Paristamil Navigation Paristamil advert login

புலிகளின் 'பேரூட் தளம்" மீது தாக்குதல்

புலிகளின் 'பேரூட் தளம்

3 புரட்டாசி 2012 திங்கள் 05:41 | பார்வைகள் : 8457


மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின் மவுன்டன் டிவிசன்( Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

குறிப்பிட்ட அந்தப் படை நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்று இந்திய இராணுவம் பெயரிட்டிருந்தது.

அப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.

புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் பேரூட் பேஸ் என்று இந்தியப் படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த “பேரூட்” பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.

பேரூட் தளம்

புலிகளின் “பேரூட் தளம்” மீதான இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்ற “பேரூட் தளம்” அல்லது “பேரூட் பேஸ் ( Beirut Base)) பற்றிப் பார்ப்பது அவசியம்.

மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் “பேரூட் தளம்” மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப் படைகள் மத்தியிலும், மற்றயை தமிழ் இயக்கங்கள் மத்தியிலும் இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.

மட்டக்களப்பில் இருந்த புலிகளின் மிகப் பெரிய தளமே “பேரூட் தளம்” என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்” பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய பேரூட் தளம் அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே “பேரூட் பேஸ் ( Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.
மட்டக்களப்பின் படுவான் கரைப்பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச் சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் “பேரூட் பேஸ்” என்று சங்கேத பாஷையில் அழைத்துவந்தார்கள்.

மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட் முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில் பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ்,தளபதி ரமணன் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் இந்த பேரூட் பேசிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன் ஒரு அங்கமாக இந்த பேரூட் பேஸ் பற்றிய மாயை மக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருந்தது.

லெபனானின் தலைநகரம்

அத்தோடு அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான பேரூட் என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால் ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.

அந்த நேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால், லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில் அதிகம் பிரபல்யமாகியிருந்தது.

இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத்தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ்ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் பேரூட் என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.

1983 ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர், உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் - குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது.

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்ததாக அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் பேரூட் என்ற பெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த பேரூட் என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது. ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த பேரூட் என்ற பெயர் அந்த நேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.

(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு பேரூட் முகாம் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு பேரூட் விடுதி என்று பெயரிட்டிருந்தார்கள். பேரூட் என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)

சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு பேரூட் பேஸ் என்று எவ்வாறு பெயர் வந்தது?
இதற்கான காரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல ஊகங்கள் இருக்கின்றன.

தொலைத்தொடர்புக் கருவி

அந்தக் காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர் சார்ந்த தொடர்பாடல் பிரதேசத்தை 1-4 அதாவது ஒவன்-போர் ( One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.

புலிகள் தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த வன்-போர் தளம் பின்னர் அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு ( Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ ( Two-Three) பேஸ் என்றும் அழைப்பார்கள்.

இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை அடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒரு பெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் அன்டனாக்களை உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்பு கொண்டுவிட முடியும்.

அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமே இருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.

80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் ( Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும் தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத் தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்திற்கான தொலைத் தொடர்புக் கருவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் ( Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர் எயிட் ( Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த போர்- எயிட்தான் கால ஓட்டத்தில் பேரூட்டாக திரவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வழக்கம்.

யாழ்பாணப் பிரதேசத்தை சிக்காக்கோ என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை கலிபோர்ணியா என்றும் அழைப்பதைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை பேரூட் என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் பேரூட் பேஸ் என்பது மட்டக்களப்பில் புலிகளின் பிரபல்யமான ஒரு முகாம் என்பதும், இந்த பேரூட் பேஸ் என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட புலிகளின் பேரூட் தளத்தைத் தாக்கி அழிக்க என்று கூறித்தான் இந்திய இராணுவத்தின் மவுன்டன் டிவிசன் ( Mountain Division) படைப்பிரிவு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்ற பெயரில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஆனால் புலிகளின் பேரூட் பேஸ் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் தரவையில் இருந்த புலிகளின் வேறொரு முகாமை நோக்கித்தான் படையெடுத்திருந்தார்கள் என்பதுதான் இங்கு முரன்நகையான விடயம்.

சோரம்போன படை நடவடிக்கை

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம், வாழைச்சேனை காகித ஆலையில் அமைக்கப்பட்டிருந்த முகாம் போன்றவற்றில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இந்தியப்படையினர் உற்சாகமாக தமது நகர்வினை ஆரம்பித்தார்கள்.

இராணுவ கவச வாகனங்கள் முன் நகர, சீக்கியப் படையினர் அணிவகுத்து நடையாகவே புலிகளின் இந்த முகாமை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். புலிகளை ஒரு வழிபண்ணிவிடும் முனைப்பு அவர்களிடம் காணப்பட்டது.

மட்டக்களப்பின் பிரதான பகுதியில் இருந்து குறிப்பிட்ட தரவைப் பிரதேசத்தை அடையவேண்டுமானால் முப்பதிற்கும் அதிகமான கிராமங்களைக் கடந்துதான் அவர்கள் சென்றாக வேண்டும்.

இந்தியப் படையினரும் அவ்வாறுதான் வீரநடைபோட்டுச் சென்றார்கள். இந்தியப் படையினர் முதலாவது கிராமத்தைக் கடந்துசெல்லும் போதே புலிகளுக்குச் செய்தி பறந்துவிட்டது. புலிகள் நிதானமாக தமது முகாமைக் காலி செய்துகொண்டு அடர்ந்த காடுகளுக்குள் தப்பிச் சென்று விட்டார்கள்.

போராளிகளைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து மக்களுடன் மக்களாகக் கலைத்தும் விட்டார்கள். சுமந்து கொண்டு செல்லமுடியாத ஆயுதங்களில் சிலவற்றையும், வெடி பொருட்களையும் கைவிட்டுச் செல்லவேண்டி ஏற்பட்டது.

நீண்ட நடைபோட்டு தரவையில் இருந்த புலிகளின் முகாமை அடைந்த இந்தியப் படையினர் அங்கு எவரையும் காணாமல் திகைப்படைந்தார்கள். மவுன்டன் டிவிசன் இலங்கையில் களம் இறக்கப்பட்டு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை இப்படிச் சோரை போவதா?

அயல் கிராமத்தில் வயல்வேலைகளில் ஈடுபட்டிருந்த சில அப்பாவிகளை முகாமிற்கு அழைத்துவந்து சுட்டுக்கொன்று, அருகில் ஆயுதங்களைப் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

முகாமில் எஞ்சியிருந்த சில வெடிபொருட்களுடன், தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்Ĩ

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்