Paristamil Navigation Paristamil advert login

வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ள 85,000 சிறிலங்கா இராணுவத்தினர்

வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ள 85,000 சிறிலங்கா இராணுவத்தினர்

23 புரட்டாசி 2012 ஞாயிறு 07:58 | பார்வைகள் : 10694


சிறிலங்கா இராணுவப் பிரிவு ஒன்றில் 6000 தொடக்கம் 7000 வரையான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இதன்படி குறைந்தது 85,000-86,000 இராணுவத்தினர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளனர் என மதிப்பிட முடியும். இதில் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிரடிப் படை மற்றும் கடற்படை, விமானப்படை உள்ளடக்கப்படவில்லை.

இவ்வாறு NIRUPAMA SUBRAMANIAN சென்னையை தளமாகக் கொண்ட The Hindu  ஊடகத்தில் எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தின் 19 பிரிவுகளில் [டிவிசன்களில்] 16 பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன.

அதாவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா மூன்று பிரிவுகளும், வவுனியாவில் ஐந்து பிரிவுகளும், கிழக்கில் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் 16 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் தற்போது வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த படையினர் சிறிலங்காவின் தென்பகுதி முழுவதிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறிலங்காத் தீவு முழுவதிலும் நிறுத்தப்பட்ட இராணுவப் பிரிவுகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வரைபடத்தை Power Point விளக்கக்காட்சி மூலம் சிறிலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணம் ஒன்று இவ்வாண்டு யூன் மாதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதிலிருந்து இன்னமும் இந்த இராணுவப் பிரிவுகளிலும் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தத் தகவலை சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படை கடமையில் ஈடுபட்டபோது பணியாற்றிய இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் [ஓய்வு பெற்ற] ஆர். ஹரிகரனுடன் தொடர்புகொண்ட 'இந்து' ஊடகம் மதிப்பீடு செய்வதற்காக பகிர்ந்துகொண்டது. சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் தொகையானது யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் அதிகம் எனவும், இராணுவத் தாக்குதலுக்க தயாராக இருக்க வேண்டிய இராணுவத்தை விட இது அதிகமாக உள்ளதாக, இத் தகவலை ஆய்வு செய்த ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டு இராணுவத்தினரின்சரியான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இருந்த போதிலும், சிறிலங்கா இராணுவப் பிரிவுகளில் உள்ள இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கையை வைத்து இதனைக் கணிப்பிட்டுக் கொள்ளமுடியும்.

சிறிலங்கா இராணுவப் பிரிவு ஒன்றில் 6000 தொடக்கம் 7000 வரையான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இதன்படி குறைந்தது 85,000-86,000 இராணுவத்தினர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளனர் என மதிப்பிட முடியும். இதில் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிரடிப் படை மற்றும் கடற்படை, விமானப்படை உள்ளடக்கப்படவில்லை.

தமிழர் வாழும் பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதானது நாட்டில் மேற்கொள்ளப்படும் யுத்தத்தின் பின்னான இன மீளிணக்கப்பாட்டு முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என நோக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறிலங்காவில் இராணுவத்தினரைக் குவிப்பதற்கான உரிமை உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று பத்தாண்டுகால ஆயுதப் போரிலிருந்து மீண்டெழும் ஒரு நாடான சிறிலங்காவில் மீண்டும் ஆயுதக் குழுக்களால் வரக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குவதற்காக இராணுவத்தினரைப் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டிய தேவையுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்றுக்கான அண்மைய நேர்காணலின் போது அதிபர் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அத்துடன் டிசம்பர் 2009ல் யாழ்ப்பாணத்தில் 27,000 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஆனால் யூன் 2012ல் இந்த எண்ணிக்கையானது 15,000 ஆக குறைவடைந்ததாகவும் அதிபர் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் வட பகுதிக்கான 'அபிவிருத்தி வேலைக்கு' இராணுவப் படையினர் அத்தியாவசியமாக உள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக்கான 'அபிவிருத்தியில்' இராணுவத்தினர் பங்களிப்பதானது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

"யுத்தம் முடிவடைந்த வலயங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டுமாயின் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும். பொது நிர்வாகங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்வது என்பது வேண்டப்படாத ஒன்றாகும்" என சிறிலங்காவில் உள்ள மக்கள் செயற்பாட்டாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டியது முக்கிய பரிந்துரையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதத்தில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டது. இவ் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரையில் சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் நடமாட்டத்தை கணிசமானளவு குறைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவமானது பொது நிர்வாகத்தை விட அதிகம் அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன் பலர் சாட்சியமளித்தனர். வீதிப் புனரமைப்பு போன்ற பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பங்களிக்கின்ற போதிலும், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இவர்கள் செயற்படுவதாகவும் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

பல பத்தாண்டுகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தால் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட தனியார் காணிகள் தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் உண்மையான காணிச் சொந்தக்காரர்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றுகின்றது என்பதை மீளாய்வு செய்வதற்காக மனித உரிமைகள் பேரவையால் நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஸ்பெயின், பெனின் ஆகியன ஏனைய இரு நாடுகளாகும்.

இவ்வாண்டு நவம்பர் மாத முதல் வாரத்தில் ஜெனீவாவில் சிறிலங்கா தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்நிலையில் சிறிலங்காவானது எவ்வளவு தூரம் பேரவையின் தீர்மானத்தைக் கருத்திற் கொண்டு செயற்படுகின்றது என்பதை ஆய்வு செய்து அறிக்கையிட வேண்டிய பொறுப்பை இந்தியா கொண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் ராஜபக்ச அரசாங்கம் எவ்விதத்திலும் ஈடுபாடு காட்டாது அதனைத் தட்டிக் கழிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுடனான சிறிலங்காவின் நெருக்கம் குறைவடைந்த நிலையில், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ராஜபக்ச அரசாங்கமானது உரிய முறையில் பொறுப்பளிக்கத் தவறியதால் அதனை எதிர்த்து மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை, தமிழ்நாட்டில் சிறிலங்காவை எதிர்த்து எழுந்துள்ள எதிர்ப்பலைகள் இதன் விளைவாக தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதயாத்திரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றன இந்திய சிறிலங்கா உறவின் விரிசலுக்கு காரணமாக உள்ளன.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும் என இந்தியாவும் அழுத்தம் கொடுத்துவருகின்றது.

-புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்