுதலைப்புலிகளின் தலைமை தற்போது செயலிழந்து இருக்கிற காரணத்தினால் எவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நீதி எப்போதோ ஒரு நாள் தலை தூக்கும். அப்போது தெரியும் உண்மை. அதுவரை தொடர்ந்தும் மௌனப் புரட்சி தொடரட்டும்.
- அனலை நிதிஸ் ச. குமாரன்