இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங
9 ஆவணி 2012 வியாழன் 15:19 | பார்வைகள் : 9639
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe.
மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தமையானது பல்வேறு வெளிநாட்டு கொள்கை வகுப்பு வல்லுனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தியா தான் வழமையாக கடைப்பிடிக்கின்ற நிலைக்கு மாறாக, பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து, சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்திருந்தது.
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களை விமர்சிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்த்து வாக்களிப்பதில்லை என்கின்ற இந்தியாவின் வழமையான நிலைப்பாடு சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் மாற்றமடைந்துள்ளது. அத்துடன் ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் நவீன-கொலனித்துவ சக்திகள் சிறிலங்காவை எதிர்த்த போதெல்லாம் இந்தியா சிறிலங்காவிற்கு தனது ஆதரவை வழங்கியிருந்தது.
இந்நிலையில், உலக வல்லரசான அமெரிக்காவின் தலைமையில் கடந்த மார்ச் 2012ல் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததானது அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் வல்லுனர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் இந்த மாற்றமானது, இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காப் போரில் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களின் ஒளிப்படங்களை சோனியா காந்தி பார்த்த பின்னர் அவரது பிரதிபலிப்பு மாறுபட்டதாக காணப்பட்டது. இதேபோன்றே ஓகஸ்ட் 2011ல் இந்திய வெளியுறவுச் செயலராக றஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டமையும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதை காண்பிக்கின்றது.
பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தால் 'அடுத்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் அண்டை நாட்டு சவால்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலர், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக மேலோட்டமாக விளக்கியிருந்தார்.
இவரது இந்த உரையிலிருந்து மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவானது சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்தமையானது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் புதிய திசை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. சிறிலங்காவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஈரானிய எண்ணெய் கொள்வனவு மீதான ஈரானியத் தடை போன்றன இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு வருவதை உறுதிப்படுத்துகின்றன.
ஆறு மாதங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பனெற்றவால் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்வு மையத்தில் மேற்கொண்ட புதிய அமெரிக்க மூலோபாயத்தை பிரதிபலிக்கும் முகமாகவே இந்தியா தொடர்பான றஞ்சன் மத்தாயின் புதிய நோக்கு அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும், பின்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலருமான றொபேற் ஓ பிளேக், அமெரிக்காவின் இப்புதிய மூலோபாயத்தை வரைந்தவர்களில் முதன்மையானவர் எனக் கருதப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை அடுத்து, இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடன் சிறிலங்கா எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ளப் பேகின்றது என்பது தொடர்பாகவும் இவ் அணுகுறைகள் அமெரிக்காவின் நவீன கொலனித்துவ பொறிமுறையால் எவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்கப் போகின்றன என்பது தொடர்பாகவும் மத்தாயின் புதிய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாசியா நோக்கிய புதிய அமெரிக்க மற்றும் இந்தியக் கோட்பாடுகளிற்கிடையிலான தொடர்பை நோக்கும்போது, புதிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் திருப்புமுனையானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் 'மீள்சமநிலைப்படுத்தலை' ஏற்படுத்துவதாகும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பனெற்றா தெரிவித்துள்ளார். அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும், தென்னாசியாவிலும் அமெரிக்க இராணுவம் நிலைகொள்வதற்கான விரிவுபடுத்தலை இது குறிக்கின்றது.
அனைத்துலக பாதுகாப்பு மற்றும் செழுமையை பராமரிக்க உதவுகின்ற கோட்பாடுகளை உருவாக்குவதற்காகவே இந்தியாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. ஆழ்கடலில் ஏற்படும் கடற்கொள்ளை, தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்ற பாரிய ஆயுத நடவடிக்கைகளை தடுப்பதையும் நோக்காக் கொண்டு அமெரிக்காவானது இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. இந்தியாவுடனான அமெரிக்காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை நாளாந்தம் முன்னேற்றுவதற்கான திட்டத்தை பனெற்றா கொண்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தென்னாசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிற்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.
வருகின்ற பத்தாண்டுகளில், இந்திய வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய 'நண்பன்' ஒருவரை அமெரிக்கா அடையாளங் கண்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுச் செயலர் மத்தாயின் கடந்த கால பதவி நிலைகள் அமெரிக்க சார்புடையதாக காணப்படுகின்றன.
கேரளாவைச் சேர்ந்த 60 வயதான றஞ்சன் மத்தாய் பூனா பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய வெளியுறவு சேவைகளில் பல்வேறு பதவி நிலைகளை வகித்துள்ளார். இவர் மேற்குலக நாடுகளிற்கான தூதராகச் செயற்பட்டுள்ளார். 1998-2001 வரை இஸ்ரேலிற்கான இந்தியத் தூதரகவும், 2001-2005 வரை வரை கட்டார் நாட்டிற்கான தூதராகவும் பதவி வகித்துள்ளார். அத்துடன் 2005-2007 வரை பிரித்தானியாவிற்கான துணை உயர் ஆணையாளராகவும் 2007-2011 வரை பிரான்சிற்கான தூதராகவும் செயற்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொழும்பு, வோசிங்ரன், தெக்ரன், பிறசில்ஸ் போன்ற தலைநகரங்களிலும் பணிபுரிந்துள்ளார். பங்களாதேஸ், சிறிலங்கா, மியான்மார் மற்றும் மாலைதீவு போன்றவற்றுடன் தொடர்புகளைப் பேணும் இந்தியக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
றஞ்சன் மத்தாய், அமெரிக்காவின் கருத்தியலால் உந்தப்பட்டு செயற்படும் இந்திய அதிகாரியாவார். அடுத்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் அண்டை நாடுகளின் பூகோள அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவரது அடிப்படை நோக்காகும். சிறிலங்கா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு சவாலாக உள்ளன. தீவிரவாத மற்றும் நாடு கடந்த தேசியவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்க இடையில் பிளவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட அமெரிக்காவின் பரப்புரையை மாத்தேயும் செயற்படுத்துவது போல் தெரிகிறது.
இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையானது தன்னைச் சூழவுள்ள சிறிய நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு அரசியலிலும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் இந்தியாவின் வரலாற்று செல்வாக்கு மற்றும் அதன் புதிய உறவுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
திரு.மத்தாயின் வேண்டுகோளின் படி, புதிய வெளியுறவுக் கொள்கையானது பிராந்திய ரீதியாக ஆராயப்பட்டு அது தொடர்பில் பிராந்திய நாடுகளின் பின்னூட்டல்கள் பெறப்படவேண்டும். இந்தியாவின் நலனையும், பிராந்தியத்தின் சிறப்பையும் பேணக்கூடியவாறு இந்தியாவின் பாரம்பரிய வன்முறையற்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
பொருளாதார சுரண்டல், ஆயுத உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவின் கோட்பாட்டைத் தழுவியதாகவே இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோட்பாடானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வரவேற்பைப் பெறாத ஒன்றாக காணப்படும். சிறிலங்காவானது தனது நாட்டின் நலன் இப்புதிய வெளியுறவுக் கொள்கை மூலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து இதற்கெதிராக தனது எதிர்ப்பை மிக வலுவாக முன்வைக்க வேண்டிய தேவையுள்ளது.
- புதினபலகை